கடந்த அக்டோபர் 30-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஒருநாள் போட்டி விதிகளின்படி, பவர் ப்ளே அல்லாத ஓவர்களில் 4 வீரர்கள் மட்டும்தான் ஆடுகளத்தின் வெளி வட்டத்தில் நிற்க முடியும்.
இந்த விதிமுறையின் காரணமாகவே, எல்லா பவுலர்களின் பந்துவீச்சும் பேட்ஸ்மேன்களால் விளாசப்படுகிறது என்றும், இதனால் பவுலர்களுக்குப் பெரும் பின்னடைவு ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒருநாள் போட்டிகளில் மிகப் பெரிய ஸ்கோர்களை சேஸ் செய்வது என்பது ஆரோக்கியமான போக்கு அல்ல என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட கோலி, தவண் உள்ளிட்டோரை தோனி வெகுவாக பாராட்டினார்.
கோலி அதிரடி சதம்; ஆஸிக்கு இந்தியா பதிலடி
முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 6-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை இந்தியா தக்கவைத்துக் கொண்டுள்ளது.
நாக்பூரில் புதன்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்யவே, பில் ஹியூஸும், ஆரோன் பிஞ்சும் ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை தொடங்கினர்.
புவனேஸ்வர் குமார் வீசிய 7-வது ஓவரில் பில் ஹியூஸ் (13 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதையடுத்து வாட்சன் களம்புகுந்தார். ஆஸ்திரேலியா 45 ரன்களை எட்டியபோது அஸ்வின் பந்துவீச்சில் ஆரோன் பிஞ்ச் (20 ரன்கள்) போல்டு ஆனார். இதையடுத்து வாட்சனுடன் இணைந்தார் கேப்டன் பெய்லி.
இந்த ஜோடி நிதானமாக விளையாடவே, முதல் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலியா. 63 பந்துகளில் அரைசதம் கண்ட வாட்சன், ஜடேஜா, மிஸ்ரா ஓவர்களில் தலா ஒரு சிக்ஸரை விளாசினார்.
வாட்சன் 15-வது சதம்...
50 பந்துகளில் அரைசதம் கண்ட பெய்லி, பின்னர் அதிரடியாக விளையாடி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை பதம்பார்த்தார். அவருக்கு நிகராக விளையாடிய வாட்சன், முகமது சமி பந்துவீச்சில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி, 93 பந்துகளில் சதமடித்தார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 15-வது சதம் இது. சதமடித்த அடுத்த பந்திலேயே வாட்சன் ஆட்டமிழந்தார். 94 பந்துகளைச் சந்தித்த அவர் 3 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் குவித்தார்.
வாட்சன்-பெய்லி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 23.3 ஓவர்களில் 168 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 3-வது விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய ஜோடி எடுத்த 2-வது அதிகபட்ச ரன் இது.
பெய்லி சதம்...
பின்னர் வந்த மேக்ஸ்வெல், 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து பெய்லியுடன் இணைந்தார் ஆடம் வோஜஸ். தொடர்ந்து வேகமாக விளையாடிய பெய்லி, 84 பந்துகளில் சதமடித்தார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 2-வது சதம் இது.
இதன்பிறகு இந்திய பௌலர்களை வெளுத்து வாங்கிய பெய்லி, 109 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். அவர் 114 பந்துகளில் 6 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 156 ரன்கள் குவித்தார். பெய்லி-வோஜஸ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 13.2 ஓவர்களில் 120 ரன்கள் சேர்த்தது. வோஜஸ் 38 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் சேர்க்க, ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி கடைசி 15 ஓவர்களில் 137 ரன்கள் சேர்த்தது.
இந்தியா பதிலடி...
351 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா-ஷிகர் தவண் ஜோடி வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தியது. ஷிகர் தவண் 19 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச்சை மேக்ஸ்வெல் (ஃபாக்னர் பந்துவீச்சில்) கோட்டைவிட்டார். இதனால் வாழ்வு பெற்ற தவண், 50 பந்துகளில் அரைசதம் கண்டார்.
இந்தியா 19 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. தவண்-ரோஹித் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்ப்பது 5-வது முறையாகும். இதனிடையே ரோஹித் சர்மா 72 பந்துகளில் அரைசதம் கண்டார். இதன்பிறகு அதிரடியாக ஆடிய ரோஹித், பிஞ்ச் ஓவரில் ஒரு சிக்ஸரையும், மேக்ஸ்வெல் ஓவரில் இரு சிக்ஸரையும் விளாசினார். மீண்டும் பிஞ்ச் பந்துவீசியபோது அதில் சிக்ஸர் அடிக்க முயன்ற ரோஹித், டீப் மிட்விக்கெட் திசையில் ஃபாக்னரால் அற்புதமாகக் கேட்ச் செய்யப்பட்டார்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 29.3 ஓவர்களில் 178 ரன்கள் சேர்த்தது. ரோஹித் சர்மா 89 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்தார். ரோஹித்தும் தவணும் இணைந்து இந்த ஆண்டில் 1000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.
ஷிகர் தவண் 4-வது சதம்...
இதையடுத்து விராட் கோலி களம்புகுந்தார். வந்தது முதலே அவர் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய ஷிகர் தவண் 100 பந்துகளில் சதமடித்தார். ஒருநாள் போட்டியில் தவண் அடித்த 4-வது சதம் இது. 102 பந்துகளைச் சந்தித்த அவர் 11 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய கோலி, ஃபாக்னர் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி 27-வது அரை சதத்தைப் (31 பந்துகளில்) பூர்த்தி செய்தார்.
கோலி 17-வது சதம்...
இதன்பிறகு ரெய்னா 16 ரன்களிலும், யுவராஜ் சிங் ரன் ஏதுமின்றியும் வெளியேற, கேப்டன் தோனி களம்புகுந்தார். கடைசி 7 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டன. ஒருமுனையில் கோலி வேகமாக விளையாடியபோதும் மறுமுனையில் தோனி தடுமாறியதால், நெருக்கடி ஏற்பட்டது.
கடைசி 3 ஓவர்களில் 35 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஃபாக்னர் வீசிய 48-வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய கோலி 61 பந்துகளில் சதம் கண்டார். இது அவருடைய 17-வது சதமாகும்.
பரபரப்பு...
கடைசி 2 ஓவர்களில் 20 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாட்சன் வீசிய 19-வது ஓவரில் கோலி இரு பவுண்டரிகளை விளாச, அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தன. இறுதியில் இந்தியா 49.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி கண்டது.
விராட் கோலி 66 பந்துகளில் 1 சிக்ஸர், 18 பவுண்டரிகளுடன் 115, தோனி 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை இந்தியா தக்கவைத்துக் கொண்டுள்ளது.
7 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இதுவரை 6 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
ஜார்ஜ் பெய்லி சாதனை...
இதுவரை இந்தத் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பெய்லி ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 474 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதேபோல் இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற பெருமையும் பெய்லியின் வசமானது.