ஆசிய விளையாட்டுப் போட்டி: ஜிது ராய்க்கு தங்கம், ஸ்வேதாவுக்கு வெண்கலம்

By பிடிஐ

17-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று தந்தார் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஜிது ராய்.

நேற்று நடைபெற்ற ஆடவர் 50 மீ. பிஸ்டல் பிரிவில் கடும் போட்டிக்கு மத்தியில் சீனா மற்றும் தென் கொரிய வீரர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார் சர்வதேச தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஜிது ராய்.

சீனாவைச் சேர்ந்த முன்னணி வீரரான வாங் ஜிவெய், இரு முறை ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்றவரும், நடப்பு உலக சாம்பியனுமான தென் கொரியாவின் ஜாங்கோவை ஆகியோரை ஆரம்பத்திலேயே பின்னுக்குத் தள்ளினார் ஜிது ராய். ஆனால் யாரும் எதிர்பார்க்காதவரான வியட்நாமின் ஹாங் புயாங் குயென், ஜிது ராய்க்கு கடும் சவால் அளித்தார்.

இதனால் வெற்றியைத் தீர்மானிக்க கடைசி செட் வரை போட்டி இழுத்தது. அதில் 8.4 புள்ளிகளைப் பெற்ற ஜிதுராய் தங்கத்தை தட்டிச் சென்றார். கடந்த மாதம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஜிது ராய், பின்னர் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சாதித்திருக் கிறார்.

2-வது இந்தியர்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற 2-வது இந்தியர் ஜிது ராய். இதற்கு முன்னர் ஜேஸ்பால் ரானா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஒட்டுமொத்தத்தில் ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற 4-வது இந்தியர் ஜிது ராய் ஆவார். ரந்திர் சிங் (1978), ரஞ்சன் ஜோதி (2010) ஆகியோர் மற்ற இரு இந்தியர்கள்.

வெற்றி குறித்துப் பேசிய ஜிது ராய், “எப்படியாவது தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். அதனால் கடுமையான நெருக்கடியும் ஏற்பட்டது. காமன்வெல்த் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியைவிட இங்கு அதிக சவால் இருந்தது. எனினும் நான் நினைத்தது போலவே தங்கம் வென்றதில் மகிழ்ச்சி” என்றார்.

ஜிது ராய் தங்கப் பதக்கம் வென்றது குறித்துப் பேசிய தேசிய பிஸ்டல் பயிற்சியாளர் பாவல் ஸ்மிர்னோவ், “ஜிது ராய், மனதளவில் மிகப் பலமான வீரர். அதனால் அவரால் சாதிக்க முடிந்தது” என்றார். சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஜிது ராய் வென்ற 6-வது பதக்கம் இது.

பதக்க வேட்டையைதொடங்கி வைத்த ஸ்வேதா

முன்னதாக மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்வேதா சவுத்ரி வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டையைத் தொடங்கி வைத்த பெருமை ஸ்வேதாவையே சேரும்.

ஆங்னியோன் மைதானத்தில் நடைபெற்ற நேற்று நடைபெற்ற 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் ஸ்வேதா 176.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்தப் பிரிவில் சீனாவின் ஜங் மெங்கியான் 202.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், தென் கொரியாவின் ஜங் ஜீ-ஹே 201.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனையான ஹீனா சித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் போனது ஏமாற்றமாக அமைந்தது.

வழக்கமான துப்பாக்கியின்றி சாதனை

வெற்றி குறித்துப் பேசிய ஸ்வேதா, “இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. நான் வென்றது வெண்கலப் பதக்கம் என்றாலும், அதுவும் பதக்கம்தான். இப்போது வரை இதுதான் நான் வென்ற பெரிய பதக்கம். இறுதிப் போட்டியின் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்டேன். அதனால் முதலிடம் அல்லது 2-வது இடத்தைப் பிடிப் பேன் என நினைத்தேன். ஆனால் போட்டியின் நடுவில் கொஞ்சம் தடுமாறியதால் முதல் இரு இடங்களை இழக்க நேரிட்டது.

நான் வழக்கமாக பயன்படுத்தும் துப்பாக்கி இல்லாமலேயே இந்த போட்டியில் பங்கேற்றேன். ஏனெனில் எனது துப்பாக்கிக்காக இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சீரியல் எண், பொருந்தாததால் எனது துப்பாக்கியை கொரிய சுங்கத்துறை அதிகாரிகள் பறித்துவிட்டனர். கடந்த 3 நாட்களாக அவர்கள் வசம்தான் துப்பாக்கி இருந்தது. இது தொடர் பாக நான் யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. ஏனெனில் நான் சமீபத்தில்தான் துப்பாக்கியை மாற்றினேன். அதனால் சீரியல் எண்ணில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. எனினும் இன்று (நேற்று) காலை யில் துப்பாக்கி என்னிடம் ஒப்படைக் கப்பட்டது. ஆனால் அதேநேரத்தில் போட்டி தொடங்கிவிட்டதால் அந்த துப்பாக்கியை பயன்படுத்த முடியவில்லை” என்றார்.

முதல் தங்கத்தை வென்ற சீனா

ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா வென்றது. ஆசிய விளையாட்டுத் துறையில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழும் சீனா, மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல் அணி பிரிவு துப்பாக்கி சுடுதல் போட்டியின் மூலம் முதல் தங்கத்தைக் கைப்பற்றியது. சீன அணியில் ஒலிம்பிக் சாம்பியன் குயோ வென்ஜுன், ஜங் மெங்கியான், ஜௌ கிங்யான் ஆகியோர் இடம்பெற்றிருந் தனர். இந்தப் பிரிவில் தைவான், மங்கோலியா அணிகள் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றின. போட்டியை நடத்தும் தென் கொரிய அணி 4-வது இடத்தையே பிடித்தது.

பளுதூக்குதலில் ஏமாற்றம்

பளுதூக்குதலைப் பொறுத்த வரையில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் சஞ்ஜிதா சானு, மீரா பாய் சானு ஆகியோர் முறையே 10 மற்றும் 9-வது இடங் களைப் பிடித்தனர் ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் சுகன் தேய் 12-வது இடத்தையே பிடித்தார்.

ஜிது ராய்க்கு ரூ.50 லட்சம் பரிசு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் ஜிது ராய்க்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

நேபாளத்தில் பிறந்தவரான ஜிது ராய், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். உத்தரப் பிரதேசம் சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வரும் அவர், காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றபோது ரொக்கப் பரிசு வழங்கப்படவில்லை. இதையடுத்து தனது சாதனைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என அவர் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், இப்போது ரூ.50 லட்சத்தை அறிவித்திருக்கிறது உத்தரப் பிரதேச அரசு.

ஸ்குவாஷில் உறுதியானது பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஸ்குவாஷ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கலும், ஜோஷ்னா சின்னப்பாவும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சர்வதேச தரவரிசையில் 21-வது இடத்தில் இருக்கும் ஜோஷ்னா 11-9, 11-7, 11-7 என்ற நேர் செட்களில் 183-வது இடத்தில் உள்ள தென் கொரியாவின் சங் சன்மியை தோற்கடித்தார். மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சர்வதேச தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் தீபிகா பலிக்கல் 11-6, 10-12, 11-6, 11-4 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜின்யூ கூவை தோற்கடித்தார்.

இன்று நடைபெறும் அரையிறுதிக்கான ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் இருவரும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகிவிடும். ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்