வாவ்…. இந்த மாதிரித்தான் ஆட்டம் இருக்கணும்.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இங்கிலாந்து, பாகிஸ்தான் போட்டி விருந்து படைத்துவிட்டது.
இங்கிலாந்தின் தோல்வி, பாகிஸ்தானின் வெற்றி உலகக் கோப்பைப் போட்டிகளின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.
வகாப் ரியாஸ், முகமது அமீர், ஹபீஸ், சதாப்கான் ஆகியோரின் போரட்டக்குண பந்துவீச்சால் உலகக் கோப்பைப் போட்டியில் நாட்டிங்ஹாமில் நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 14 ரன்களில் தோற்கடித்தது பாகிஸ்தான்.
கடைசி 10 ஓவர்களில் 91 ரன்கள் இங்கிலாந்து வெற்றிக்கு தேவை, கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தபோதிலும், பாகிஸ்தானின் டெத்ஓவர் பந்துவீச்சுதான் ஆட்டத்தை மாற்றியது.
இதன் மூலம் தொடர்ந்து 11 ஒருநாள் போட்டிகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்துவந்த பாகிஸ்தான் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பின் எந்ததொடரையும் வெல்லாமல் தோல்வியைச் சந்தத்துவந்த பாகிஸ்தான் அணிக்கு இப்போது கிடைத்த வெற்றி மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.
அதிலும் முதல் ஆட்டத்தில் மே.இ.தீவுகளிடம் 105 ரன்களுக்கு சுருண்டு மோசமான தோல்வியைச் சந்தித்தபின் மீண்டு எழுவது சாதரணமல்ல.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் சேர்த்தது. 349 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் மட்டுமே சேர்த்து 14 ரன்களில் தோல்வி அடைந்தது.
அதேபோல கடந்த 4ஆண்டுகளாக உள்நாட்டில் சேஸிங்கின் போது எந்தவிதமான தோல்வியையும் சந்தக்காத இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பையில் கிடைத்த இந்த தோல்வி அந்த அணியை கொஞ்சம் யோசிக்க வைக்கும்.
கடந்த 2011-ம்ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் 300 ரன்களுக்கு மேல் எந்த அணியும் சேஸி்ங் செய்யவில்லை எனும் சாதனை தொடர்கிறது. 2011-ல் பெங்களூரில் நடந்த போட்டியில் 328 ரன்கள் இங்கிலாந்து சேர்க்க, அதை 329 ரன்கள் அடித்து அயர்லாந்து சேஸிங் செய்தது குறிப்பிடத்தக்கது.
உலககக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியில் (ஜோ ரூட், பட்லர்) இரு பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தும், அந்த அணி தோல்வி அடைந்தது, இதுதான் முதல்முறையாகும்.
ஜோ ரூட் அடித்ததுதான் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அடிக்கப்பட்ட முதல் சதமாகும். ஜோஸ் பட்லர் 75 பந்துகளில் சதம் அடித்ததுதான் உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட சதமாகும். இரு முக்கிய விஷயங்கள் நிகழ்த்தியும் பாவம் இங்கிலாந்து தோல்வி அடைந்தது.
பாகிஸ்தான் அணியில் உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்கும்போது நிராகரிக்கப்பட்ட வகாப் ரியாஸ், முகமது அமீர் ஆகியோர்தான் ஆட்டத்தில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தி வெற்றிக்கு உதவினார்கள். யாரை வேண்டாம் என்று நிராகரித்தார்களோ அவர்களால் வெற்றி கிடைத்துள்ளது.
வகாப் ரியாஸ், முகமது அமீர், முகமது ஹபீஸ் ஆகியோர் ரன்களை வழங்கினாலும் முக்கியமான தருணத்தில் விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு வித்தி்ட்டார்கள். அதிலும் அமீர், வகாப் ஆகியோரின் அனுபவம் பாகிஸ்தானுக்கு பலம்.
பேட்டிங்கில் முகமது ஹபீஸ், பாபர் ஆசம், சர்பிராஸ் அகமது ஆகியோரின் அரைசதம் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியமாக பங்களிப்பு செய்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்தது, மிகப்பெரிய ஸ்கோரை எட்ட உதவியாக இருந்தது.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை நேற்றை ஆட்டத்தில் மட்டும் 13 மிஸ் பீல்டிங், 4 கேட்சுகளை தவறவிட்டது, 20 உதிரிகள், இந்த தவறுகளே தோல்விக்கு போதுமே. இதில் உதிரிகள் சார்பில் கொடுக்கப்பட்ட 20 ரன்களை கட்டுப்படுத்தி இருந்தாலே வெற்றி இங்கிலாந்து பக்கம் சென்றிருக்கும்.
அதுமட்டுமல்லாமல் ஜோப்ரா ஆர்ச்சர், வோக்ஸ், ரஷித் கட்டுப்பாடின்றி ரன்களை வாரி வழங்கியது இங்கிலாந்து செய்த தவறாகும். ஜோப்ரா ஆர்ச்சர் 79 ரன்கள் கொடுத்தும் விக்கெட் வீழ்த்தவில்லை பேட்டிங்கிலும் சொதப்பினார்.
அதுமட்டுமல்லாமல் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேஸன் ராய், பேர்ஸ்டோ, மோர்கன் ஆகியோர் ஏமாற்றம் அளிக்கும் வகையில் பேட் செய்தது பின்னால் களமிறங்கிய வீரர்களுக்கு நெருக்கடியை அதிகரித்துவி்ட்டது. ஜோ ரூட்,
349 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ராய், பேர்ஸ்டோ ஆட்டத்தை தொடங்கினார்கள். 8 ரன்கள் சேர்த்த நிலையில் சதாப்கானின் 3-வது ஓவரில் ராய் எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார்.
அடுத்துவந்த ரூட், பேர்ஸ்டோவுடன் இணைந்தார். அதிரடியாக சில பவுண்டரிகளையும், சிக்ஸரையும் அடித்த பேர்ஸ்டோ 32 ரன்கள் சேர்த்த நிலையில், வகாப் பந்துவீச்சில் கீப்பர் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்துவந்த மோர்கன் 9 ரன்னில் ஹபீஸ் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு வந்த ஸ்டோக்ஸ் 13 ரன்களில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 118 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரூட் 47 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சில் சொதப்புகிறார்களே என்று ரசிகர்கள் யோசித்தனர். 5-வது விக்கெட்டுக்கு பட்லர் களமிறங்கி, ரூட்டுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்தபின் ஆட்டத்தில் சூடுபறக்கத் தொடங்கியது.
ஒருநாள் போட்டியை டி20ஆட்டம் போல், சிக்ஸர், பவுண்டரி என பட்லர் அடித்து ஆட, ரூட் ஒத்துழைப்பு அளித்தார். 34 பந்துகளில் பட்லர் அரைசதம் அடித்தார். இருவரின் பாட்னர்ஷிப்பால் இங்கிலாந்து வெற்றியை நோக்கி நகர்ந்தது. சிறப்பாக பேட் செய்த ரூட் 97 பந்துகளில் சதம் அடித்தார்.
39-வது ஓவரை சதாப்கான் வீசியபோதுதான் திருப்புமுனை நடந்தது. தேர்டு மேன் திசையில் அடிக்கும் வகையில் தொடர்ந்து பந்துவீசி ரூட்டுக்கு வெறுப்பேற்றினார் சதாப்கான். பொறுமை இழந்த ரூட் ஒரு பந்தை கட்செய்து ஆட முயற்சித்தபோது, ஹபிஸிடம் கேட்ச்கொடுத்து 107ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். பட்லர், ரூட் ஜோடி 130 ரன்கள் சேர்த்துப்பிரிந்தது.
அடுத்துவந்த மொயின் அலி, பட்லருடன் சேர்ந்தார். நிதானமாக ஆடிய பட்லர் அணியை மெல்ல வெற்றி நோக்கி நகர்த்தினார். பட்லர் இருக்கும்வரை இங்கிலாந்து அணியின் நம்பிக்கை சாயவி்ல்லை.
45-வது ஓவரை முகமது அமீர் வீசினார். இந்த ஓவரில் பவுண்டரி அடித்து 75 பந்துகளில் சதம் அடித்தார் பட்லர். ஆனால் அடுத்தபந்தில் தேர்டு மேன் திசையில் நின்றிருந்த வகாப் ரியாஸிடம் கேட்ச் கொடுத்து 103 ரன்னில் ஆட்டமிழந்தார் பட்லர். இவர் கணக்கில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும்.
அதன்பின் வந்த வோக்ஸ், மொயின் அலி பேட் செய்தாலும், பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை அதிகரித்தனர். பவுன்ஸருக்கு திணறிய மொயின் அலியை 19 ரன்னில் வகாப் ரியாஸ் வெளியேற்றினார். அடுத்த பந்தில் வோக்ஸ் 21 ரன்கள் சேர்த்த நிலையில் சர்பிராஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் சென்றது.
ஆர்ச்சர் வந்தவேகத்தில் ஒரு ரன்னில் அமீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. வகாப் வீசிய ஓவரில் மார்க் வூட் 2 பவுண்டரிகள் அடித்தும் இங்கிலாந்து தோல்வி அடைந்தது.
50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் சேர்த்தது 14 ரன்னில் தோல்வி அடைந்தது.
பாகிஸ்தான் தரப்பில் வகாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளையும், சதாப்கான், அமீர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முன்னதாக டாஸ்வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து தரப்பில் பிளங்கட்டுக்கு பதிலாக மார்க் உட் சேர்க்கப்பட்டார். பாகிஸ்தானில் இமாத் வாசிம், ஹாரிஸ் சோஹைல் நீக்கப்பட்டு ஆஷிப் அலி, ஷோயப் மாலிக் பக்கர்ஜமான், இமாம் உல் ஹக் நிதானமாகத் தொடங்கி அதன்பின் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர். பாகிஸ்தான் 10 ஓவர்களில் 69 ரன்கள் சேர்த்தது.
முதல் விக்கெட்டுக்கு இருவரும் 82 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பக்கர் ஜமான் 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பாபர் ஆசம் களமிறங்கி, இமாம் உல்ஹக்குடன் சேர்ந்தார்.
அரைசதம் நோக்கி முன்னேறிய இமாம் உல்ஹக் 44 ரன்கள் சேர்த்த நிலையில் மொயின் அலி வீசிய 21-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இவருக்கு வோக்ஸ் பிடித்த கேட்ச் மிக அற்புதமானது.
அடுத்து முகமது ஹபிஸ் களமிறங்கி, பாபர் ஆசமுடன் சேர்ந்தார். ஹபீஸ் 39 பந்துகளில் அரைசதத்தையும், பாபர் ஆசம் 50 பந்துகளில் அரைசதத்தையும் அடித்தனர். 3-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த நிலையில், இருவரும் பிரிந்தனர். பாபர் ஆசம் 63 ரன்களில் மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு கேப்டன் சர்பிராஸ் அகமது வந்து, ஹபீஸுடன் சேர்ந்தார். இருவரும் தொடக்கத்தில் மந்தமாக ஆடிய பின்னர் வேகமாக ரன்களைச் சேர்த்தனர். 40-வது ஓவரில் பாகிஸ்தான் அணி 250 ரன்கள் சேர்த்து. கேப்டன் சர்பிராஸ் அகமது 40 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
சதத்தை நோக்கி முன்னேறிய ஹபீஸ் 84 ரன்கள் சேர்த்த நிலையில் மார்க்உட் பந்துவீச்சில் வோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்தனர்.
அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் ஆஷிப்அலி(14), சோயிப் மாலிக்(8), வகாப் ரியாஸ்(4) ரன்களில் வெளியேறினர். கேப்டன் சர்பிராஸ் அகமது 55ரன்களில் ஆட்டமிழந்தார். ஹசன்அலி, சதாப்கான் தலா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், மொயின் அலி தலா 3 விக்கெட்டுகளையும், மார்க்வூட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago