ஜேஸன் ரரய் காட்டடி சதம், பட்லர், பேர்ஸ்டோவின் அரைசதம், ஆர்ச்சரின் அதிவேகமான பந்துவீச்சு ஆகியவற்றால் கார்டிப்பில் நேற்று நடந்த உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் அணியை 106 ரன்களில் வீழ்த்தி இங்கிலாந்து அபாரமான வெற்றியைப் பெற்றது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் சேர்த்தனர். அடையமுடியாத இலக்கை துரத்திக்கொண்டு களமிறங்கிய வங்கதேச அணி 48.5 ஓவர்களில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்து 106 ரன்களில் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 7-வது முறையாக 300 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்துள்ளது.
இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகள் மூலம் புள்ளிப்பட்டியலில் ரன்ரேட் அடிப்படையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் இரு வீரர்கள் சதம் அடித்தும் 14 ரன்களில் அடைந்த அதிர்ச்சித் தோல்வியில் இருந்து விரைவாக மீண்டு இந்த வெற்றியை இங்கிலாந்து பெற்றுள்ளது.
ஆபத்தான பேட்ஸ்மேன்கள்
இங்கிலாந்து அணியில் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேன்கள் என்று சொல்லப்படுபவர்கள் பேர்ஸ்டோ, ஜேஸன் ராய், பட்லர் இவர்கள் மூன்று பேரையும் விரைவாக ஆட்டமிழக்கச் செய்துவிட்டால் எதிரணி வெற்றியை ஏறக்குறைய தொட்டுவிட்டதுபோலத்தான் ஆனால், இந்த 3 பேரில் ஒருவரை நிலைக்கவி்ட்டாலும் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறிவிடும் என்பதற்கு இந்த போட்டி சாட்சி
121 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் உள்பட 153 ரன்கள் சேர்த்த ஜேஸன் ராய் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு துணையாக பேர்ஸ்டோ 51, பட்லர் 64 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு வழிகாட்டினார்கள்.
தற்கொலை முடிவு
கார்டிப் ஆடுகளத்தில் லேசாக புற்கள் இருப்பதைக் கண்டு வங்கதேச கேப்டன் மோர்தசா பீல்டிங் தேர்வு செய்தது தற்கொலை முடிவுக்கு சமம். அதிலும் இங்கிலாந்து அணிக்கும் ஃபார்மில் அவர்களை முதலில் பேட் செய்ய அழைக்கவே கூடாது.
முடிந்தவரை முதலில் பேட் செய்து 300 ரன்களுக்கு மேல் அடித்து இங்கிலாந்தை சேஸிங் செய்ய அழைத்திருக்கலாம். அப்போது தங்களின் பந்துவீச்சு திறமையை பயன்படுத்தி சுருட்டலாம்.
ஆனால், ஆடுகளத்தின் புற்களை நம்பி முதலில் பேட் செய்ய அழைத்தது மோர்தசாவின் இமாலயத்தவறு. இந்த தவறுக்கான தண்டனையை நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டார்கள். ஜேஸன் ராய், பட்லர் இருவருக்கும் பேட்டிங் பயிற்சி அளித்து நன்றாக ஃபார்முக்கு கொண்டுவந்துள்ளார்கள்.
அதுமட்டுமல்லமல் 384 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கு அடிக்கப்படும்போதே எதிரணி பேட்ஸ்மேன்கள் தார்மீக ரீதியான நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். தகுதியான பேட்ஸ்மேன்கள் வரிசை இல்லாதவரை இலக்கு சாத்தியமில்லை.
அதிலும் வங்கதேசம் போன்ற முழுமையான வளர்ச்சி அடையாத அணிகளுக்கு இதுபோன்ற மிகப்பெரிய ஸ்கோர் பீதியை கிளப்பி இருக்கும். அதனால்தான் சகிப் அல்ஹசனைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 30 ரன்களைக் கூட தாண்டவில்லை.
உளவியல் தாக்குதல்
எதிரணியை மனரீதியாக, உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்தி, வீழ்ததும் இங்கிலாந்தின் மற்றொரு யுத்தியாகும். இதுபோன்ற மிகப்பெரிய ஸ்கோரை அடித்துவிட்டால் பந்துவீச்சாளர்கள்கூட சிரமமின்றி பந்துவீச முடியும்.
ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக விக்கெட் இன்றி, ரன்களை வாரி வழங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் நேற்று அசுரவேகத்தில் வீசினார். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 153கி.மீ வேகத்தில் நேற்று பந்துவீசி வங்கதேச பேட்ஸ்மேன்களை மிரளவைத்தார்.
வங்கதேசத்தின் பாதிக்கு மேற்பட்ட விக்கெட்டுகளை ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் அள்ளிக்கொண்டார்கள்.
வங்கதேச அணி பந்துவீச்சிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை கொடுக்கும் வகையில் பந்துவீசவில்லை. லைன் லென்த் இல்லாமல் வீசப்பட்ட பந்துகள் ராய், பட்லர், பேர்ஸ்டோவுக்கு அல்வா வழங்கியதுபோல் இருந்தது.
அதிரடித் தொடக்கம்
டாஸ்வென்ற வங்கதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் ஜேஸன் ராய், பேர்ஸ்டோ நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தார்கள். தொடக்கத்தில் இருந்தே வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்த இருவரும் அரைசதம் அடித்தனர். ராய் 38 பந்துகளிலும், பேர்ஸ்டோ 48 பந்துகளிலும் அரைசதம அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தநிலையில், பேர்ஸ்டோ 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த ரூட், ராயுடன் இணைந்தார். ராய் ஒருபுறம் காட்டடியில் கலக்க, ரூட் நிதானமாக பேட் செய்தார். அதிரடியாக ஆடிய ராய் 92 பந்துகளில் தனது ஒருநாள் அரங்கில் 9-வது சதத்தை நிறைவு செய்தார். ரூட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்தனர்.
ராய் சதம்
அடுத்து பட்லர் களமிறங்கி, ராயுடன் சேர்ந்தார். ராயின் ரன் குவிப்பை வங்கதேச பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. பட்லரும் சேர்ந்து அதிரடியில் இறங்கியதால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ராய் 120 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். அடுத்த சில நிமிடங்கள் மட்டுமே பேட் செய்த ராய் 153 ரன்களில் வெளியேறினார்.
பட்லர் அதிரடி
அடுத்துவந்த மோர்கன், பட்லருக்கு ஒத்துழைப்பு வழங்க ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பட்லர் அதிரடியாக ேபட் செய்து, 33 பந்துகளில் அரைசதம் அடித்து 44 பந்துகளில் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். 4-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்்த்தனர். அடுத்த சிறிதுநேரத்தில் மோர்கன் 36 ரன்னிலும், ஸ்டோக்ஸ் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
மோசமான பந்துவீச்சு
வோக்ஸ் 18 ரன்னிலும், பிளங்கெட் 27 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 386 ரன்கள் குவித்தது. வங்கதேசம் தரப்பில் அனைத்து பந்துவீச்சாளர்களும் சராசரியாக ஓவருக்கு 8 ரன்கள் வழங்கினார். சைபுதீன், மிராஜ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சகிப் அல் ஹசன் ஆறுதல்
387 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. வோக்ஸ், ஆர்ச்சரின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்திலேயே வங்கதேச அணி விக்கெட்டை இழந்தது. சவுமியா சர்க்கார் 2 ரன்னில் ஆர்ச்சர் வேகத்தில் போல்டாகினார்.
அடுத்துவந்த அனுபவ வீரர் சகிப் அல் ஹசன், இக்பாலுடன் சேர்ந்தார். நிதானமாக ஆடிய இக்பால் 19 ரன்னில் மார்க் வூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஹசனுடன், முஸ்பிகுர் ரஹிம் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக ஆடிய ஹசன் அரைசதம் அடித்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 103 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். ரஹிம் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த வீரர்கள் யாரும் ஹசனுக்கு ஒத்துழைத்து பேட் செய்யவில்லை. மிதுன் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மகமதுல்லா சிறிதுநேரம் விளையாடி 28ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக பேட் செய்த ஹசன் 95 பந்துகளில் சதம் அடித்து 121 ரன்னில் ஆட்டமிழந்தார் இதில் ஒரு சிக்ஸர், 12 பவுண்டரி அடங்கும்.
அதன்பின் வந்த மொசாடக் ஹூசைன்(28), சைபுதீன்(5), மிராஜ்(12), ரஹ்மான்(0) என ஆட்டமிழக்க 48.5 ஓவர்களில் 280 ரன்களுக்கு வங்கதேசம் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும், மார்க் வூட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago