புஜாராவின் பிரமாத சதம்;கையில் கொடுத்த கோலி, காலில் வாங்கிய ரஹானே, 29 பந்துகள் ஆடி பந்த் டக்: மொயின் அலியிடம் சரிந்த இந்திய பேட்டிங்

By இரா.முத்துக்குமார்

சவுத்தாம்டன் டெஸ்ட் போட்டியில் 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. புஜாரா மிகச்சிறப்பான ஒரு இன்னிங்ஸை ஆடி தனது 15வது சதத்தை ஒருமுனையில் போராளியாக நின்று எடுத்ததோடு 132 ரன்கள் நாட் அவுட் என்று இந்திய அணிக்கு 27 ரன்கள் என்ற ஒரு சிறிய முன்னிலையைப் பெற்றுத் தந்தார்.

ஆட்டம் முடியும் போது இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.

இஷாந்த் சர்மா, பும்ரா இவருக்கு உறுதுணையாக நின்றனர். பாண்டியா, அஸ்வின் பொறுப்பற்ற ஆட்டமிழப்புக்குப் பிறகு இஷாந்த்துடன் 32 ரன்களையும் பும்ராவுடன் கடைசி விக்கெட்டுக்காக 46 மிக முக்கிய ரன்களையும் சேர்த்தார் புஜாரா.

கடைசியில் 16 அருமையான பவுண்டரிகளுடன் அவர் 132 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இது இங்கிலாந்தில் புஜாராவின் முதல் சதம், ஆசியாவுக்கு வெளியே புஜாராவின் 2வது சதம், அவரது 61 டெஸ்ட் போட்டிகள் கொண்ட வாழ்வில் இதுவே வெளியே எடுக்கும் 2வது சதம்!!

அவருக்கு மறக்க முடியாத ஒரு சதமாக இது அமையும். மிகவும் கவனத்துடன் ஆடினார், அதிக பிரச்சினைகள் இன்றி ஒரு கட்டத்துக்குப் பிறகு சரளமாக ஆடத் தொடங்கினார். கடைசியில் பும்ராவை வைத்துக் கொண்டு மொயின் அலி பந்தை நேராக மேலேறி வந்து தூக்கி விட்டு 2 ரன்கள் எடுத்து தன் அபாரமான சதத்தை எடுத்து முடித்தார். சதம் எடுத்த பிறகு அலியை மேலேறி வந்து மிக அழகாக ஒரு பவுண்டரி அடித்து தன் ஆதிக்கத்தை உறுதி செய்தார். 99-ல் இருந்த போது அலி பந்தை கால்காப்பில் வாங்க ஒரு சிறு ரிவியூ செய்யப்பட்டது, நாட் அவுட், இங்கிலாந்து ரிவியூவை இழந்ததில்தான் அது முடிந்தது, ரூட் ஏமாற்றமடைந்தார்.

கட், பஞ்ச், அருமையான டிரைவ்கள் 2 தூக்கி அடிக்கப்பட்ட ஷாட்கள், புல்ஷாட்கள் என்று புஜாரா சிறப்பாக ஆடினார். அதுவும் கடைசியில் பீல்டர்களை அருகில் அழைத்து சாம் கரன் வீசிய பந்தை சேவாக் பாணியில் கவர் திசையில் ஒரே அறை அறைந்து அடித்த பவுண்டரி பிரமாதமான ஷாட் ஆகும்.

மொயின் அலியிடம் சரிந்த இந்திய அணி!

உணவு இடைவேளையின் போது இந்திய அணி 31 ஓவர்களில் 100/2 என்று இருந்தது அப்போது புஜாரா 28 ரன்களுடனும் கோலி 25 ரன்களுடனும் இருந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு புஜாரா தன்னம்பிக்கையுடன் ஆட, விராட் கோலி, உள்ளுக்குள் புதைந்து விடக் கூடாது என்பதற்காக கொஞ்சம் ஸ்கோர் செய்யப்பார்த்தார். அதில் தவறில்லை, ஆனாலும் 5வது ஸ்டம்புக்குச் செல்லும் பந்துகளை விரட்டி வந்தார்.

மேலும் ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் இருமுறை பீட்டன் ஆனார். ஆனால் இதே ஓவரின் முதல் பந்தை மிக அழகாக நேர் டிரைவ் செய்து பவுண்டரிக்கு ஒரு பந்தை விரட்டினார். இதே ஓவரில் பிறகு ஒரு பந்து லேட் அவுட் ஸ்விங் ஆக பீட்டன் ஆனார். அடுத்த பந்தே அதேமாதிரியான ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே சென்ற பந்துக்கு மட்டையைக் கொண்டு சென்று பீட்டன் ஆனார்.

பிறகு அடுத்த ஓவரே மொயின் அலி பந்து வீச ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்து ஆடாமல் விட வேண்டிய பந்து, ஆனால் கோலி மட்டையை நீட்ட பந்து விக்கெட் கீப்பர் பட்லருக்கும் ஸ்டோக்ஸுக்கும் இடையே சென்று பவுண்டரி ஆனது. மிகவும் அதிர்ஷ்டம் ஏனெனில் பட்லரின் வலது கை கிளவ்வுக்கு அருகில் சென்றது பந்து.

இப்படியே ஆடிவந்த விராட் கோலி 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்த நிலையில் சாம் கரன் ஒரு பந்தை அவருக்கு ஓவர் த ஸ்டம்ப்பிலிருந்து வீசி இடது கை வீச்சாளருக்கே உரிய கோணத்தில் கோலியின் மட்டையைக் குறுக்காகக் கடந்து செல்லுமாறு வீசினார். மீண்டும் மிகவும் தள்ளிச் சென்ற பந்து ஆடாமல் விட்டிருக்க வேண்டிய பந்து, ஆனால் பந்து இன்ஸ்விங் ஆகுமோ என்று அவர் மட்டையைக் கொண்டு சென்றிருக்கலாம், எட்ஜ் ஆனது முதல் ஸ்லிப்பில் குக் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மிகப்பெரிய விக்கெட்டைக் கைப்பற்றினார் சாம் கரன்.

ரஹானே அவுட்டும், சர்ச்சையும்! பாண்டியா, அஸ்வின் பொறுப்பற்ற அவுட்

ரஹானே இறங்கி 5 ரன்களில் இருந்த போது ஸ்டோக்ஸ் வீசிய பந்து ஒன்று உள்ளே ஒரு கோணத்தில் வந்து பிறகு ரஹானே ஆட முற்பட்டார் எட்ஜ் ஆகி ரூட்டின் வலது கையில் பட்டு சென்றது, தப்பினார். பிறகு ஸ்டோக்ஸ் ஒவர் பிட்ச் வீச கவரில் அருமையான பவுண்டரி அடித்தார்.

ஆனால் இதே ஓவரில் 11 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸ் பெரிய இன்ஸ்விங்கரை வீச நேராக கால்காப்பில் வாங்கினார். ஆனால் உடனேயே ரிவியூ கேட்டார். அதில் ஸ்டோக்ஸின் பந்து நோ-பாலோ என்ற ஐயம் எழுந்தது. ஆனால் குதிகாலின் ஒரு புறம் கிரீசிற்கு மேல் இருந்ததாகவும் தெரிந்தது. எனவே சரியான பந்து என்றார் 3வது நடுவர் ஜோ வில்சன். ஆகவே கையை உயர்த்தினார். ரஹானே எல்.பி.அவுட். அதன் பிறகு புஜாரா ஸ்டோக்ஸ் பந்தில் நெற்றியின் வலது புறம் ஒரு அடி வாங்கினார். பிசியோ வந்தார் ஆனால் புஜாரா தொடர்ந்தார்.

ஆனால் இதே ஸ்டோக்ஸை லெக் திசையிலும் கவர் திசையிலும் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசி பழிதீர்த்துக் கொண்டார் புஜாரா.

ரிஷப் பந்த் ஏன் அப்படி ஆடினார் என்று தெரியவில்லை 29 பந்துகள் ஆடி ஒரு ரன் கூட எடுக்க முடியாத அளவுக்கு பெரிய பந்து வீச்செல்லாம் ஒன்றுமில்லை, அப்படியிருந்தும் அவர் 29 பந்துகள் ஆடி 0-வில் வெளியேறினார். மொயின் அலி ரவுண்ட் த விக்கெட்டில் வந்து மிடில் அண்ட் லெக் ஸ்டம்பில் பந்தை இறக்கினார். நேராக வாங்கினார் பந்த் தனது கால்காப்பில், உடனடியாக நடுவர் அவுட் கொடுத்தார், இந்தியாவின் கைவசம் ரிவியூ இல்லை. நடையைக் கட்டினார், ஆனால் ரீப்ளேயில் அது பிளம்ப் எல்.பி.என்று உறுதியானது. இவ்வளவு பந்துகள் ஆடி டக் அவுட் ஆன விக்கெட் கீப்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்று ஆராய்வது சுவாரசியமானதாக இருக்கும்.

பாண்டியா இறங்கினார். ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலி பந்தை கொஞ்சம் மேலேறி வந்து ஆடியிருக்கலாம் ஆனால் அவர் காலை நீட்டி பந்துக்கு நெருக்கமாகக் கொண்டு செல்ல முற்பட்டார். பிறகு பந்தை திரும்பும் திசையிலேயே பிளிக் ஆட முயன்றார். ஷார்ட் மிட்விக்கெட்டில் ஜோ ரூட் இடது புறம் பாய்ந்து பிடித்தார்.

அப்போது புஜாரா 77 ரன்களுடனும் அஸ்வின் 1 ரன்னுடனும் ஆடி வந்தனர். இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள்.

பிறகு அஸ்வின் 1 ரன் எடுத்த நிலையில் மொயின் அலியின் நேர் பந்து திரும்பும் என்று நினைத்து பீட் ஆனார். ஆனால் அடுத்த பந்து ஆஃப் ஸ்டம்புக்கு நெருக்கமாக வர மிகவும் மவுடீகமாக அதை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று பவுல்டு ஆனார். மிகவும் பொறுப்பற்ற ஷாட்டாகும் அது. மொயின் அலியின் 3வது விக்கெட்டாகும் இது.

அடுத்த பந்தே மொகமது ஷமியும் பவுல்டு ஆக, ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றார் மொயின் அலி. அடுத்த பிராட் ஓவருக்குப் பிறகு ஹாட்ரிக் பந்தை வீச வந்தார் மொயின் அலி ஆனால் இஷாந்த் சர்மா ஹாட்ரிக்கை தடுத்து நிறுத்தினார். இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 195ரன்களை எடுத்திருந்தது.

இதன் பிறகுதான் இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோரது உறுதியுடன் சதத்தை நிறைவு செய்தார் புஜாரா, இஷாந்த் சர்மா 40 பந்துகள் நின்றார், நன்றாக தடுத்தாடினார் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலி ஓவரில் லாங் லெக்கில் அடித்து விட்டு சிங்கிள் வேண்டாம் என்று புஜாரா முடிவெடுத்தது தவறாகப் போனது, அடுத்த பந்தே இஷாந்த் சர்மா இன்சைடு எட்ஜில் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பும்ரா 6 ரன்களுக்கு 24 பந்துகள் நின்றார், மிக அழகாக உறுதியுடன் பின் காலில் சென்று ஆடியதோடு முன் காலில் வந்து தடுத்தாடியும் புஜாரா சதமெடுக்கவும் இந்திய அணி முன்னிலை பெறவும் உதவினார். கடைசியில் பிராட் பந்தில் கிளவ்வில் அடிபட்டு கேட்ச் ஆனார் பெவிலியன் செல்லும் போது அவருக்கு வலி இருந்தது தெரிந்தது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை மொயின் அலி 63 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் பிராட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சாம் கரன், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட், ஆண்டர்சன் விக்கெட் இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்