டேரன் பிராவோ அபார சதம்; தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றியது மே.இ.தீவுகள்

By இரா.முத்துக்குமார்

தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் ஒரு முறை தனது ‘சோக்கர்ஸ்’ என்ற அடையாளத்தை உறுதி செய்தது. மே.இ.தீவுகளுக்கு எதிராக தோல்வியடைந்து இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை நழுவவிட்டது.

பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் கடைசி லீக் போட்டியில் போனஸ் புள்ளிகளுடன் வெற்றி பெற்று மே.இ.தீவுகள் ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் சந்திக்கிறது.

டாஸ் வென்ற டிவில்லியர்ஸ் முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைத்தார், ஆனால் ரபாதாவின் மிக அருமையான தொடக்க யார்க்கர் பந்து வீச்சில் மே.இ.தீவுகள் 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்களை எடுத்து தடுமாறியது அந்த நிலையிலிருந்து ஜோடி சேர்ந்த டேரன் பிராவோ (102), கெய்ரன் பொலார்ட் (62) ஆகியோர் கொண்டு செல்ல, ஜேசன் ஹோல்டர் (40) பிராத்வெய்ட் (33) ஆகியோர் நன்றாக ஆடி அணியின் ஸ்கோரை 285 ரன்களுக்கு உயர்த்தினர்.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 46 ஓவர்களில் 185 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 12 புள்ளிகளில் இருந்த தென் ஆப்பிரிக்கா போனஸ் புள்ளியுடன் மே.இ.தீவுகள் வெற்றி பெற அனுமதித்ததால் வெளியேறியது. 8 புள்ளிகளில் இருந்த மே.இ.தீவுகள் 13 புள்ளிகளுடன் இறுதிக்கு முன்னேறியது.

5-வது விக்கெட்டுக்காக பிராவோ, பொலார்ட் இணைந்து 156 ரன்களைச் சேர்த்தது ஆட்டத்தில் திருப்பு முனை ஏற்படுத்தியது. ஆந்த்ரே பிளெட்சரை வெய்ன் பார்னெல் விக்கெட் கீப்பர் கேட்சில் வீழ்த்திய பிறகு ரபாதா புகுந்தார். சார்லஸை ஒரு அபாரமான எழும்பிய அவுட் ஸ்விங்கரில் ஸ்லிப் கேட்சில் வீழ்த்திய ரபாதா அடுத்த பந்திலேயே அபாய வீரர் மர்லன் சாமுவேல்ஸுக்கு ஒரு விளையாட முடியாத யார்க்கரை வீசி பவுல்டு செய்தார், அதாவது பந்தை பார்க்கும் முன்னரே என்ன ஆனது என்று சாமுவேல்ஸுக்குத் தெரியவில்லை, நேராக பந்தை ஆஃப் ஸ்டம்பின் அடிப்பகுதியில் வீசியது போன்ற ஒரு யார்க்கர், விளையாடவே முடியாத யார்க்கர். ஹாட்ரிக் வாய்ப்பு பந்தை வெளியே வீசினார் ரபாதா.

ஆனால் அவரது அடுத்த ஓவரில் பவுன்சர் ஒன்றை வீசி தினேஷ் ராம்தின் தோள்பட்டையைப் பதம் பார்த்த ரபாதா, அடுத்த பந்தை ஃபுல் லெந்தில் அதாவது முக்கால் யார்க்கர் கால் ஓவர்பிட்ச் லெந்தில் வீச பிளிக் செய்ய முயன்று ராம்தின் பவுல்டு ஆனார். இம்முறை மிடில் ஸ்டம்ப் படுத்தது.

இந்நிலையில் டேரன் பிராவோ, கெய்ரன் பொலார்ட் ஒன்று சேர்ந்தனர், வெய்ன் பார்னெல், பொலார்டை எல்.பி. செய்யுமாறு வீசினார், பலனளிக்கவில்லை. ஆனால் 11 ரன்களில் இருந்த டேரன் பிராவோ மோர்னி மோர்கெல் பந்தை டாப் எட்ஜ் செய்ய பந்தை பிடிக்கும் முயற்சியில் சிக்ஸுக்கு தட்டி விட்டார் பார்னெல். உடனடியாக மழை வர 20 நிமிடம் இடைவேளை கிடைத்தது, இது தென் ஆப்பிரிக்காவின் உத்வேகத்தை கெடுத்தது, மாறாக டேரன் பிராவோ, பொலார்ட் செட்டில் ஆயினர். கிறிஸ் மோரிஸ், மோர்கெல் பந்துகளை பொலார்ட் பதம் பார்த்தார், இம்ரான் தாஹிரை டேரன் பிராவோ உறுதியுடன் ஆடினார். இதனால் தாஹிர் இந்தத் தொடரில் முதல் முறையாக விக்கெட் எடுக்க முடியாமல் முடிந்தார். இருவரும் ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் அடித்தனர், டிவில்லியர்ஸ் அடிக்கடி பந்து வீச்சில் மாற்றம் செய்து பார்த்தார். நோபால்-வைடுகளில் 19 ரன்கள் வரும் அளவுக்கு பந்துவீச்சு தடம் புரண்டது. பொலார்ட் 71 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்து டுபிளெசிஸின் நல்ல கேட்சுக்கு மோர்கெல்லிடம் அவுட் ஆனார்.

பொலார்ட் அவுட் ஆகும் போது பிராவோ அவரது 80களில் இருந்தார். அதன் பிறகு அவர் தனது 3-வது ஒருநாள் சதம் கண்டார். 103 பந்துகளில் 12 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 102 ரன்கள் எடுத்து 37-வது ஓவரில் மோரிஸிடம் அவுட் ஆனார். ஆனால் ஸ்கோர் 210 என்றுதான் இருந்தது. இன்னும் 14 ஒவர்கள் மீதமிருந்தன.

ஜேசன் ஹோல்டர் முதல் ரன்னை எடுக்க 17 பந்துகள் எடுத்துக் கொண்டாலும் கடைசியில் 46 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 40 ரன்களையும், பிராத்வெய்ட் 42 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 33 ரன்களையும் எடுக்க தென் ஆப்பிரிக்காவின் எக்ஸ்ட்ரா 24 ரன்களையும் சேர்த்து 21/4 லிருந்து மே.இ.தீவுகள் அபாரமான முறையில் 285 ரன்கள் எடுத்தது.

உத்வேகம், திட்டமிடுதல் இல்லாத ‘சவசவ’ தென் ஆப்பிரிக்கா பேட்டிங்:

286 ரன்கள் வெற்றி இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கில் எந்தவித உந்துதலும் இல்லை. கேட்ச்கள் விடப்பட்டும் அந்த அணி 65/6 என்று ஒன்றும் செய்ய முடியாத நிலைக்குச் சென்றது.

ஹஷிம் ஆம்லா வந்தவுடனேயே அவுட் ஆகியிருக்க வேண்டியது, காப்ரியேல் வீசிய அவுட் ஸ்விங்கரை துரத்தி கேட்ச் கொடுத்தார், ஆனால் தினேஷ் ராம்தின் கேட்சை கோட்டை விட்டார். ஆனால் 2 ஓவர்கள் கழித்து குவிண்டன் டி காக்கிற்கு அருமையான ஒரு கை கேட்சை எடுத்து ராம்தின் ஈடு செய்தார்.

டுபிளெசிஸ் ரிஸ்க் சிங்கிளில் ரன் அவுட் ஆகியிருப்பார் ஆனால் பிளெட்சர் பாயிண்டிலிருந்து அடித்த நேரடி ‘ஹிட்’ முயற்சி ஸ்டம்பை தவற விட்டது. ஆனால் காப்ரியேல், பிளெஸிசை நிற்க விடவில்லை அருமையான ஆஃப் கட்டர் ஒன்றை வீசி எல்.பி.செய்தார், டுபிளெசிஸின் ரிவியூ பயனற்று போனது. அதேபோல் காப்ரியேல் வீசிய சற்றே விலகிச் சென்ற பந்தை டிவில்லியர்ஸும் தேவையில்லாமல் ஆடி ராம்தின்னிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்களில் வெளியேறினார். இந்தத் தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் டிவில்லியர்ஸ் தடுமாறியது உறுதியானது. சுனில் நரைன், ஆம்லாவை நேராக எல்.பி.செய்ய 35/4 என்று ஆனது.

ஜே.பி.டுமினியை ஹோல்டரும், கிறிஸ் மோரிசை நரைனும் வீழ்த்த 65/6 என்று 18வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா பரிதாபமானது. பிஹார்டியனுக்கு காப்ரியேல் எளிதான கேட்ச் வாய்ப்பை கோட்டை விட அவர் 35 ரன்களை எடுத்தார். கடைசியில் பார்னெல் (28), மோர்கெல் (32 நாட் அவுட்), இம்ரான் தாஹிர் (29, 7 பவுண்டரிகள்) ஆகியோர் மே.இ.தீவுகளை வெறுப்பேற்றினர் ஆனால் வெற்றியை தடுக்க முடியவில்லை. 185 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா சுருண்டது.

ஆட்ட நாயகனாக டேரன் பிராவோ தேர்வு செய்யப்பட்டார், மே.இ.தீவுகள் தரப்பில் காப்ரியேல் 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சுனில் நரைன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற பிராத்வெய்ட் 2 விக்கெட்டுகளையும் ஹோல்டர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். ரபாதா ரன் அவுட் ஆனார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்