சதத்துக்குப் பிறகு காயமடைந்தும் ராஸ் டெய்லர் 181 நாட் அவுட்: இங்கிலாந்தின் 335 ரன்களை விரட்டி நியூஸி. வெற்றி

By ஆர்.முத்துக்குமார்

டுனெடின் மைதானத்தில் இன்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட், பேர்ஸ்டோ ஆகியோர் சதங்களைப் பின்னுக்குத்தள்ளியது ராஸ் டெய்லரின் 181 நாட் அவுட். இங்கிலாந்தின் 335 ரன்கள் இலக்கை வெற்றிகரமான விரட்டி நியூஸிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை 2-2 என்று சமன் செய்துள்ளது.

டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைக்க இங்கிலாந்து அணி 38-வது ஓவரில் 267/1 என்ற நிலையிலிருந்து சவுதீ, சோதி, போல்ட் ஆகியோரது சிறப்பான பந்து வீச்சினால் 50 ஓவர்களில் 335/9 என்று ஆனது. வெகு சுலபமாக 380 ரன்கள் சென்றிருக்க வேண்டியது நடுக்கள வீரர்களின் சொதப்பலினால் 335 ரன்களாகக் குறுக்கப்பட்டது.

ஜோ ரூட் 101 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 102 ரன்களையும் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 106 பந்துகளில் 14 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 138 ரன்களையும் எடுத்தனர். நடுக்கள வீரர்கள் பட்லர், மோர்கன், ஸ்டோக்ஸ், மொயீன் அலி, வோக்ஸ் ஆகியோரது ரன் எண்ணிக்கை முறையே 0, 5, 1, 3, 3 என்று ஒற்றை இலக்கத்தில் முடிந்தது.

தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து மன்ரோ, கப்திலை மலிவாக இழந்து 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் அதன் பிறகு கேன் வில்லியம்சன் (45) டெய்லர் ஜோடி இணைந்து 13 ஓவர்களில் 84 ரன்கள் கூட்டணி அமைத்தது. பிறகு டெய்லர் (181 நாட் அவுட்) டாம் லேதம் (71) இணைந்து 4வது விக்கெட்டுக்காக 187 ரன்களைச் சேர்க்க நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர் 147 பந்துகளில் 17 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 181 நாட் அவுட் என்று ஒரு நாள் போட்டிகளின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றை ஆடி அணியை தனிமனிதனாக வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

டெய்லர் சதத்துக்குப் பிறகு 2வது ரன்னை முடிக்கும் வேகத்துடன் டைவ் அடிக்க காயமடைந்தார், அதன் பிறகு நொண்டியபடியே ஆடி உறுதியாக நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார். கொலின் டி கிராண்ட்ஹோம் 11 பந்துகளில் 23 ரன்களைச் சாத்த ஹென்றி நிகோல்ஸ் டாம் கரனை சிக்சருக்கு விரட்டி வெற்றி ரன்களைக் குவித்தனர், மீதி 3 பந்துகள் இருந்தன.

ஆனாலும் ராஸ் டெய்லர் 47வது ஓவரில் கிறிஸ் வோக்ஸை ஒரு சிக்ஸ், ஒரு நான்கை விளாசினார், பிறகு 49வது ஓவரில் மிட்விக்கெட் மேல் வோக்ஸை மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். இந்த மைதானத்தில் நியூஸிலாந்து தோற்றதில்லை என்ற சாதனையை ராஸ் டெய்லர் தக்கவைத்தார்.

ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் அதிரடி சதங்களுக்குப் பிறகு இங்கிலாந்து சரிவு:

இங்கிலாந்து அபாரமாகத் தொடங்கியது நியூசிலாந்தின் நழுவல் பீல்டிங்கைப் பயன்படுத்தி ஜேசன் ராய் (42 ரன், 41 பந்து 5 பவுண்டரி 2 சிக்சர்), ஜானி பேர்ஸ்டோ அதிரடி தொடக்கம் கொடுக்க 10 ஓவர்கள்ல் 77 ரன்கள் வந்தது. அப்போது ஜேசன் ராய், இஷ் சோதி பந்தில் ஷார்ட் பைன் லெக்கில் சாண்ட்னரின் அபார கேட்சுக்கு வெளியேறினார்.

பேர்ஸ்டோ, ஜோ ரூட் இணைய அதில் பேர்ஸ்டோ படு ஆக்ரோஷம் காட்டினார்.

7 சிக்சர்களைப் பறக்க விட்ட ஜானி பேர்ஸ்டோ 83 பந்துகளில் சதம் கண்டார். ஜோ ரூட் தனக்கேயுரிய எச்சரிக்கையுடன் கலந்த ஆக்ரோஷத்தில் 99 பந்துகளில் தன் சதத்தை எட்டினார். ஜோ ரூட் தனது 26 சர்வதேச இன்னிங்ஸ்களுக்குப் பிறகு சதம் எடுத்தார். 74 ரன்களில் பேர்ஸ்டோவுக்கு கவரில் சாண்ட்னர் கேட்சை விட்டார். ஜேசன் ராயின் 180 ரன்கள் அச்சுறுத்தல் ஆகும் நிலையில் பேர்ஸ்டோ 106 பந்துகளில் 14 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 138 ரன்கள் எடுத்து மன்ரோவின் ஆஃப் கட்டரை கொடியேற்றி வெளியேறினார். பட்லரை 4ம் நிலைக்கு முன்கூட்டியே இறக்கியது எடுபடவில்லை அவர் சோதி பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். டக் அவுட்.

இயான் மோர்கன் போல்ட் பந்தை தூக்க முயன்று வெளியேறினார். ஸ்டோக்ஸ் டீப் ஸ்கொயர்லெகில் பிடிபட்டார், மொயின் அலி நேராக தூக்கி அடிக்க டிம் சவுதீ மிக அற்புதமான கேட்சை எடுத்தார். கிறிஸ் வோக்ஸ் மன்ரோ பந்தில் லாங் ஆனில் கேட்ச் கொடுக்க ஜோ ரூட் தனித்து விடப்பட்டார். ஜோ ரூட் சதம் எடுத்து ஆட்டமிழந்தார், டாம் கரன் கடைசி ஓவரில் 18 ரன்களை விளாச இங்கிலாந்து 335 ரன்களை எட்டியது. சவுதி 10 ஓவர்களில் 87 ரன்கள் கொடுக்க சோதி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், மன்ரோ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ராஸ் டெய்லரின் உறுதி, டாம் லேதமுடன் அமைத்த வெற்றிக் கூட்டணி:

மார்க் உட் (1/65) அபாய வீரர் மன்ரோவை தன் ஓவரின் முதல் பந்தில் எல்.பி.செய்து வெளியேற்றினார். ரிவியூவையும் விரயம் செய்தார் மன்ரோ. மார்டின் கப்தீல் 10 பந்துகள் ஆடி கிறிஸ் வோக்ஸிடம் (1/42) ஆட்டமிழந்தார் ரன் எடுக்கவில்லை.

வில்லியம்சனும் ராஸ் டெய்லரும் இணைந்து அருமையாகக் கட்டமைத்தனர், வில்லியம்சன் 48 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்தில் லெக் திசையில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் ஆட்டமிழந்தார். ஆனால் இது நாட் அவுட் என்று ரீப்ளேயில் தெரிந்தது, ஆனால் ரிவியூ செய்ய முடியாது காரணம் மன்ரோ தன் அவுட்டை ரிவியூ செய்து விரயம் செய்ததே.

டாம் லேதமுக்கு முதலிலேயே மொயின் அலி கேட்சை விட்டார், ராஸ் டெய்லருக்கு 74 ரன்களில் ஒரு கேட்ச் விடப்பட்டது. அதனைப் பயன்படுத்தி இருவரும் அபாரமாக ஆடினர், ஆனாலும் வெற்றிக்குத் தேவையான ரன் விகிதம் 9 ரன்களுக்குச் சென்றது. டெய்லர் தன் 19வது சதத்தை எடுத்து முடித்தார், எடுத்த பிறகு காயமடைந்த நிலையில் சிரமத்துடன் ஆடினார்.

ஆனாலும் நின்ற நிலையிலிருந்து அருமையான பவுண்டரிகளை அடிக்க கடைசி 10 ஒவர்களில் தேவைப்படும் ரன் விகிதம் 8 ரன்களுக்குக் குறைந்தது. லேதம் 71 ரன்களில் 42வது ஓவரில் டாம் கரன் பந்தில் மொயின் கேட்சுக்கு வெளியேற நியூஸி வெற்றிக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது.

ஆனால் கொலின் டி கிராண்ட்ஹோம் வந்தார் முதல் 6 பந்துகளில் 2 நான்குகள் 2 சிக்ஸ்களை விளாசினார். கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹென்றி நிகோல்ஸ் 2 பந்துகளில் ரன் எடுக்காமல் விட கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் 3வது பந்தை ஸ்கொயர்லெக்கில் சிக்சருக்குத் தூக்கி வெற்றியை உறுதி செய்தார்.

5 போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என்று சமன் ஆன நிலையில் வரும் சனிக்கிழமையன்று இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. ஆட்ட நாயகன் ராஸ் டெய்லர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

43 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்