வாலிபால் வீரர்கள் விவகாரம்: முதல்வர் தலையிட கோரிக்கை

By ஏ.வி.பெருமாள்

ஆசிய இளையோர் வாலிபால் போட்டிக்காக இலங்கை சென்றிருந்த தமிழக வாலிபால் வீரர்கள் திரும்ப அழைக்கப் பட்டதும், பயிற்சியாளர் ஆண்டனி, விடுதி மேலாளர் நாகராஜன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் தமிழக விளையாட்டு வீரர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வீரர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்பில் வெள்ளிக்கிழமை (செப்.5) தொடங்கிய 10-வது ஆசிய இளையோர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. அதில் தமிழக அரசின் சிறப்பு விளையாட்டு விடுதியைச் சேர்ந்த ஹரிஹரன், மனோஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் ஹரிஹரன் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

சென்னை திரும்பிய வீரர்கள்

வீரர்கள் இருவரும் இந்திய அணியுடன் இலங்கை புறப்பட்டு சென்ற நிலையில், அவர்களுக்கு அனுமதி வழங்கிய சென்னை நேரு மைதானத்தில் உள்ள அரசு சிறப்பு விளையாட்டு விடுதியின் மேலாளர் நாகராஜன், பயிற்சியாளர் ஆண்டனி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி). இதுதவிர சென்னை நேரு மைதானத்தில் உள்ள தமிழ்நாடு வாலி பால் சங்க அலுவலகத்தை உடனடியாகக் காலி செய்ததோடு, சம்பந்தப்பட்ட இரு வீரர் களையும் உடனடியாக நாடு திரும்ப எஸ்டிஏடி உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து தமிழக வாலி பால் வீரர்கள் ஹரிஹரன், மனோஜ் ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை விமானம் மூலம் சென்னை திரும்பினர். கனவு கலைந்துபோன சோகத்தை அடக்க முடியாமல் கண்களில் கண்ணீர் ததும்ப சென்னை வந்த அவர்கள் எஸ்டிஏடி அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் அவர் களுடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கேள்விக்குறியான எதிர்காலம்

ஏமாற்றத்தையும் விரக்தியையும் சுமந்து கொண்டு ஊர் திரும்பிய அவர்களின் எதிர்காலம் இனி என்னவாகும்? அவர்கள் மீண்டும் சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்களா? மீண்டும் வாலிபால் போட்டியில் விளையாட அனுமதிக்கப்படுவார்களா? சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் விடுதி மேலாளர், பயிற்சியாளர் ஆகியோரின் கதி என்ன? இந்த கேள்விகளுக்கெல்லாம் யாரிடமும் பதில் இல்லை.

சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும், அதில் வாகை சூடவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு விளையாட்டு வீரனின் வாழ்க்கையிலும் உச்சபட்ச கனவாக இருக்கும். ஆனால் ஹரிஹரனுக்கும், மனோஜுக்கும் அந்த வாய்ப்பு மிக அருகில் வந்து மறுக்கப் பட்டிருக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமானால் சம்பந்தப் பட்ட வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பிருந்தது. ஆனால் இப்போது அவர்களின் கனவு சிதைந்து போயிருக்கிறது.

சம்பந்தப்பட்ட இருவரும் முன்னணி வீரர்கள் ஆவர். அவர்கள் போட்டி யிலிருந்து விலகிவிட்டதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்படியொரு சூழல் ஏற்படுமானால் வருங்காலங்களில் நடைபெறும் போட்டி களில் தமிழக வீரர்களை இந்திய வாலி பால் சம்மேளனம் புறக்கணிக்கலாம் என மற்ற வாலிபால் வீரர்கள் அச்சம் தெரிவித் துள்ளனர்.

பலிகடாவான அலுவலர்கள்

இது தொடர்பாக எஸ்டிஏடி அதிகாரி ஒருவர் கூறுகையில், “அரசின் கொள்கை முடிவு காரணமாகவே மேற்கண்ட நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன” என்றார்.

இந்தப் போட்டி தொடர்பாக எஸ்டிஏடி யிடமும் தெரிவிக்கப்பட்டிருக் கிறது. ஆனால் ஆரம்பத்தில் எந்த மறுப்பும் தெரிவிக்காத எஸ்டிஏடி அதிகாரிகள், தங்களுக்கு எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இரு அலுவலர்களை சஸ்பெண்ட் செய்த தோடு, வாலி பால் சங்க அலுவலகத்தையும் இழுத்து மூடியதாகக் கூறப்படுகிறது.

அரசின் கொள்கை முடிவில் யாருக்கும் மாற்றமிருக்க முடியாது. ஆனால் இலங்கையுடனான நட்புறவு போட்டியிலோ அல்லது இருநாடுகள் இடையிலான போட்டியிலோ மேற்கண்ட வீரர்கள் பங்கேற்க செல்லவில்லை. ஆசிய அளவிலான போட்டியில் அதுவும் இந்திய அணிக்காகவே விளையாட சென்றுள்ளனர்.

காரணம் என்ன?

தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் விளையாடி வருகி ன்றனர். இன்னும் இரு வாரங்களில் தொடங்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை சந்திக்கிறது. இந்திய அணியில் தமிழக வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ஹரிஹரனும், மனோஜும் அரசின் சிறப்பு விளையாட்டு விடுதி யில் இருந்தார்கள் என்ற ஒரே காரணத் துக்காக போட்டியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவிலான போட்டிகள் என்று வரும்போது அது வெவ்வேறு நாடுகளில்தான் நடத்தப்படும். அது எங்கு நடத்தப்பட வேண்டும் என்பதை தனிப்பட்ட ஒருவரோ, வீரர்களோ முடிவு செய்ய முடியாது. ஒலிம்பிக் போட்டியோ, காமன்வெல்த் போட்டியோ இலங்கையில் நடைபெறுமானால் அதில் பங்கேற்காமல் புறக்கணிக்க முடியுமா?

வீரர்கள் அதிர்ச்சி

தனிநபர் விளையாட்டுகளில் உள்ள வர்கள் தாய்நாட்டுக்காக விளையாட முடியாது. எங்களின் தனிப்பட்ட போட்டிகளுக்கே முக்கியத்துவம் என போர்க்கொடி தூக்கி வரும் வேளையில் தாய்நாட்டுக்காக விளையாட சென்ற இந்த இளம் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை சக வீரர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

தமிழக விளையாட்டுத் துறையை மேம்படுத்த முதல்வர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் வாலிபால் வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டிருப்பதும், பயிற்சியாளர் உள்ளிட்ட இரு அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதும் தமிழக வீரர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்காக ஆண்டு தோறும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் முதல்வர், இந்த விஷயத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட வீரர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் இரு அலுவலர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டு வீரர்களின் நலன் கருதி அனைத்து நாடுகளில் நடை பெறும் சர்வதேச போட்டிகளிலும் தமிழக வீரர்கள் பங்கேற்க முதல்வர் அனுமதி வழங்க வேண்டும் என்பதே விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்பு.

மாநில அரசின் விருது பெற்றவர்

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள விளையாட்டு விடுதி மேலாளர் நாகராஜன், வேலூரில் 24 ஆண்டுகள் பளுதூக்குதல் பயிற்சியாளராக பணியாற்றியவர். சமீபத்தில் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ், ஆரம்ப காலத்தில் நாகராஜனால் பட்டை தீட்டப்பட்டவர். இதுதவிர இவரிடம் பயிற்சி பெற்ற 100-க்கும் மேற்பட்டோர் விளையாட்டு ஒதுக்கீட்டில் மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். இவர் 2007-ல் தலைசிறந்த பயிற்சியாளருக்கான தமிழக அரசின் விருதை வென்றவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்