டாப்... டாப் வின்: இந்தியாவில் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது- விராட் கோலி

லண்டனில் நடைபெற்ற உலகக்கோப்பை 2019-ன் 14வது ஆட்டத்தில் பரபரப்பான முறையில் ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

 

முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஷிகர் தவண் தன் வாழ்நாளின் மிக முக்கியமான இன்னிங்சை ஆடி 117 ரன்களை எடுக்க விராட் கோலி வழக்கம் போல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக என்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற பாணியில் 77 பந்துகளில் 82 ரன்கள் எடுக்க அனைத்தையும் விட மாஸ்டர் ஸ்ட்ரோக் ஹர்திக் பாண்டியாவை நம்பர் 4-ல் இறக்கி அவர் 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் வெளுக்க, கடைசியில் தோனி 14 பந்துகளில் 27 ரன்களையும் ராகுல் 3 பந்துகளில் 11 ரன்களையும் எடுக்க இந்திய அணி இந்த  உலகக்கோப்பையில் இதுவரை அதிகபட்ச ரன் எண்ணிக்கையை எட்டியது.  கடைசி 10 ஓவர்களில் 120 ரன்கள் விளாசப்பட்டது.

 

ஆஸ்திரேலிய அணியில் கமின்ஸ் நீங்கலாக அனைவருக்கும் சாத்துமுறை, ஸ்டார்க் 74 ரன்களையும் கூல்ட்டர் நைல் 63 ரன்களையும் மேக்ஸ்வெல், ஸாம்பா இணைந்து 13 ஓவர்களில் 95 ரன்களையும் கொடுக்க ஸ்டாய்னிஸ் 7 ஓவர்களில் 62/2 என்று முடிந்தார். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 316 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

ஆஸ்திரேலியா 40வது ஓவரில் ஸ்மித் (69) புவனேஷ்குமாரிடம் எல்.பி முறையில் அவுட் ஆகும் போது ஆஸ்திரேலியா 238/4 என்று இருந்தது, 10 ஓவர்களில் 116 ரன்கள் வெற்றிக்குத் தேவைப் பட்டது. ஆனால் 88 ரன்களையே அடித்து 6 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா, புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சாஹல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  ஹர்திக் பாண்டியா,குல்தீப் யாதவ் ஆகியோருக்கு சாத்துமுறை நடந்தது.

 

இந்த அபார வெற்றி குறித்து விராட் கோலி ஆட்டம் முடிந்து கூறும்போது,

 

“டாப்...  ஆஸ்திரேலியாவிடம் கடைசியாக தொடரை இழந்த பிறகு டாப் வின் ஆகும் இது. நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. எனவேதான் நாங்கள் ஒரு முனைப்புடன் களமிறங்கினோம். முதல் விக்கெட்டுக்கான கூட்டணி அற்புதம். பிறகு ஹர்திக், நான் தோனி.... பிட்ச் மட்டை பிட்ச் ஆகும், ஆனால் நாங்கள் தொழில்நேர்த்தியுடன் ஆடினோம் இது ஒரு கேப்டனாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

 

350 ரன்கள் இருக்கிறது என்பதற்காக நாம் எதையும் உத்தரவாதமாக எடுத்துக் கொள்ள முடியாது. நான் ஒரு முனையைக் காக்க, ஹர்திக்  முதல் பந்திலிருந்தே ஷாட் ஆடமுடிந்தது. ஷமி விளையாட வேண்டுமெனில் ஸ்விங்குக்கு ஆதரவான சூழல் நிலவ வேண்டும், மேகமூட்டமான வானிலை அவசியம்.  புவனேஷ் குமார் புதிய பந்து பழைய பந்து இரண்டிலும் சிறப்பாக வீசுகிறார்.

 

ஸ்மித், ஸ்டாய்னிஸ் விக்கெட்டுகள் ஒரே ஓவரி, மிக மிக முக்கியத்தருணத்தில் புவனேஷ்வரால் கைப்பற்றப்பட்டது.  இப்போது ஆடும் வீரர்கள் அனுபவசாலிகள் அவர்களிடத்தில் நாம் எதையும் குறிப்பாகக் கூற வேண்டும் என்பதில்லை” என்றார் கோலி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE