பிசிசிஐ மற்றும் அதன் உறுப்பினர்களும் லோதா கமிட்டி சீர்த்திருத்தங்களுக்கு உடன்படவில்லையெனில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இது தொடர்பாக 24 மணிநேரத்திற்குள் மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ பணப்பட்டுவாடா செய்யக்கூடாது என்று உத்தரவிடுவோம் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது உச்ச நீதீமன்றம்.
மேலும் செப்டம்பர் 30-ம் தேதி பிசிசிஐ சிறப்புக் கூட்டத்தில் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அளித்த ரூ.400 கோடியையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் உத்தரவிடுவோம் என்றும் கூறியுள்ளது.
பிசிசிஐ-யின் நடப்பு நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகக் குழுவை அமைப்பதற்கான நீதிபதி லோதா கமிட்டியின் மனுவை விசாரித்த நீதிமன்றம் பிசிசிஐ-யின் பிடிவாதப்போக்கை கடுமையாகக் கண்டித்தது.
தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், அக்டோபர் 7-ம் தேதிக்குள் லோதா கமிட்டி சீர்த்திருத்தப் பரிந்துரைகளை ‘நிபந்தனைகளின்றி’ நடைமுறைப் படுத்த உறுதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
“நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? நாங்கள் நாளையே உத்தரவுகளைப் பிறப்பிக்கவா அல்லது லோதா கமிட்டி சீர்த்திருத்தங்களுக்கு நிபந்தனைகளின்றி உடன்படுவதாக எங்களுக்கு சமர்ப்பிக்கப் போகிறீர்களா?” தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் பிசிசிஐ-யை எச்சரித்தார்.
இதற்குப் பதில் அளித்த பிசிசிஐ சார்பு வழக்கறிஞர் கபில் சிபல், “இது சாத்தியமேயல்ல. அதாவது அடுத்த சில மணிநேரங்களுக்குள் அனைத்து மாநில கிரிக்கெட் வாரியங்களும் உடன்படுமாறு வலியுறுத்துவது சாத்தியமல்ல” என்றார்.
உறுப்பு கிரிக்கெட் வாரியங்களை லோதா கமிட்டி பரிந்துரைகளுக்கு உடன்படுமாறு பிசிசிஐ வலியுறுத்த முடியாது, ஏனெனில் அவை தன்னிச்சையாகச் செயல்படக்கூடியது என்று கபில் சிபல் மேலும் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி தாக்குர், “மாநில கிரிக்கெட் சங்கங்கள் சீர்த்திருத்தங்களுக்கு உடன்படவில்லையெனில் ஏன் தொடர்ந்து அவைகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். அவர்கள் சீர்த்திருத்தங்களுக்கு மறுக்கும் போதும் நீங்கள் கோடிக்கணக்கில் பணத்தை அளித்து வருகிறீர்கள்” என்று கேட்டார்.
லோதா கமிட்டி தடை போட்டிருந்தும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு ரூ.400 கோடி பணம் பட்டுவாடா செய்தது எப்படி என்ற கேள்வி எழுந்ததையடுத்து நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
“எங்களுக்கு பணம் கொடுங்கள், ஆனால் நாங்கள் சீர்த்திருத்தங்களுக்கு உடன்பட மாட்டோம் என்று அவர்கள் கூற முடியாது. உங்களிடமிருந்து பணம் வேண்டுமென்றால் சீர்த்திருத்தங்களுக்கு உடன்படுங்கள் என்று கூறுங்கள். இல்லையெனில் நாங்கள் அனைத்து பணப்பட்டுவாடாவையும் நிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டி வரும். இதில் நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி அளிக்கும் உத்தரவும் அடங்கும். அவர்கள் உடன்பட மறுக்கக் காரணம் நீங்கள் (பிசிசிஐ) அவர்களை ஆதரிக்கிறீர்கள்” என்றார் தாக்குர்.
இதற்கு கபில் சிபல், “மாநில கிரிக்கெட் சங்கங்களால்தான் பிசிசிஐ இருக்கிறது” என்றார் இதற்கு குறுக்கிட்ட டி.எஸ்.தாக்குர், “பிசிசிஐ-யினால்தான் அவர்கள் இருக்கிறார்கள்” என்றார். உடனே கபில் சிபல், “இது அவர்கள் பணம் நாங்கள் அளிக்கிறோம்” என்றார்.
உடனே டி.எஸ்.தாக்குர், “அவர்கள் பணம் அல்ல. பொதுமக்கள் பணம். நாங்கள் ஏற்கெனவே எங்கள் தீர்ப்பில் பிசிசிஐ பொதுச்செயல்பாடுகளை நிகழ்த்தும் அமைப்பு என்று உறுதி செய்துள்ளோம்.
இதனையடுத்து அமர்வில் இருந்த மற்ற நீதிபதிகளான ஏ.எம்.கன்வில்கர், சந்திராசூட் ஆகியோரும் பிசிசிஐ தங்கள் மாநில கிரிக்கெட் வாரியங்களின் தவறுகளின் பின்னால் ஒளியக் கூடாது என்று வலியுறுத்தினர், ஆனால் பிசிசிஐ இது தனியார் அமைப்பு என்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களின் கூட்டமைப்பு என்றும் கூறியது.
இதற்கு நீதிபதிகள் கூறும்போது, “உள்நாட்டு போட்டிகளை நடத்த முடியாது. போட்டிகள் நடைபெற வேண்டுமென்றால் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை அவசியம். இது சீசன் அல்லது சீசன் அல்ல என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. ஒரு பைசா கூட விரயமாக அனுமதிக்க மாட்டோம். கிரிக்கெட் சீசன்களை விட புறவயத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் மிக மிக முக்கியம்” என்று உறுதியாக கூறிவிட்டனர்.
கபில் சிபல் மேலும் கூறும்போது, லோதா கமிட்டி முன்னதாக சீர்த்திருத்தங்களை அமல்படுத்த ஒரு ஆண்டு கால அவகாசம் அளித்தது. ஆனால் திடீரென கால அவகாசத்தைக் குறைத்து செப்டம்பர் 30 என்றது என்று கூறினார்.
இதற்கு டி.எஸ்.தாக்குர் பதிலளிக்கையில், “நீங்கள் உடனே லோதா கமிட்டிக்குச் சென்று இதனை தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் செயலரோ லோதா கமிட்டி அவருக்கு மெயில்களை அனுப்ப வேண்டும் என்று விரும்பினார். உங்களது அலட்சியமான போக்கின் காரணமாகவே விரக்தியில் லோதா கமிட்டி எங்களை நாடி வந்துள்ளது” என்றார்.
கடைசியாக கபில் சிபல் மாநில கிரிக்கெட் வாரியங்களை சீர்த்திருத்தங்களுக்கு உடன்பட வைக்க அக்டோபர் 17-ம் தேதி வரை கால அவகாசம் கேட்டார், இதற்கு நீதிபதி டி.எஸ்.தாக்குர், “சீர்த்திருத்தங்களுக்கான எங்கள் உத்தரவுக்கு உங்களை உடன்பட வைக்க நாங்கள் ஏற்கெனவே நிறைய காலவிரயம் செய்து விட்டோம். சாமானிய மக்கள் சிறையிலிருந்து விடுதலை பெற எங்கள் தீர்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் நாங்கள் உங்களுடன் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago