சூப்பர் சிக்ஸ்: கெய்ல் சொதப்பல்; கேட்ச்கள் நழுவல்; ஆப்கானிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்த மே.இ.தீவுகள்

By ராமு

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று ஆட்டத்தின் சூப்பர் சிக்ஸ் போட்டியில் மே.இ.தீவுகளுக்குப் பாடம் கற்பித்த ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் மட்டுமே எடுக்க, ஆப்கான் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சியளித்தது. இது இந்தத் தொடரில் மே.இ.தீவுகளின் முதல் தோல்வியாகும்.

தோல்விக்கு மே.இ.தீவுகளின் பீல்டிங்கும் 60% காரணமாகும். அரைசதம் எடுத்த ரஹ்மத் மற்றும் ஷென்வாரி, நபி, ரஷீத் கான் ஆகியோருக்கு கேட்ச்களைக் கோட்டை விட்டனர், இதனால் ஒரு 50 ரன்கள் ஆப்கானுக்குக் கிடைத்தது, இதுதான் மே.இ.தீவுகள் வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளியாக அமைந்தது.

இந்த அணிகளுக்கிடையே சக்தி வாய்ந்த மே.இ.தீவுகள் அணியின் பேட்டிங் பலத்துக்குச் சாதகமான பிட்ச்தான் ஹராரே பிட்ச். மேலும் இந்தத் தொடரில் 300 ரன்களை சர்வசாதாரணமாக மே.இ.தீவுகள் எடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆப்கானில் தொடக்கத்தில் வீசிய தவ்லத் ஸத்ரான் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் முஜிப் உர் ரஹ்மான் அபாரமாக வீசினர்.

9 பந்துகள் விளையாடிய கெய்ல் திக்கித் திணறி கடைசியில் 1 ரன்னில் மிடில் அண்ட் ஆஃபில் பிட்ச் ஆன முஜிப் உர் ரஹ்மான் பந்து சற்றே திரும்ப பீட் செய்து ஆஃப் ஸ்டம்பில் பட வெளியேறினார், அபாரமான பந்து. முஜீப் என்ன வீசுகிறார் என்பது கெய்லுக்குப் புரியவில்லை, ஒருவேளை ஐபிஎல் கிரிக்கெட்டில் இருவரும் ஒரே அணிக்கு ஆடுவதால் பிற்பாடு புரியவரலாம்.

முஜீப் உர் ரஹ்மான் ஆஃப் பிரேக், கூக்ளி, கேரம் பந்து என்று தினுசு தினுசாக வீசி மே.இ.தீவுகள் வீரர்களின் கையில் உள்ள மட்டையை பேசா மடந்தையாக்கினார். எவின் லூயிஸ் வந்து ஸ்வீப் பவுண்டரி அடித்தார். ஹெட்மைய்ர் 22 ரன்களில் மொகமது நபி பந்தில் எல்.பி.ஆனார், ஆனால் அது மட்டையில் பட்டது தெரியவந்தது, துரதிர்ஷ்டவசமான அவுட். எவின் லூயிஸ் இறங்கி அடித்த 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களில் நஜ்புல்லாவின் அபாரமான பீல்டிங் மற்றும் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

53/3-லிருந்து மர்லன் சாமுவேல்ஸ் (36, 64 பந்து 2 பவுண்டரி), ஷேய் ஹோப் (43, 94 பந்து பவுண்டரி இல்லை) ஆகியோர் 55 ரன்களை 18 ஓவர்கள் ஆடி போராடி சேர்த்தனர் கடைசியில் கட்டிப்போட்ட வெறுப்பில் நபி பந்தை ஒரு சுற்று சுற்றி கேட்ச் ஆகி வெளியேறினார்.

ஹோல்டரும் (28 ரன்கள், 26 பந்து 2 பவுண்டரி 1 சிக்ஸ்), ஹோப்பும் இணைந்து அடுத்ததாக 50 ரன்களை 10 ஒவர்களில் சேர்த்தனர். ஷேய் ஹோப், ஹோல்டர் ஆகியோரை முஜிபுர் ரஹ்மான் பெவிலியன் அனுப்பினார். நஜ்புல்லா ஸத்ரானின் இரண்டு கேட்ச்களும் ஒரு நேர் ரன் அவுட்டும் அவரது பீல்டிங் திறமைக்கு சான்றாக விளங்குகிறது. ஒரு வழியாக மே.இ.தீவுகள் ஆப்கானின் கடும் நெருக்கடியைச் சமாளித்து ஆல் அவுட் ஆகாமல் 197/8 என்று முடிந்தது. முஜீப் உர் ரஹ்மான் 10 ஓவர்களில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் மொகமது நபி 2 விக்கெட்டுகள், புதிர் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் 31 ரன்களுக்கு 1 விக்கெட்.

ரஹ்மத் ஷாவின் அபார அரைசதத்தினால் வெற்றி:

ஆப்கான் அணி குறைந்த ரன் இலக்குதானே, அதனை மெதுவாக ஆடி சொதப்பி விடக்கூடாது என்ற ரீதியில் ஷாட் தேர்வில் கடும் தவறுகளைச் செய்து விக்கெட்டுகளை இழந்தனர். ஷஜாத் 8 ரன்களில் கவரில் ஹோல்டர் பந்தை கொடியேற்றினார். ஜாவேத் அகமட் அறிமுக பவுலர் பாலிடம் எல்.பி.ஆனார்.

முதலில் அகமட் ஷா, ஷென்வாரியுடன் (27) 66 ரன்கள் கூட்டணி அமைத்தார். 27 ரன்கள் எடுத்த ஷென்வாரி மில்லர் பந்தை சரியாக ஆடாமல் கெய்லிடம் கேட்ச் கொடுத்தார். 83/3 என்ற நிலையில் மீண்டும் ரஹ்மத் ஷாவுடன் மொகமது நபி (31) இணைந்து 49 ரன்கள் கூட்டணி அமைத்து ஸ்கோரை 132 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், நபி டீப் ஸ்கொயர் லெக் திசையில் அருமையான புல்ஷாட்டை ஆடினார், ஆனால் அங்கு பவுண்டரியில் அதை விட அருமையாக டைவ் அடித்து ஹெட்மையர் கெட்ச் எடுத்து மே.இ.தீவுகளுக்கு உயிர் கொடுத்தார்.

மேலும் 20 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் அபாரமாக ஆடி 109 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 68 ரன்கள் எடுத்த ரஹ்மத் ஷா கட் ஆட முயன்று கேட்ச் ஆனார். இப்போது ஆப்கான் அணி நடுங்கத் தொடங்கியது. ஆனால் நஜ்புல்லா ஸத்ரான் (19), நபி (10), ரஷீத் கான் (13), ஷராபுதின் அஷ்ரப் (7) ஆகியோரின் உறுதியினால் 47.4 ஓவர்களில் 198/7 என்று ஆப்கான் அணி அபாரமாக வென்றது.

ஆட்ட நாயகனாக 3 விக்கெட் வீழ்த்திய முஜீப் உர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் 2 அருமையான கேட்ச்கள் ஒரு நேர் த்ரோ ரன் அவுட், பிறகு முக்கிய கட்டத்தில் 19 ரன்கள் எடுத்த நஜ்புல்லா ஸத்ரான் தான் உண்மையான ஆட்ட நாயகர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்