மீண்டும் பேட்டிங் சொதப்பல்: இங்கிலாந்து பெரிய முன்னிலையப் பெறாமல் இந்திய அணியை மீட்பாரா அறிமுக வீரர் ஹனுமா விஹாரி?

By இரா.முத்துக்குமார்

ஓவல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 332 ரன்கள் அடிக்கவிட்ட இந்திய அணி பிறகு மீண்டும் பேட்டிங்கில் சொதப்பி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

கொஞ்சம் தைரியம் காட்டிய அறிமுக வீரர் ஹனுமா விஹாரி ஒரு ஹூக் சிக்சுடன் 25 ரன்கள் எடுத்தும் ஜடேஜா 8 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக 196/7 என்று தொடங்கிய இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லரின் தலைமையில் கடைசி 3 விக்கெட்டுகளுக்கு 151 ரன்கள் சேர்த்தது. இதற்கு கோலியின் பவுலிங் தெரிவுகளும், பந்து வீச்சாளர்களைப் பலவீனப்படுத்தும் களவியூகமுமே காரணம். கேப்டன்சியில் தோனியின் வழி செல்லுபடியாகாது, அங்கு நிகழ்த்திக் காட்ட வேண்டும், விஷயம் தானாகவே நடந்து விடும் என்று விட்டு விடலாகாது.

கிளென் மெக்ராவைக் கடந்துசெல்லும் நிலையில் உலக சாதனைக்கு அருகில் இருக்கிறார். விராட் கோலி விக்கெட்டை இந்தத் தொடரில் கைப்பற்றாத ஆண்டர்சன் தீவிர முயற்சி செய்தார். கோலியின் மட்டை விளிம்பைக் கடந்து சென்றது பந்து. இன்ஸ்விங்கரில் கோலி பிளம்பாக வாங்கினார் ஆனால் அவுட் கொடுக்கப்படவில்லை.

விக்கெட்டுகள் வந்தன, ஆனால் விராட் கோலி விக்கெட் அல்ல, புஜாரா (37), ரஹானே (0) ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினார் ஆண்டர்சன்.

விராட் கோலி 6 பவுண்டரிகளுட 49 ரன்கள் எடுத்து நாள் முடிய அரைமணி இருக்கும் போது பென் ஸ்டோக்ஸ் வீசிய தொடக்கூடாத பந்தைத் தொட்டு கேட்ச் ஆனார்.

ஷிகர் தவண் உள்ளூர் புலி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. ஸ்டூவர்ட் பிராட் பந்தில் எல்.பி.ஆனார். நல்ல வேளை ரிவியூ செய்யவில்லை, ஏனெனில் அது பிளம்ப் எல்.பி. பந்தின் லைனை சரியாகக் கணிக்க முடியாமல் கால்காப்பில் வாங்கி 3 ரன்களில் வெளியேறினார்.

ராகுல் ஷாட்களை ஆடும் முனைப்பைக் காட்டினார், புஜாரா தன் பாணியில் நின்று ஆட முயற்சி செய்தார். இருவரும் பெரிய சிக்கலையெல்லாம் சந்திக்கவில்லை, ஆனால் மொயின் அலி வந்தவுடன் சிக்கல்கள் தோன்றின. புஜாரா 10 ரன்களில் இருந்த போது அலி பந்தை மட்டையின் உள்விளிம்பில் வாங்கினார், ஷார்ட் லெக்கில் குக் கேட்சைத் தவற விட்டார்.

4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்திருந்த கே.எல்.ராகுலுக்கு சாம் கரன் ஒரு அற்புத பந்தை வீசினார். விளையாட முடியாத பந்து ஸ்விங் ஆகி உள்ளே வந்து மிடில் ஆண்ட் ஆஃபில் பிட்ச் ஆகி சற்றே வெளியே எடுக்க ஆஃப் ஸ்டம்பின் மேல் பகுதியைத் தாக்கியது, விளையாட மிகவும் கடினமான பந்து. ராகுல் இதனை ஆடியிருக்கவே முடியாது. பவுல்டு ஆனார்.

பந்து இவ்வளவு ஸ்விங் ஆவதைப் பார்த்த ஜோ ரூட், ஸ்கோர் 94/2 என்று இருந்த போது ஜேம்ஸ் ஆண்டர்சனை பந்து வீச அழைத்தார். அதாவது ஆண்டர்சனின் கடந்த தொடர் செல்லப்பிள்ளை கோலி களத்தில் இருந்தார். இரண்டு அவுட் ஸ்விங்கர்களை வீசி பீட் செய்து விட்டு பிறகு ஒரு இன்ஸ்விங்கரை உள்ளே கொண்டு வந்தார், இதைக் கூட எதிர்பார்க்காதவர்தான் இன்று உலகிலேயே பெரிய பேட்ஸ்மென், காலில் வாங்கினார். தர்மசேனா அவுட் இல்லை என்றார், இங்கிலாந்து ரிவ்யூ செய்தது, ஆனால் அம்பயர்ஸ் கால் ஆனது. இதில் ஆண்டர்சன் கடுப்பானார், ஒரு சில வார்த்தைகளை அவர் கோலியை நோக்கிப் பிரயோகிக்க இவரும் ஏதோ சொல்ல நடுவர் தலையிட வேண்டியதாயிற்று.

ரத்தம் கொதிப்படைந்த ஆண்டர்சன், விராட் கோலியை இந்தத்தொடரில் வீழ்த்தும் வாய்ப்பை இழந்தார், ஆனால் அதற்காக புஜாராவை விட்டு விட முடியுமா? 37 ரன்களில் புஜாரா நன்றாக ஆடிவந்த போது நம் பேட்ஸ்மென்களுக்குப் பதற்றமான அவுட் ஸ்விங்கர் வந்தது தொட்டார் புஜாரா, வெளியேறினார். ரஹானே தன் உடலிலிருந்து தள்ளி மட்டையைத் தொங்க விட்டு ஆண்டர்சன் பந்தை குக்கிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார்.

அறிமுக வீரர் ஹனுமா விஹாரி 6ம் நிலையில் இறங்கினார். ரன் எண்ணிக்கையைத் தொடங்கும் முன்பே இருமுறை அவுட் ஆகியிருப்பார். முதலில் ஒரு எல்.பி. முறையீடு, இங்கிலாந்து ரிவியூ செய்யத் தவறியது. இன்னொரு முறை எல்.பி தீர்ப்பளிக்கப்பட்டார், ஆனால் ரிவியூவில் பிழைத்தார், இருமுறையும் பிராட்தான் பவுலர்.

கோலி சில ஷாட்களை ஆட ஹனுமா விஹாரியுடன் இணைந்து 51 ரன்கள் அரைசதக் கூட்டணி அமைத்தனர். 49 ரன்கள் எடுத்த விராட் கோலி பென் ஸ்டோக்ஸ் வீசிய அவுட் ஸ்விங்கரை எட்ஜ் செய்து வெளியேறினார், மோசமான ஷாட். ரிஷப் பந்த் (5) 8 பந்துகளே தாக்குப் பிடித்தார். இவரது எட்ஜையும் ஸ்டோக்ஸ் சரியாகப் பிடித்தார், குக்கிடம் கேட்ச் ஆனது.

ஆட்ட முடிவில் ஹனுமா விஹாரி 25 ரன்களுடனும், ஜடேஜா 8 ரன்களுடனும் உள்ளனர், இந்திய அணி 174/6 என்று இங்கிலாந்துக்கு ஒரு பெரிய முன்னிலையை வழங்கும் போல் தெரிகிறது. ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் பிராட், கரன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்