மதி மயங்கியது ஏனோ ஸ்டீவ் ஸ்மித் ?

By பெ.மாரிமுத்து

மீண்டும் ஒரு முறை ஸ்டீவ் ஸ்மித்துக்கு மதி மயங்கியுள்ளது. ஜென்டில்மேன் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் சரியாக திட்டமிட்டு ஏமாற்றி, மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளார்.

 தனது செயலால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய தேசத்துக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளார் ஸ்மித். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமராவில் பதிவானது. இதன் பின்னரே பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துவிடக்கூடாது என தாமாகவே முன்வந்து, ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதற்காக திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தினோம் என்று ஒப்புக்கொண்டார் ஸ்டீவ் ஸ்மித்.

எப்போதும் தனக்கு நிகரான திறமையை வெளிப்படுத்தக்கூடிய அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி எல்லை மீறி செயல்படுவது ஒன்றும் புதிதல்ல. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியதில் இருந்தே அந்த அணி வீரர்களுக்கு எதிராக உளவியல் ரீதியிலான தாக்குதல்களை ஆஸ்திரேலியா தொடுக்க ஆரம்பித்தது. இது அவர்களுக்கு கைவந்த கலைதான். பல சகாப்தங்களாகவே, எதிரணியின் திறன் ஊடாக ஆட்டத்தை சந்திப்பதை விட அவர்களை உளவியல் ரீதியாக சிதைவுபடுத்தி, கவனச்சிதறல்களை உருவாக்கி அதன் மீது சவாரி செய்துதான் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்ற பரவலான கருத்தும் உண்டு.

அதிலும் 2015-ம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றதும், வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என்று எழுதப்படாத கோட்பாடை ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுக்குள் நிலைநிறுத்திக் கொண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. கேப்டனாக பொறுப்பேற்றது முதல், உலக கிரிக்கெட் அரங்கில் ஸ்மித் தன்னை ஆகச்சிறந்த பேட்ஸ்மேனாக நிலைப்படுத்திக் கொண்டார். ஆனால் களத்தில் எதிரணியினருடன் அவர், கடைப்பிடிக்கும் மனப்பாங்கால் தனது புகழுக்கு அவரே அழிவை தேடிக் கொண்டுள்ள நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மிகைமையான அசைவுகள் மற்றும் மரபு வழியில்லாத இடது கை பேட்ஸ்மேனான ஸ்மித் சமீபகாலமாக ஜாம்பவான் சர் டொனால்டு பிராட்மேனுடன் ஒப்பிடப்பட்டு வந்தார். அதற்கு தகுந்தாற்போல் தனது பேட்டிங் திறனை வலுவான நிலையில் இருந்து மிகவலுவான நிலைக்கு பயணிக்கச் செய்து கொண்டே இருந்தார். இதனால் பேட்ஸ்மேனாக அவரது நன்மதிப்பு ஏறுமுகமாகவே இருந்தது. அதேவேளையில் அணியை அவர், மூர்க்கத்தனமாக வழிநடத்திய போதிலும் அது ஆக்ரோஷமான வழியே என விளக்கம் கற்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்காவில் அவர், பந்தை சேதப்படுத்தும் சதிக்கு மூளையாக செயல்பட்டதன் மூலம் ஏமாற்றுப் பேர்வழி என்ற பட்டத்தை பெற்றுள்ளார். இதன் விளைவால் கேப்டன் பதவி அவரிடம் இருந்து தற்போதைக்கு பறிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்குள் ஸ்மித், ஒரு லெக் ஸ்பின்னராகத்தான் நுழைந்திருந்தார். 1989-ம் ஆண்டு சிட்னியில் பிறந்த ஸ்மித் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 2008-ம் ஆண்டு நியூசவுத்வேல்ஸ் அணிக்காக அறிமுகமானார். அடுத்த 2 வருடத்தில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்த அவர், தேசிய அணிக்கு தேர்வானார். பேட்டிங் வரிசையில் அப்போது ஸ்மித் 8-வது வீரராக களமிறங்கி வந்தார். 2010-2011ம் ஆண்டு நடைபெற்றற ஆஷஸ் தொடரில் ஸ்மித் திடீரென நீக்கப்பட்டார். இதன் பின்னர் 2013-ம் ஆண்டு அணிக்கு திரும்பிய ஸ்மித், இந்தியாவுக்கு எதிரான மொகாலி டெஸ்ட்டில் 92 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதுதான் அவரை பேட்ஸ்மேனாக அறியவைத்தது.

இதன் பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான ஓவல் டெஸ்டில் தனது முதல் சதத்தையும், அதைத் தொடர்ந்து சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இரு சதங்கள் விளாசியும் தேர்வுக்குழுவினரின் நம்பிக்கையை மீட்டெடுத்தார். 2014-15ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் மைக்கேல் கிளார்க் காயம் அடைந்ததால் எஞ்சிய 3 ஆட்டங்களுக்கும் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார். ஏற்கெனவே முதல் டெஸ்ட்டில் ஸ்மித் சதம் விளாசிய நிலையில், அடுத்த 3 போட்டிகளிலும் கேப்டன் பதவியில் எந்த நெருக்கடியும் இல்லாமல் சதம் விளாசி மிரளச் செய்தார். இதுதான் கிளார்க்குக்கு பிறகு அணியை வழிநடத்த சரியான நபர் ஸ்மித்தான் என்ற கருத்துக்கு வழிகோலாக அமைந்தது.

சமீபத்தில் ஆஷஸ் தொடரில் தனது அசாதாரண பேட்டிங் நுட்பத்தால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் வீழ்த்த முடியாத வீரராக உருவெடுத்தார். அதிலும் பெர்த் டெஸ்டில் 239 ரன்கள் விளாசி தனது அதிகபட்ச ரன் குவிப்பை பதிவு செய்த அவர், தொடர்ச்சியாக 4-வது ஆண்டாக ஆயிரம் ரன்கள் குவித்தவர் என்ற மைல்கல் சாதனையும் நிகழ்த்தினார். 28 வயதிலேயே கேப்டன் பொறுப்பால் தனது பேட்டிங் திறன் பாதிக்காத வகையில் ஒவ்வொரு ஆட்டத்திலும் தன்னை மெருகேற்றிக் கொண்டு ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் வீரராக வலம் வந்தார்.

26 வயதில் ஸ்மித், கேப்டன் பொறுப்பை முழுமையாக ஏற்ற போதிலும் அவர் செய்த தவறுகளையோ, எதிரணியிடம் நடந்து கொள்ளும் விதங்களையோ ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒருபோதும் கண்டித்ததாக தெரியவில்லை. கடந்த ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தில் பெங்களூருவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் போது, டிஆர்எஸ் முறையை பயன்படுத்துவதா, வேண்டாமா என களத்தில் இருந்தபடியே ஸ்மித், ஓய்வறையை நோக்கி சைகையில் கேட்டார். இதுதொடர்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகார் செய்தார். அப்போது மதி மயங்கி இந்த செயலை செய்துவிட்டேன் என்று வெளிப்படையாக தெரிவித்தார் ஸ்மித்.

இந்த விஷயத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவருக்கு முழு ஆதரவை தெரிவித்தது. ஸ்மித்தை போன்று ஒழுக்கமான வீரர் உலகில் யாருமே இல்லை எனவும் வாதிட்டது. கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக கொண்ட ஒரு அணியின் கேப்டனுக்கு, களத்தில் இருக்கும் போது வெளியில் இருந்து எந்தவித ஆலோசனையையும் பெறக்கூடாது என்ற அடிப்படை விதிகூடவா தெரியாமல் இருந்திருக்கும். களத்தில் நடுவரே ஸ்மித்தின் தவறை கண்டுபிடித்து வெளியேற்றிய போதிலும், அவருக்கு எந்தவித தண்டனையும் வழங்கப்படவில்லை. கடுமையான தண்டனைகள் இல்லாததும், எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு கொடுக்கும் வாரியத்தாலும் தான், ஸ்மித்தும் அவரது சக வீரர்களும் களத்தில் எல்லையை மீறி நடந்துகொள்கிறார்களோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

2016-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான கிறைஸ்ட்சர்ச் டெஸ்டில் தனக்கு அவுட் வழங்கியதற்காக நடுவரிடம் கடும் வாக்குவாதம் செய்தார் ஸ்மித். அவரது எல்லை மீறிய செயல் ஆஷஸ் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சனிடமும், தென் ஆப்பிரிக்க தொடரில் ரபாடாவிடமும் தொடர்ந்தது. ஒவ்வொரு முறையும் தவறு செய்யும் போதெல்லாம் ஸ்மித் கூறும் வார்த்தைகள், “நான் ஒரு சிறந்த கேப்டனாக இருக்க வேண்டும். என்னை பொறுத்தவரையில் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற்றம் காண முயற்சி செய்வேன்” என்பதுதான்.

பந்து சேதப்படுத்தப்பட்ட விஷயத்தில் ஐசிசி வழங்கி உள்ள தண்டனையும் பாரபட்சமாகவே அமைந்துள்ளது. பந்தை சேதப்படுத்திய பான்கிராப்டுக்கு தடையே விதிக்கப்படவில்லை. மேலும் சதிச் செயலுக்கு திட்டம் வகுத்த ஸ்மித்துக்கு ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்டு வீரர்கள் விஷயத்தில் கடுமையான தண்டனைகளை விதிக்கும் ஐசிசி, ஆஸ்திரேலிய வீரர்கள் விஷயத்தில் மட்டும் ஏன் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது என்பது புதிராகவே உள்ளது. 2001-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியில் பல்வேறு குற்றங்களை கூறி இந்திய வீரர்களான சேவக், கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ஷிவ் சுந்தர் தாஸ், தீப் தாஸ் குப்தா, ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டது. 2008-ல் சைமண்ட்ஸை குரங்கு என ஹர்பஜன் சிங் திட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 3 டெஸ்ட்டில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

ஐசிசியின் பாரபட்சம் குறித்து ஹர்பஜன் சிங் கூறும்போது, “ஆதாரங்கள் இருந்தும் பேன்கிராப்டுக்கு தடை இல்லை. 2001ல் ஆதாரமே இல்லாமல் 6 பேருக்கு தடை விதித்தனர். சிட்னி டெஸ்டிலும் தவறு செய்யாத நிலையில், எனக்கு தடை விதித்தனர். விதிமுறையை ஒவ்வொரு அணிக்கு ஏற்ப ஐசிசி கடைப்பிடிக்கிறது” என்றார்

கடினமாகவும், ஆக்ரோஷமாகவும் அதேவேளையில் வரையறுக்கப்படாத எல்லையை மீறாமலும் விளையாட வேண்டும் என்பதுதான் ஸ்மித்தின் சித்தாந்தம். இதையே ஆஷஸ் தொடருக்கு முன்னதாக நாதன் லயன் வெளிப்படையாக கூறும்போது, “ஓர் எல்லை இருக்கிறது. நாங்கள் அதை தொடுவோம், ஆனால் எல்லையைக் கடக்க மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். தற்போது வரையறுக்கப்படாத எல்லையே கோபத்துடன் ஸ்மித்தை ஆட்கொண்டுள்ளது.

வாழ்நாள் தடையா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுக்க விதிமுறைகளின்படி, பிரிவு 42-ல் வீரர் ஒருவர் ஆதாயம் பெறுவதற்காக நேர்மையற்ற வகையில், விளையாட்டின் கண்ணியத்துக்கு களங்கம் விளைவித்தல், பந்தை சேதப்படுத்துதல், பேட்ஸ்மேன்கள் தில்லுமுல்லு செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டால், அவர்களுக்கு அதிகபட்சமாக வாழ்நாள் தடை விதிக்கலாம் என்ற விதிமுறை இருக்கிறது. அநேகமாக இந்த விதி ஸ்டீவ் ஸ்மித், பான்கிராப்ட் மீது பாயக்கூடும். ஏனெனில் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய பிரதமரே கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்