பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை பந்துவீச்சால்  ‘கிரேட் எஸ்கேப்’: ஆப்கனை போராடி வென்றது 

By க.போத்திராஜ்

மழையால் வேகப்பந்து சாதகம், மல்லிங்கா, பிரதீப்பின் பந்துவீச்சு ஆகியவற்றால் கார்டிப்பில் நேற்று நடந்த உலகக்கோப்பைப்ப போட்டியின் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 34 ரன்களில் தோற்கடித்தது இலங்கை அணி.

 

நியூசிலாந்துக்கு எதிராக படுமோசாக தோற்ற இலங்கை அணிக்கு இந்த போட்டியில் போராடிக் கிடைத்த வெற்றி சற்று ஆறுதல் அளிக்கும்.

 

முதலில் பேட் செய்த இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்து. ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயி்ஸ் விதிப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கு மாற்றப்பட்து.

 

அதன்படி 41 ஓவர்களில் 187 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 32.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்து 34 ரன்களில் தோல்வி அடைந்தது.

 

இரு அணிகளுமே ஏராளான தவறுகளை, பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் செய்தார்கள். இதில் குறைந்த தவறு செய்த இலங்கை வென்றுள்ளது அவ்வளவுதான்… உண்மையில் ஒரு நல்ல பந்துவீச்சு அணியாக இருந்திருந்தால் இலங்கை ஸ்கோர் நேற்று 100தான்.

 

 

ஆப்கானிஸ்தான் அணியை வெல்வதற்கு முன்னாள் உலக சாம்பியன் திணறுகிறார்கள் என்றால், பந்துவீச்சும், ேபட்டிங்கும் எந்த கீழ்நிலையில் இருக்கிறது என்பதை கூறத் தேவையில்லை.

 

கிரீன்டாப் ஆடுகளத்தில் இரு அணிகளுக்கும் ஆடத் தெரியவில்லை என்பது நேற்று தெரிந்துவிட்டது. ஏற்கனவே நியூசிலாந்திடம் கிரீன்டாப் ஆடுகளத்தில் விக்கெட்டுகளை இழந்து தோற்ற இலங்கை இந்த முறையும் தவறுகளை திருத்திக்கொள்ளாமல், ஆப்கானிஸ்தானிடம் அதே தவறுகளைச் செய்து விக்கெட்டுகளை வீணாகப் பறிகொடுத்தது. அதேபோலவே ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களின் செயல்பாடும் இருந்தது.

 

மல்லிங்கா சிறந்த அனுபவமான பந்துவீச்சாளர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, பிரதீப் சிறப்பான பந்துவீச்சாளர் அவருக்கு 4 விக்கெட் கிடைத்தது. பிரதீப்புக்குத்தான் ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது.

 

ஆப்கானிஸ்தானுக்கு கெட்டநேரம் மழைவடிவில் வந்தது. காலநிலை வேகப்பந்துவீச்சும், ஸ்விங் பந்துவீச்சுக்கும் எளிதாக ஒத்தழைத்தது. இந்த குளிர்ச்சிநிலைதான் பிரதீப் பந்துவீ்ச்சு பிரகாசமாக இருந்ததற்குக்காரணம்.

 

கிரீன் டாப் ஆடுகளத்தில் லைன், லென்த்தில் பந்துவீசுவது தெரியாமல் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தவறுகளை செய்து தொடக்கத்தில் ரன்களை வழங்கினார்கள். ஏகப்பட்ட வைடுகளை வீசினார்கள் ஆப்கான்பவுலர்கள். ஆனால், முகமது நபி சரியான லென்தில் பந்துவீசி தவறை திருத்திக்கொண்டார் இலங்கையின் சரிவுக்கு சுழி போட்டார்.

 

இலங்கை பந்துவீச்சாளர்கள் பிரமாதமாக பந்துவீசினார்கள் என்று கூறவிட முடியாது. ஆப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன்களின் அவசரப்போக்கு, நிலைத்தன்மையில்லாத பேட்டிங், தவறான ஷாட் ஆகியவையும், காலநிலையும்தான் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு பக்கபலமாக அமைந்தது.

 

இலங்கையின் பேட்டிங்கில் திரிமானே, பெரேரா தொடக்க கூட்டணியின் ரன்களை கழித்துவிட்டுப்பார்த்தால் அணியின் ஸ்கோர் 100 ரன்களைக் கூட எட்டாது. அந்த அளவுக்கு பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டார்கள். பந்து ஒருபக்கம் செல்ல, பேட்டை ஒரு பக்கம் சுழற்றி உதானா, திரிமானே போன்றோர் மோசமாக ஆட்டமிழந்தனர். இதுபோன்ற கேவலமான ஷாட்கள் தொழில்முறையிலான கிரிக்கெட் வீரர்களுக்கு அவமானம்.

 

தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் லைன்-லென்த்தில் பந்துவீசாமல் செய்த தவறுகள்தான் இலங்கை தொடக்க வீரர்கள் எளிதாக ரன் குவிக்க முடிந்தது. இந்த தவறை தொடக்கத்திலேய சரி செய்திருந்தால் இலங்கை 100 ரன்களில் சுருண்டிருக்கும்.

 

அனுபவமான வீரர் என்பதை மலிங்கா நிரூபித்துவிட்டார், பிரிக்கமுடியாத கூட்டணியை தனது சாதுர்யமான பந்துவீச்சால் பிரித்து சரிவுக்கு காரணமாகிவிடுகிறார். இலங்கையின் வெற்றிக்கு மலிங்காவின் அனுபவமான பந்துவீச்சு பிரதானமாகும்.

 

மற்றவகையில் குறைந்த தவறுகளைச் செய்த இலங்கை வென்றுள்ளது.

 

மழை காரணமாக இலக்கு திருத்தப்பட்டு 41 ஓவர்களில் 187 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. ஷேசாத், சசாய் இருவரும் 5 ஓவர்கள் வரை விக்கெட் விழாமல், ரன்களைச் சேர்த்தனர். ஆனால், மலிங்கா வீசிய 5-வது ஓவரில் ஷேசாத் 7 ரன்னில் கருணாரத்னேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹஸ்ரதுல்லா சசாய் டி20 போல் மட்டையை சுழற்றினார். அதுவும் சுரங்க லக்மல் ஒரு ஷார்ட் பிட்ச் வீச காதைப்பிளக்கும் சத்தத்துடன் பந்து ஆன் திசையில் சிக்சருக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்தது. முன்னதாக மலிங்காவை அடித்த கவர் ட்ரைவ் ராஜ கவர் ட்ரைவ் ஆகும், இவருக்கு மலிங்கா சில யார்க்கர்களை வீசினார், ஆனால் அவர் அதனை எதிர்கொண்டார். இவர் இன்னும் கொஞ்சம் நிதானம் கடைபிடிக்க வேண்டும்.

 

 

1995-96களில் இலங்கை அணி ஜெயசூரியா, கலுவிதரனாவை வைத்து உலகையே மிரட்டி வந்தனர், அதன் ஒரு குறைந்த வடிவம்தான் இந்த ஷசாத், சசாய் கூட்டணி. ஆனால் சசாய் இன்னும் கொஞ்சம் ஒன்று, இரண்டு என்று ரன்களை எடுத்து, தன் விக்கெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆடினால் ஆப்கன் அணியை வீழ்த்துவது கடினமாக இருக்கும்.

 

அதன்பின் இலங்கை பந்துவீச்சாளர்கள் அளித்த நெருக்கடியால் அடுத்த 23 ரன்களைச் சேர்ப்பதற்குள் ஆப்கானிஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரஹ்மத் ஷா2), ஹஸ்மத்துல்லா ஷாகிதி(4), முகமது நபி(11), ஹஸ்ரத்துல்லா சசாய்(30) என வீழ்ந்ததால் நெருக்கடிக்கு ஆளானது. 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது

 

6-வது விக்கெட்டுக்கு கேப்டன் குல்புதின் நயிப், நஜிபுல்லா ஜத்ரன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரின் பேட்டிங்கால் ஸ்கோர் ஓரளவுக்கு உயர்ந்து நம்பிக்கை அளித்தது. ஆனால், பிரதீப் வீசிய 25 ஓவரில் நயிப் 23 ரன்னில் எல்பிடபிள்யு ஆனபின் ஆட்டம் தலைகீழாக மாறியது. இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தனர். 121 ரன்களில் 6-வது விக்கெட்டை இழந்தது ஆப்கானிஸ்தான். நயீப் எல்.பி.டபிள்யூ ரிவியூவுக்குச் சென்றது அதனை களநடுவர் அவுட் என்றதால் மூன்றாவது நடுவர் அம்பயர் கால் என்று அவுட் கொடுத்தார், ஒருவேளை கள நடுவர் நாட் அவுட் என்றால் அது நாட் அவுட். பந்து ஆஃப் ஸ்டம்ப் லைனுக்கு வெளியே பிட்ச் ஆகிறது எப்படி அதை எல்.பி.என்று கூற முடியும்?

 

அடுத்த 31 ரன்களில் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. ரஷித் கான்(2), ஜாத்ரன்(6), ஹசன்(6), நஜ்முல்லா ஜாத்ரன்(43) என சரி ஆட்டம் முடிவுக்கு  வந்தது. 32.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்து 34 ரன்களில் தோல்வி அடைந்தது ஆப்கானிஸ்தான் அணி.

 

இலங்கை தரப்பில் பிரதீப் 4 விக்கெட்டுகளையும், மலிங்கா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

 

முன்னதாக டாஸ்வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பீல்டிங் செய்தது. இலங்கையின் தொடக்க வீரர்கள் கருணாரத்னே, பெரேரா இருவரும் சேர்ந்து 13 ஓவர்கள்வரை நிலைத்து நல்ல தொடக்கம் அளித்தனர். அதன்பின் நடுவரிசையில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தநர்.

 

முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த நிலையில் கருணாரத்னே 30 ரன்களில் நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

 

அடுத்துவந்த திரிமானே, பெரேராவுடன் சேர்ந்தார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் லென்த் கிடைக்காமல் வீசிய பந்துகளை சரியாகப் பயன்படுத்தி பவுண்டரிகளாக விளாசி ஸ்கோரை உயர்த்தினர். இலங்கை அணியின் ஸ்கோர் சென்ற வேகம், 300 ரன்களை எட்டும் வகையில் இருந்தது.

ஆனால், முகமது நபி வீசிய 22 ஓவரில் ஆட்டம் தலைகீழானது. 22 ஓவரின் 2-வது பந்தில் திரிமானே 25 ரன்களில் ஆட்டமிழந்தார், அடுத்துவந்த மென்டிஸ் 2 ரன்னில் 4-வது பந்திலும், 6-வது பந்தில் மேத்யூஸ் டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். முகமது நபி வீசிய ஒரே ஓவரில் 3 விக்கெட் சரிந்தது.

 

அதன்பின் வந்த இலங்கை பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட சரியாக பேட் செய்யாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த டி சில்வா(2), டிசி பெரேரா டக்அவுட்டிலும் வெளியேறினர். தொடக்க வீரர் ஜே பெரேரா 78 ரன்கள் சேர்்த்து ரஷித்கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

 

ஒரு கட்டத்தில் 144 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த இலங்கைஅணி, அடுத்த 15 ரன்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மழையால் ஆட்டம் தடைபடும்போது 8 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி மீண்டும் ஆடவந்தபோது அடுத்த 21 ரன்களில் மீதம் இருந்த 2 விக்கெட்டுகளையும் இழந்தது.

 

ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமதுநபி 4 விக்கெட்டுகளையும், ஜத்ரன், ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்