சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காட்சிப் பொருளாக காணப்படும் ஐ, ஜே, கே கேலரிகள்

By பெ.மாரிமுத்து

இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே என கூடுதலாக மூன்று கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்தது. இந்த மூன்று கேலரிகளிலும் சேர்த்து மொத்தம் 12 ஆயிரம் இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த கேலரிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், அரசிடம் உரிய முறையான அனுமதி ஏதும் பெற வில்லை என்றும், விதிமுறைகளை மீறி அவை கட்டப்பட்டுள்ளன என்றும் கூறி சென்னை மாநகராட்சி, 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது. இதனை எதிர்த்து கிரிக்கெட் சங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த 3 கேலரிகளுக்கு சீல் வைத்ததை மாநகராட்சி உடனே அகற்ற வேண்டும் என்று 2012, டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 கேலரிகளையும் இடிக்குமாறு கடந்த 2013 ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் இன்னும் அந்த 3 கேலரிகளும் காட்சிப் பொருளாகவே பார்வையாளர்களின் கண்களில் படுகிறது. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் ஒவ்வொரு முறையும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போதெல்லாம் கேலரி பிரச்சினையை தீர்க்க தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு இதுவரை விடிவு கிடைத்தபாடில்லை.

சரி இதற்குள் என்ன பிரச்சினைதான் நிலவுகிறது என சற்று ஆராய்ந்து பார்த்த போது சில தகவல்கள் கிடைத்தன. ஐ, ஜே, கே ஆகிய 3 கேலரிகளின் கட்டமைப்பு சிதைவுக்கு உள்ளான நிலையில்தான்அதனை சீரமைப்பு செய்ய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக மாநகராட்சியில் உரிய அனுமதி வாங்கியே இந்த 3 கேலரிகளும் கட்டப்பட்டன. ஆனால் முன்பு இருந்ததைவிட சில ஆயிரக்கணக்கிலான இருக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

3 கேலரிகளின் கட்டிட பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக அனுமதி கடிதம் வாங்க வேண்டிய நேரத்தில் தான் பிரச்சினை தொடங்கி உள்ளது. இந்த கேலரிகள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சியும், பெருநகர வளர்ச்சி குழுமமும் குற்றம் சாட்டின. மைதானத்தில் உள்ள எம்சிசி ஸ்டாண்டுக்கும், கே கேலரிக்கும் இடையில் 8 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இந்த இடைவெளி 6 மீட்டராக மட்டுமே இருந்துள்ளது. எதற்காக இந்த இடைவெளியென்றால் ஆபத்தான காலக்கட்டங்களில் பொதுமக்களாகிய ரசிகர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும் மீட்பு வாகனங்கள் கொண்டுவருவதற்காகவே. இந்த பகுதியில் 2 மீட்டர் இடைவெளியை குறைவாக அமைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பிலோ இடைவெளி விடா விட்டாலும் சம்பந்தப்பட்ட இடத்துக்கு தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட எந்த ஒரு மீட்பு வாகனமும் எளிதாக வந்து செல்ல முடியும் என்ற கருத்தை முன்வைத்தது.

ஆனால் இது ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்துள்ளது. சரி கே கேலரியில்தானே பிரச்சினை மற்ற இரு கேலரிகளுக்கும் அனுமதி தாருங்கள் என்று தமிழக கிரிக்கெட் சங்கம் கோரிக்கை வைத்த போதிலும் அதற்கு செவிசாய்க்கப்படவில்லை. இதையடுத்து பிரச்சினையை தீர்ப்பதற்கு மாற்று வழியை தமிழக கிரிக்கெட் சங்கம் முன்வைத்தது.

அதாவது, 3-வது கட்டமாக எம்சிசி, பெவிலியன் பகுதியை இடிக்க உள்ளோம். அப்போது குறிப்பிடப்பட்டுள்ள 8 மீட்டர் இடைவெளியை சரியாக அமைத்துக் கொள்கிறோம் என உறுதி மொழி கொடுக்கப்பட்டது. ஆனால் இதற்கும் மாநகராட்சி, பெருநகர வளர்ச்சி குழுமம் இசைவு காட்டவில்லை.

இந்த மாற்று யோசனை நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சேப்பாக்கத்தில் உள்ள 3 கேலரிகளும் தகர்க்கப்படும் சூழ்நிலையில் இருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் எம்சிசி பெவிலியன் கேலரியை மறுசீரமைப்பு செய்வதிலும் பிரச்சினை உருவாகி உள்ளது. ஏனெனில் குத்தகை காலத்தை நீட்டிப்பு செய்வதில் மாநகராட்சி காலதாமதம் செய்துவருவதாக கூறப்படுகிறது. ஆனால் மாநகராட்சி தரப்பிலோ மைதானத்துக்கான குத்தகை தொகை சுமார் ரூ.2 ஆயிரம் கோடிவரை வழங்காமல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நிலுவையில் வைத்துள்ளதாக எதிர்கணையை வீசுகிறது. இதை செலுத்தினால் மட்டுமே குத்தகை காலம் நீட்டிக்கப்படும் என்பதில் உறுதியுடன் உள்ளது.

ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமோ, “இவ்வளவு பெரிய தொகையை செலுத்துவதாக இருந்தால் நாங்கள் புதிய மைதானத்தை சொந்தமாக வாங்கிவிடலாம், மேலும் ஒரு கூட்டமைப்பில் (பிசிசிஐ) உறுப்பினராக உள்ள மாநில சங்கத்தால் எப்படி இவ்வளவு பெரிய தொகையை கட்ட முடியும். ஒழுங்கான முறையில் வருடந்தோறும் சுமார் ரூ.50 ஆயிரம் நாங்கள் செலுத்தியே வருகிறோம்.

ஆனால் தற்போதைய சந்தை நிலவரப்படி ரூ.2 ஆயிரம் கோடியை கட்ட வேண்டும் என்கின்றனர். இந்த தொகையை எங்களால் செலுத்த முடியாத நிலையில்தான் உள்ளோம். ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான ஒரு நியாயமான தொகையை நிர்ணயிக்க அரசு தரப்பினர் முன்வந்தால் அதனை நாங்கள் செலுத்த தயாராக உள்ளோம்” என்கிறது. இந்த வழக்கும் நீதிமன்றத்துக்கு செல்ல இருதரப்பினரும் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வருமாறு கூறியிருக்கிறது.

சரி தற்போது இதன் நிலவரம் எந்த நிலையில்தான் இருக்கிறது என அரசு தரப்பை தொடர்பு கொண்டு கேட்ட போது, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி பரஸ்பரம் ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. இது தற்போது பரிசீலனையில் உள்ளது என தெரிவித்தனர்.

மேலும் கூறும்போது, “தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் செலுத்த வேண்டிய தொகையை சரியாகவே கட்டி உள்ளது. அதிகரிக்கப்பட்ட குத்தகை தொகைதான் பிரச்சினையாக எழுந்துள்ளது. சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தொகை சரிதான். தற்போதைய சந்தை நிலவரப்படி இந்த தொகையை நிர்ணயித்துள்ளனர். ஆனால் பரஸ்பர ஒப்பந்தம் மூலம் தொகையை நிர்ணயித்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்