‘முற்றிலும் மூளையற்ற பேட்டிங்’ - இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் பாப் வில்லிஸ், ராபின் ஸ்மித் காட்டம்

இலங்கைக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில் அரிதனா ஒரு குறைந்த ரன் எண்ணிக்கைப் போட்டியில் இங்கிலாந்து 20 ரன்களில் அதிர்ச்சித் தோல்வி கண்டது. மலிங்கா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இலங்கை அணியில் ஆஞ்சேலோ மேத்யூஸ் 85 ரன்களை அதிகபட்சமாக எடுக்க, அவிஷ்கா பெர்னாண்டோ என்ற அறிமுக வீரர் ஒன் டவுனில் இறங்கி 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 49 ரன்களை, ஆட்டம், பிட்சின் போக்குக்கு எதிராக ஆடியதும் இலங்கை பேட்டிங்கின் வித்தியாசத்தைக் காட்டியது.

 

ஆனால் இங்கிலாந்து இதற்கு முன்னர் 9 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 8 முறை 300 ரன்களைக் கடந்து ஸ்கோர் செய்துள்ளது, ஆனால் 233 ரன்கள் இலக்கை விரட்ட முடியாமல் மடிந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் முன்னாள் வீரர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதோடு மட்டுமல்லாமல் 500 அடிப்போம், 1000 அடிப்போம் என்றெல்லாம் சுயதம்பட்டம் அடித்துக் கொண்ட இங்கிலாந்து பரிதாபமாக 233 ரன்களை விரட்ட முடியாமல் தோல்வியடைந்தது, அதன் அரையிறுதி வாய்ப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. காரணம், அடுத்து வரும் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து தோல்வியடைந்தால் வெளியேற வேண்டியதுதான், இந்த அணிகளை உலகக்கோப்பைகளில் இங்கிலாந்து சமீபமாக வென்றதில்லை என்பதே புள்ளிவிவரங்கள் கூறும் உண்மையாகும்.

 

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர்களான ராபின் ஸ்மித், பாப் வில்லிஸ் ஆகியோர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் வானொலி விவாதத்தில் கலந்துரையாடும் போது கூறியதாவது:

 

அதிரடி பேட்டிங் லைன் அப் உள்ள இங்கிலாந்து 233 ரன்கள் இலக்கை வழக்கம் போல் அதிரடி முறையில் அணுகியிருக்க வேண்டும், அவர்கள் தங்கள் அதிரடி மீது நம்பிக்கை வைத்து அடித்து ஆடியிருக்க வேண்டும், அதை விடுத்து தடுப்பாட்டம் ஆடுகிறேன் என்று முற்றிலும் மூளையற்ற விதத்தில் ஆடினர். குறிப்பாக அவர்கள் இலங்கையின் அவிஷ்கா பெர்னாண்டோ, மேத்யூஸ் ஆகியோரது ஆட்டம் போல் ஆடியிருக்க வேண்டும்.

 

மேலும் இதற்கு முன்பு 300 ரன்களை அதிகமாக எடுத்துள்ள அணி இப்படி இந்த ஆட்டத்தை சொத்தையாக அணுகியிருக்கக் கூடாது. அதுவும் கடைசியில் மார்க் உட்டிடம் ஸ்ட்ரைக்கை பென் ஸ்டோக்ஸ் கொடுத்தது, அந்த ஒரு பந்திலும் தப்பிக்காமல் மார்க் உட் அவுட் ஆனது, மொயின் அலி, ஆர்ச்சர் ஆட்டமிழந்த விதங்கள், மூளையற்ற பேட்டிங் திறமையையே வெளிப்படுத்துகிறது.

 

அனைத்தையும் விட கவலையளிப்பது, பெரிய அதிரடி ஆட்டமெல்லாம் ஆடுகின்றனர், பெரிய வெற்றிகளைப் பெறுகின்றனர் இங்கிலாந்து அணியினர், ஆனால் உண்மையான நெருக்கடி ஏற்படுத்தப்படும்போது பின் வாங்கி சொதப்பலாக ஆடிவிடுகின்றனர், அழுத்தங்களை மீறி வெளியே வர முடியவில்லை, இது கவலையளிக்கும் ஒரு விஷயம்.

 

இதனை வரும் ஆட்டங்களில் மற்ற அணிகளும் பயன்படுத்தினால் கஷ்டம், ஆனாலும் அரையிறுதிக்குள் நுழைந்து விடும் இங்கிலாந்து, கவலையளிப்பது அழுத்தம் ஏற்றினால் சரணடையும் ஒரு அணுகுமுறை இங்கிலாந்திடம் இருப்பதே.

 

அன்று கேன் வில்லியம்சன் எப்படி கடைசி வரை அழுத்தத்தை சுமந்து வெற்றிக்கு இட்டுச் சென்றாரோ அதிலிருந்து குறைந்த இலக்கை விரட்டும் முறைக்கான அணுகுமுறையை இங்கிலாந்து பெற்றிருக்க வேண்டும், அல்லது தங்கள் அதிரடி ஆட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு முதலிலிருந்தே அடித்து ஆடி வென்றிருக்க வேண்டும், இரண்டும் இல்லாமல் இரண்டும்கெட்டானாக ஆடி தோல்வி தழுவியிருப்பது ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

 

இவ்வாறு ராபின் ஸ்மித், பாப் வில்லிஸ் தங்கள் கலந்துரையாடலில் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE