லண்டன் கெனிங்டன் ஓவலில் நடைபெறும் உலகக்கோப்பை 2019-ன் 5வது ஆட்டத்தில் நல்ல பேட்டிங் பிட்சில் டாஸ் வென்று முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்த தென் ஆப்பிரிக்கா அணி தன் மோசமான பீல்டிங், பந்து வீச்சு, கவனமற்ற கேப்டன்சி காரணமாக வங்கதேச அணியை 330 ரன்கள் குவிக்க அனுமதித்தது. ஒருநாள் போட்டிகளில் வங்கதேசம் எடுத்த அதிகபட்ச ஸ்கோரானது இது.
டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்யும் போது கூடுதல் வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்தது வங்கதேசத்தை நொறுக்கவே என்றார் கேப்டன் டுப்ளெசிஸ், ஆனால் நொறுக்கியது என்னவோ வங்கதேசம்தான்.
வங்கதேசத்தின் சவுமியா சர்க்கார் (30 பந்துகளில் 42 ரன்கள்) அதிரடித் தொடக்கம் கொடுக்க ஷாகிப் அல் ஹசன் (75), முஷ்பிகுர் ரஹிம் (78), இணைந்து 3வது விக்கெட்டுக்காக மிக முக்கியமான 142 ரன்களைச் சேர்க்க கடைசியில் மஹமுதுல்லா, மொசாடக் ஹுசைன் வெளுத்துக் கட்ட வங்கதேசம் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்கள் குவித்துள்ளது.
லுங்கி இங்கிடி 4 ஓவர்களில் 34 ரன்கள் விளாசப்பட்ட நிலையில் பெவிலியன் சென்றவர் திரும்பவில்லை, அவரது 6 ஓவர்களை மார்க்ரம், டுமினி 5 மற்றும் 1 ஓவர் என்று முறையே பிரித்துக் கொள்ள அந்த 6 ஓவர்களில் 48 ரன்களை விளாசியது வங்கதேசம். சரி இங்கிடி மட்டும் என்ன நன்றாக வீசினாரா என்றால் அவரும் பவுண்டரிகளை வாரி வழங்கினார்.
சவுமியா சர்க்கார் அதிரடி:
தொடக்க ஓவர்களிலேயே சவுமியா சர்க்கார் 6 பவுண்டரிகளை இங்கிடியை மட்டும் விளாசினார், தமிம் இக்பால் இங்கிடியை ஒரு பவுண்டரி விளாச 7 பவுண்டரிகளை 4 ஓவர்களில் கொடுத்து 34 ரன்கள் கொடுக்க தமிம் இக்பால் 16 ரன்களே எடுத்திருந்தாலும் வங்கதேசம் 8 ஓவர்களில் 60 என்ற அதிரடி தொடக்கம் கண்டது.
தமிம் இக்பாலை 16 ரன்களில் பெலுக்வயோ அருமையான வெளியே எடுத்த பந்தில் எட்ஜ் செய்ய வைத்தார், டி காக் கேட்ச் எடுத்தார். சவுமியா சர்க்கார் அதிரடி ஆட்டம் கலக்கியது. ஒருமுறை இங்கிடி பந்தில் எட்ஜ் ஆனது, ஆனால் ஸ்லிப்பில் மார்க்ரம், டுபிளெசிஸ் இருவரும் ஒருவரையொருவர் வேடிக்கைப் பார்க்க இடைவெளியில் கேட்ச் பிடிக்கக் கூடிய உயரத்தில் பந்து பவுண்டரிக்குப் பறந்தது.
பெரும்பாலும் ஷார்ட் பிட்ச் பந்துகளை பயன்படுத்தி வெஸ்ட் இண்டீஸைப் பார்த்து சூடுபோட்டுக் கொண்டதில் சவுமியா சர்க்கார் 30 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 42 எடுத்து 2வது விக்கெட்டாக ஷார்ட் பிட்ச் பந்துக்குத்தான் விழுந்தார், ஆனால் பந்து மெது ரகம், புல் ஷாட் சரியாக சிக்கவில்லை டி காக் ஓடிச்சென்று விழுந்து பிடித்தார்.
75/2 என்ற நிலையில் இம்ரான் தாஹிரைக் கொண்டு வந்து நெருக்கடி கொடுக்க வேண்டிய டுபிளெசிஸ் கோட்டை விட்டார். பவர் ப்ளேயிலேயே ஒரிரு ஓவர்களைக் கொடுத்திருக்க வேண்டும் இல்லையெனில் பவர் ப்ளே 10 ஓவர் முடிந்த பிறகாவது கொடுத்திருக்க வேண்டும். ஆனால் முஷ்பிகுர் ரஹிம், ஷாகிப் அல் ஹசன் நன்றாகச் செட்டில் ஆன பிறகு அதுவும் மார்க்ரமின் லாலிபாப் பவுலிங்கை முதலில் கொண்டு வந்து பிறகு இம்ரான் தாஹிரை 18வது ஓவரில் கொண்டு வந்தார். இம்ரான் தாஹிரை கொண்டு வரும்போது 17 ஓவர்களில் 106 என்று ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் ரன் ரேட் இருந்தது. இம்ரான் தாஹிர் தன் முதல் ஸ்பெல்லில் 3 ஓவர்கள் 18 ரன்கள் கொடுத்து கட் செய்யப்பட்டார். இந்தக் கட்டத்தில் டுபிளெசிஸ் நெருக்காமல் எளிதான சிங்கிள்களை எடுக்குமாறு பீல்டிங் அமைப்பைத் தளர்த்தி தவறு செய்தார். மொத்தத்தில் முனைப்பற்ற ஒரு கேப்டன்சி.
ஷாகிப், முஷ்பிகுர் சாதனை 142 ரன் கூட்டணி:
இதனால் ஷாகிப், முஷ்பிகுர் இணைந்து 142 ரன்களை விரைவு கதியில் சவாலின்றி சேர்க்க முடிந்தது, தென் ஆப்பிரிக்க பீல்டிங்கும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை, கப்பை வழியாக பவுண்டரி விட்டனர். 2 கேட்ச்கள் கோட்டை விடபட்டது. 142 ரன்கள் பார்ட்னர்ஷிப் தெ.ஆ.வுக்கு எதிரான 3வது விக்கெட் அதிகபட்ச கூட்டணியாகும், மேலும் உலகக்கோப்பையில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகபட்ச வங்கதேசக் கூட்டணியாகவும் இது அமைந்தது.
ஷாகிப் அல் ஹசன் 84 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 75 ரன்கள் எடுத்து ஸ்வீப் ஆட முயன்று தாஹிர் பந்தில் பவுல்டு ஆனார். மொகமது மிதுன் இறங்கி அவர் அனாயாச பேட்டிங்கில் 21 பந்துகளில் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 21 எடுத்து இம்ரான் தாஹிர் பந்தை மிட்விக்கெட் மேல் தூக்கி அடிக்கப் பார்த்தார், ஆனால் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது. 39.4 ஒவர்களில் வங்கதேசம் 242/4 என்று இருந்தது.
அதன் பிறகு ஒரு முனையில் அபாரமாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 80 பந்துகளில் 78 ரன்கள் எடுத்த நிலையில் ஷார்ட் அண்ட் வைடு பெலுக்வயோ பந்தை பாயிண்ட் தலைக்கு மேல் தூக்கினார் ஆனால் அங்கு டூசன் கேட்ச் ஆக்கினார். 42.1 ஒவர்களில் 250/5 என்ற நிலையிலாவது சுதாரித்து கட்டுப்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் தென் ஆப்பிரிக்காவின் உடல்மொழியில் எந்த ஒரு ஆக்ரோஷமும் இல்லை, ரபாடாவின் யார்க்கர்கள் என்னவாயிற்று? வரவில்லை.
மஹமுதுல்லா, மொசாடெக் 330க்குக் கொண்டு சென்றனர்
கிறிஸ் மோரிஸ் மீண்டும் மீண்டும் வாகாக வீசிக்கொண்டேயிருக்க மஹமுதுல்லா, மொசாடெக் ஹுசைன் சேர்ந்து பிரித்து மேய்ந்து சுமார் 7 ஓவர்களில் 66 ரன்களை விளாசித்தள்ளினர். பெலுக்வயோ வீசிய 45வது ஓவரில் 2 பவுண்டரிகளை மொசாடெக் அடிக்க 271/5 என்று இருந்தது. 46வது ஓவரை ரபாடா டைட்டாக வீச 5 ரன்களே வந்தது.
ஆனால் 47வது ஓவரில் முதல் பந்திலேயே கிறிஸ் மோரிஸ் பந்தை மஹ்முதுல்லா தூக்கி அடிக்க டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்சை விட்டார் ரபாடா. அது 4 ரன்களாக மேலும் 2 பவுண்டரிகளை அதே ஓவரில் மொசாடெக் விளாசினார். ஷார்ட் பிட்ச் அல்லது புல் பந்து என்று வாஹாக வீசினார் மோரிஸ். 48வது ஒவரில் பெலுக்வயோ பவுண்டரியே கொடுக்கவில்லை ஆனால் 11 ரன்கள் வந்தது, காரணம் வைடுகள், ஓவர்த்ரோக்கள், வங்கதேசம் 300 ரன்களைக் கடந்தது.
48 ஓவர்களில் 302/5. கடைசி 2 ஒவர்களில் 28 ரன்கள் விளாசப்பட்டது, காரணம் மோரிஸ் வீசிய 49வது ஓவரில் மொசாடெக் விக்கெட்டுடன் 14 ரன்கள் வந்தது, மொசாடெக் 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து முக்கியப் பங்களிப்பைச் செய்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஒவரை ரபாடா வீசினார். முதல் பந்து லெக் ஸ்டம்பில் வாகாக உட்கார மஹமுதுல்லா டீப் ஸ்கொயர் லெக் மேல் சிக்ஸ் தூக்கினார். மெஹதி ஹசன் காலை ஒதுக்கிக் கொண்டு உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவை பவுண்டரிக்கு அனுப்பினார். 14 ரன்கள் வர 330 ரன்கள் எடுத்தது வங்கதேசம்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் கிறிஸ் மோரிஸ் சாத்துமுறைக்கு ஆட்பட்டு 10 ஓவர் 73 ரன்கள் 2 விக்கெட், ரபாடா 10 ஓவர் 57 ரன் இல்லை. பெலுக்வயோ 10 ஓவர் 52 ரன் 2 விக்கெட். இம்ரான் தாஹிர் 10 ஒவர் 57 2 விக்கெட். இம்ரான் தாஹிரை டுப்ளெசிஸ் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் ஒருவேளை 30 ரன்களை குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. லுங்கி இங்கிடி காயமடைந்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago