மகேந்திர சிங் தோனி தலைமைப் பொறுப்பை ஏற்றபோது இந்திய கிரிக்கெட் நெருக்கடியில் இருந்தது. 2007 உலகக் கோப்பையில் படுதோல்வி பெற்றிருந்த இந்திய அணி அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டுவந்த நிலையில் தோனி பொறுப்பேற்றார். உலகக் கோப்பைக்குப் பின்னரும் ராகுல் திராவிடே தலைவராக நீடித்தாலும் 2007-ல் நடைபெற்ற டி-20 உலகக் கோப்பைப் போட்டிக்கான தலைவர் யார் என்பது பெரும் கேள்விக்குறியாக எழுந்தது. சச்சின் டெண்டுல்கர், திராவிட், சவுரவ் கங்கூலி ஆகிய மூவரும் இதில் ஆடப்போவதில்லை என்று சொல்லிவிட்ட நிலையில் இந்தப் பிரச்சினை பெரிதாக உருவெடுத்தது. திராவிடிடமும் சச்சினிடமும் இது குறித்துத் தனித்தனியே கருத்து கேட்கப்பட்டது. இருவரும் சொன்ன ஒரே பெயர் தோனி.
யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் ஆகிய மூத்த வீரர்கள், தங்கள் திறனைச் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்திருந்தார்கள். என்றாலும் இந்தியாவின் இரு பெரும் மட்டையாளர்கள் இளம் வீரர் தோனியைச் சிபாரிசு செய்தார்கள் என்றால் அந்த வயதிலேயே தோனியிடம் வெளிப்பட்ட தலைமைப் பண்புதான் அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். இந்தச் சிபாரிசு சரியானது என்பதை தோனி நிரூபித்தார். காலமும் நிரூபித்தது. ஐ.பி.எல். போட்டிகளில் ஒரே சமயத்தில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், தோனி ஆகியோர் தலைவர்களாக இருந்தபோது அவர்களுடைய தலைமைப் பண்புகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்பைக் காலம் வழங்கியது. இவர்களில் யார் சிறந்த தலைவராக உருவெடுத்தார் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
புதிய தலைமை புதிய பயணம்
உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய அவமானம் என்னும் சிக்கலான காலகட்டத்தில் இருந்த இந்திய அணி, தோனியின் தலைமையில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்துத் தலை நிமிர ஆரம்பித்தது. 2007 டி-20 உலகக் கோப்பைப் போட்டியில் தொடங்கிய அந்த வெற்றி ஒருநாள் போட்டிகளுக்கான 2011 உலகக் கோப்பை வெற்றியில் உச்சம் தொட்டது. இன்னொரு புறம் டெஸ்ட் அரங்கில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்தது. 2012-ல் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியிலும் அணி வெற்றி வாகை சூடியது.
அணி விளையாட்டுகளில் வெற்றி, தோல்வியை முறையே ஒரு தலைவரின் தோள்களின் மீது மாலையாக அல்லது பாறாங்கல்லாக மாற்றிவிடுவது முறையல்ல. அணி எந்த அளவுக்கு நன்றாக இருக்கிறதோ அந்த அளவே தலைவரும் நல்ல தலைவராக அடையாளம் காணப்படுவார் என்று சொல்லப்படுவது ஆழ்ந்த பொருள் கொண்டது. தோனியின் அணிகளில் மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் சிறப்பாகவும் ஆடினார்கள். சச்சின், திராவிட், சேவாக், ஹர்பஜன், யுவராஜ், காம்பீர், ஜாகீர் கான் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார்கள். எனினும், தோனியின் தலைமைப் பண்புகள் வெற்றி, தோல்விகளைத் தாண்டியும் பிரகாசிப்பவை.
தோனியின் தனித்தன்மை
வெற்றி, தோல்வியை மட்டும் வைத்து ஒருவரது தலைமைப் பண்பை மதிப்பிட்டுவிடக் கூடாது. 2007 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் இறுதி ஓவரை ஜோகீந்தர் சிங்கை வீசச்செய்தது, 2011 இறுதிப் போட்டியில் யுவராஜுக்கு முன்பு களம் இறங்கியது, 2012 இறுதிப் போட்டியில் சேவாகை நீக்கிவிட்டு ரோஹித் ஷர்மாவை நம்பியது ஆகிய முடிவுகள் தோனியின் தலைமைச் சிறப்பின் அடையாளங்களாக முன்னிறுத்தப்படுகின்றன. ஆனால், இந்த மூன்று முடிவுகளுமே வெற்றிபெற்றதால்தான் பாராட்டப்படுகின்றன. ஆட்டத்தில் எந்த உத்தியும் வெற்றிக்கு உத்தரவாதமானதல்ல. ஜோகீந்தரின் பந்தை மிஸ்பா உல் ஹக் ஆடிய விதம் மிகவும் தவறானது.
அவர் வேறு மாதிரி ஆடியிருந்தால் முடிவும் வேறு மாதிரி ஆகியிருக்கலாம். அதுபோலவே யுவரா சிறந்த ஃபார்மில் இருந்தபோது, முத்தையா முரளிதரனின் பந்தைத் தன்னால் யுவராஜைக் காட்டிலும் நன்றாக எதிர்கொள்ள முடியும் என்ற கணக்கில் யுவராஜுக்கு முன்னால் இறங்கிய முடிவும் வெற்றிபெற்றதாலேயே பாராட்டப்படுகிறது. எந்த ஒரு மட்டையாளரும் எதிர்பாராத விதத்தில் ஆட்டமிழந்துவிடலாம். தோனிக்கும் அது நடந்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால் அதனாலேயே அந்த முடிவு தவறு என்று ஆகிவிடாது.
தோனி எடுத்து துணிச்சலான சில முடிவுகள் வெற்றிதேடித் தந்ததால் அதிகம் நினைவுகூரப்படுகின்றன. அவர் எடுத்த முடிவுகள் வெற்றி தேடித் தராதபோது அதிகம் விமர்சிக்கப்பட்டன. இவை இரண்டுமே பிழையான அணுகுமுறை. கடைசியில் என்ன நடந்தது எனபதை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு செயல்பாட்டை எடைபோட முடியாது. எனில், தோனியின் முக்கியத்துவம் எதில் இருக்கிறது என்னும் கேள்வி எழுகிறது.
தோனி வித்தியாசமாகச் சிந்திக்கிறார். ஒரு நெருக்கடிக்கு ஆகிவந்த தீர்வுகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல் புதிய தீர்வுகளை அவர் மனம் எப்போதும் நாடுகிறது. இந்த அணுகுமுறைதான் அவரது சிறப்பு. தான் எடுத்த முடிவு எதிர்பார்த்த பலனைத் தந்தபோதும் தராதபோதும் அவர் நிதானம் தவறுவதில்லை. சறுக்கல்களையும் மீறிப் பரிசோதனை செய்துகொண்டே இருந்தார்.
பதறாத மனமும் பக்குவமும்
நெருக்கடிகளின்போது பதற்றத்துக்கு ஆளாகும் தலைவர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். சிறப்பான அணியை வைத்துக்கொண்டு தொடர்ந்து வெற்றிபெற்றுக்கொண்டிருந்த ஸ்டீவ் வா, ரிக்கி பான்டிங் ஆகியோரும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், அந்த அளவுக்கு வலுவான அணி இல்லாத நிலையிலும் தோனி பொதுவாகப் பதற்றமடைந்ததில்லை. நம்பிக்கையை இழந்ததில்லை.
தன்னை விடவும் பல ஆண்டுக்கால அனுபவம் வாய்ந்தவர்களுக்குத் தலைமை தாங்கும் பக்குவம் தோனிக்கு இருந்தது. மூத்தோருக்கான மரியாதையை வழங்குவதில் குறை வைக்காத அவர், களத்தில் முடிவுகளை எடுக்கவும் தயங்கியதில்லை. அவரது இடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால் சச்சின், திராவிட் போன்ற யாரேனும் நிழல் தலைவராகச் செயல்படும் நிலை வந்திருக்கலாம். ஆனால், தோனி, ஒவ்வொரு கட்டத்திலும் தானே தலைவன் என்பதைக் காட்டினார். அதே சமயம் அடக்கமாகவும் நடந்துகொண்டார். ஆஸ்திரேலியாவில் 2007-08-ல் நடந்த முத்தரப்புப் போட்டியின்போது, தொடர்ந்து மூன்று போட்டிகளில் சச்சின் சரியாக விளையாடாதபோது அவரைப் பற்றி தோனியிடம் கேட்கப்பட்டது. “அவர் 16000 ரன் அடித்திருக்கிறார். நான் இன்னமும் 16000 பந்துகளைக்கூட எதிர்கொண்டதில்லை” என்றார் தோனி. அடுத்த ஆட்டங்களில் சச்சின் ஆடிய ஆட்டம்தான் கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்தது.
அணியிலிருந்து மூத்த வீரர்கள் சிலர் அதிரடியாக நீக்கப்பட்டது குறித்த சர்ச்சை இன்றளவிலும்பேசப்படுகிறது. அதில் தோனிக்கு இருந்திருக்கக்கூடிய பங்கை மறுக்க முடியாது. அதே சமயம், பழைய சாதனைகளைப் பாதுகாப்புக் கவசமாக யாரும் கொள்ள முடியாது என்பதையும் உணர்த்த வேண்டியபொறுப்பு அணித் தலைமைக்கு உண்டு. மூத்த வீரர்களின் ஆட்டத் திறனும், உடல் திறனும் குறைந்துவந்தாலும் அவர்களது சாதனைகளால் ரசிகர்களின் மனதில் அவர்களுக்கு நீங்காத இடம் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்னும் அணுகுமுறையில் இத்தகைய சலுகைகளுக்கு ஒரு அளவுக்கு மேல் இடமிருக்க முடியாது. தவிர, முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாமல் தலைவராக இருப்பதில் என்ன பொருள் இருக்கிறது?
அணி வெற்றி பெறும்போது ஆனந்தக் கூத்தாடுவது, தோற்கும்போது உலகமே கைவிட்டுப்போனதுபோல நடந்துகொள்வது ஆகிய இரண்டும் தோனியிடம் கிடையாது. வெற்றி, தோல்வி இரண்டையும் கிட்டத்தட்டச் சமமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் அவருக்கு இருக்கிறது. வெற்றிக்கான பெருமையைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் பெருந்தன்மையும் தோல்வியின்போது பழையைப் பிறர் மீது போடாத குணமும் இருக்கின்றன. வெற்றிக் கொண்டாட்டங்களின்போது தோனி அனேகமாகச் சற்று ஒதுங்கியே இருப்பார். தோல்வியின்போது முன்னால் வந்து நிற்பார்.
தோனியின் போதாமைகள்
தோனியின் தலைமை குறைகள் அற்றதல்ல. டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் விழாத நிலையில் அவர் அதீதமான தற்காப்பு வியூகத்துக்குள் சென்றுவிடுவார். பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தும் விதத்தில் பல முறை அவரது முடிவுகள் கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றன. ஒரு நாள் போட்டிகளில் செய்ததுபோல டெஸ்ட் போட்டிகளில் அவர் மட்டை தீர்மானமாகப் பேசியது மிகவும் அரிது. 20 ஓவர் போட்டிகளில் சில சமயம் மட்டையாளர்களைக் களமிறக்கிய விதம் கேள்விக்குள்ளானது. மட்டை வீச்சிலோ பந்து வீச்சிலோ யாரையும் மெருகேற்ற அவர் பெரிதாக எந்தப் பங்களிப்பையும் ஆற்றியதாகத் தெரியவில்லை.
தோனிக்குத் தன்னுடைய வரையறைகள் தெரியும். குறிப்பாக மட்டை வீச்சில். எனவே எப்போது, எங்கே தன்னுடைய ஆட்டத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் மிகவும் துல்லியமாகச் செயல்படுவார். அதனால்தான் 2011-ல் செய்த சாகசத்தைப் போல அடிக்கடி அவர் செய்வதில்லை. சூழ்நிலைக்குத் தகுந்த உத்தி என்பதுதான் அவரது தாரக மந்திரம். இதில் தனிநபர்கள் – அவர் உள்பட – முக்கியமில்லை. இதுவே அவரது அணுகுமுறை. இந்த அணுகுமுறை ஆட்டத்தின் போக்கை அடியொற்றி இருக்கும். ஆளுமைகளை அல்ல. டெஸ்ட் போட்டியிலிருந்து விலகும் முடிவையும் ஆட்டத்தின் குறு வடிவங்களுக்கான அணிகளின் தலைமைப் பொறுப்பைத் துறக்கும் முடிவையும் மிகச் சரியான நேரத்தில் அவர் எடுத்திருப்தைக் கவனிக்க வேண்டும். தன்னுடைய நிலையையும் அணியின் நிலையையும் ஆட்டத்தின் போக்கையும் காலத்தின் கட்டளையையும் நன்கு உணர்ந்த ஒருவராலேயே இவ்வளவு துல்லியமாக இத்தகைய முடிவுகளை எடுக்க முடியும்.
பதறாத பாங்கு, வித்தியாசமான, துணிச்சலான முடிவுகள், பொறுப்பேற்கும் தன்மை, சூழலுக்கேற்ற உத்திகள், ஆகியவற்றை தோனியின் தலைமைப் பண்பின் முத்திரைகளாகச் சொல்லலாம். இந்தியா கண்ட சிறந்த தலைவர் யார் என்பதற்கான விவாதம் அவ்வளவு எளிதில் முடிந்துவிடக்கூடியதல்ல. இந்தக் களத்தில் டைகர் நவாப் கான் பட்டோடி, கபில்தேவ், சவுரவ் கங்கூலி ஆகியோர் தோனிக்கும் பலத்த போட்டியாளர்களாக இருப்பார்கள். ஆனால், தோனியின் தலைமை இவர்கள் அனைவரைக் காட்டிலும் வசீகரம் மிக்கது. காரணம், அதில் வியப்புகளுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லை. தோனியின் நிதானமும் அவரைத் தனித்துக் காட்டுகிறது. “அவர் பதறாதவர். ஆட்டத்தைப் பற்றிச் சிந்திப்பவர்” என்று 2007-ல் அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவாரிடம் சச்சின் சொன்னார். சச்சினின் வாக்கை தோனியின் செயல்பாடுகள் மெய்ப்பித்திருக்கின்றன.
அண்மையில் இந்தியா 500-வது டெஸ்ட் போட்டியை ஆடியபோது பலரும் இந்தியாவின் கனவு அணியைத் தேர்ந்தெடுத்தார்கள். இதில் பெரும்பாலான நிபுணர்கள் தோனியைக் கனவு அணியின் தலைவராக மகுடம் சூட்டினார்கள். தோனி என்னும் தலைவரின் தகுதியைப் பறைசாற்ற இது ஒன்றே போதுமானது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago