தொடர் 7 டி20 தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி: குசால் பெரேரா காட்டடி தர்பாரில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

By ஆர்.முத்துக்குமார்

கொழும்புவில் நடைபெற்ற நிதாஹஸ் டி20 முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 7 டி20 போட்டிகளில் தோல்வியுற்றதை முடிவுக்குக் கொண்டுவந்தது.

டாஸ் வென்ற இலங்கை முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்து, திட்டமிட்ட பந்து வீச்சு புதுவிதமான களவியூகம் ஆகியவற்றினால் 174/5 என்று மட்டுப்படுத்தியது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி குசல் பெரேராவின் சாத்துமுறை இன்னிங்ஸினால் 18.3 ஓவர்களில் 175/5 என்று வெற்றி பெற்றது.

உனாட்கட்டுடன் தொடக்கத்தில் வீசிய தமிழக வீரர், ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் 11 ரன்களில் மெண்டிஸை பெவிலியன் அனுப்ப களமிறங்கினார் குசல் பெரேரா. இறங்கிய உடனேயே வாஷிங்டன் சுந்தர் பந்தை அரக்க ஸ்லாக் ஸ்வீப் ஆடி சிக்சருக்குத் தூக்கினார்.

ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சுக்கு ‘ராஜமரியாதை’ கொடுத்த குசல் பெரேரா!

இன்னிங்சின் 3வது ஓவரை ஷர்துல் தாக்கூர் வீசினார், இதுவே தவறான கேப்டன்சியாகும், முதல் ஓவர் உனாட்கட், 2வது ஓவர் வாஷிங்டன் சுந்தர், மீண்டும் உனாட்கட்டிடம் கொடுக்க வேண்டியதுதானே? அதுவும் ஜெயசூரியா பாணியில் வெளுத்துக்கட்டுவார் என்று தெரிந்தும் குசல் பெரேராவுக்கு எதிராக முக்காலும் முழுசுமாகப் போடும் ஷர்துல் தாக்கூரை ரோஹித் சர்மா கொண்டு வந்து தவறிழைத்தார்.

முதல் 2 பந்துகள் 2 ஷார்ட் பிட்ச் ஒன்று லெக் திசை பவுண்டரிக்கும் ஒன்று ஆஃப் திசை பவுண்டரிக்கும் பறந்தது. முக்கால் முடிந்ததா அடுத்து முழுசாக வீசினார் அதுவும் கவரில் மின்னல் வேகத்தில் பவுண்டரிக்குப் பறந்தது. அடுத்த பந்து வேகம் குறைக்கப்பட்ட ஸ்லோயர் ஒன் பந்து குசல் பெரேரா பார்த்து விட்டார், நன்றாக நின்று கவர், மிட் ஆஃபுக்கு இடையில் ஒரே தூக்கு சிக்சருக்குப் பறந்தது.

முக்காலும் முழுசும் போதாதென்று ஒரு பந்தை இடுப்புக்கு மேலே புல்டாசாக வீச அதுவும் பவுண்டரி, நோபால். அடுத்தது ஒரு ஆஃப் வாலி நேராக ஒரே அப்பு அப்பினார் 6 பந்துகளில் ஒரு சிக்ஸ் உட்பட 6 பவுண்டரிகள். கடைசி பந்து புல் ஆடினார் நல்ல வேளையாக அது ஷார்ட் பைன் லெக்கில் பீல்ட் செய்யப்பட்டது ரன் இல்லை, மொத்தம் 27 ரன்களை ஷர்துல் தாக்கூர் கொடுத்தது ஆட்டத்தைக் காலி செய்தது.

குணதிலக வாஷிங்டன் சுந்தரையும் ஜெய்தவே உனாட்கட்டையும் 2 சிக்சர்களுக்குத் தூக்கி கடைசியில் 19 ரன்களில் உனாட்‘கட்டரில்’ பந்த்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 6வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களையே கொடுக்க பவர் பிளே முடிவில் இலங்கை 75/2 என்று அமோகத் தொடக்கம் கண்டது. சாஹல் வந்தவுடன் குசால் பெரேரா இறங்கி வந்து சைட் ஸ்க்ரீனுக்கு ஒரு சிக்ஸ் அடித்தார்.

விஜய் சங்கர் முதல் ஓவரை அருமையாக வீசினார். 4 ரன்களே வந்த ஓவரில் 22 பந்துகளில் குசால் பெரேரா அரைசதம் கண்டார்.

சாஹல் பந்தை மேலேறி வந்து பவுண்டரி அடித்த சந்திமால் அதே ஓவரில் 14 ரன்களில் சாஹலில் ஃபிளிப்பர்-நேர் பந்தில் பவுல்டு ஆனார், மிக அருமையான பந்து அது.

சுரேஷ் ரெய்னா உப்புல் தரங்காவை நிற்க வைத்து ஒரு ஓவரை வீச அந்த ஓவரில் 3 ரன்களே வர, 10வது ஓவர் முடிவில் இலங்கை 101/3 என்று வலுவாக இருந்தது. சாஹல் தன் 3வது ஓவரை வீசி ஒரு சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் 13 ரன்கள் கொடுத்து தன் 3 ஓவர்களில் 32 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். தடவிக்கொண்டிருந்த தரங்கா மிட்விக்கெட்டில் ஒரு பயங்கர சிக்ஸரை விளாசினார்.

ரெய்னாவின் அடுத்த ஓவரில் மிகப்பிரமாதமான மட்டையை வலது கைக்கு மாற்றிக் கொண்ட குசல் பெரேரா, ரெய்னாவின் பந்தை ஸ்கொயர் லெக் மேல் மிகப்பெரிய சிக்ஸ் அடித்தார், இதுதான் ஷாட் ஆஃப் த மேட்ச் என்றால் மிகையாகாது.

குசல் பெரேராவை நிறுத்தி வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர்:

இன்னிங்ஸின் 13வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீச முதல் 3 பந்துகளுமே அருமையாக பந்தாக அமைய குசல் பெரேராவால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை, அழுத்தம் அதிகாமாக சுந்தர் ஒரு பந்தை நன்றாக தூக்கி மெதுவாக வீசினார், இறங்கி வந்து ஆட முயன்ற குசல் பெரேராவினால் பந்தைத் தொட முடியவில்லை கார்த்திக் ஸ்டம்ப்டு செய்தார். குசல் பெரேரா 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இது ஒரு  மினி திருப்பு முனையாகவும் இந்திய அணிக்கு ஒரு வெற்றி வாய்ப்பையும் ஏற்படுத்தியது. ஏனெனில் 12வது ஓவர் 2வது பந்தில் குசல் பெரேரா அடித்த சிக்ஸருக்குப் பிறகு சனகா, தரங்கா ஜோடி சொதப்பலோ சொதப்பியதில் இலங்கை அணி தடுமாறியது இத்தனைக்கும் அடிவாங்கிய தாக்குர் மீண்டும் பந்து வீச வந்த போது தரங்கா கொடுத்த கேட்சை ரிஷப் பந்த் நழுவவிட்டார். ஆனால் இது கடினமான வாய்ப்பு பந்த் தன்னால் இயன்றவரை எம்பி முயற்சி செய்தார் என்றுதான் கூற வேண்டும்.

11.2 ஆவது ஓவரில் அடித்த சிக்சருக்குப் பிறகு 17வது ஓவர் வரை பவுண்டரியே இல்லை. ஆனாலும் பெரிய அச்சுறுத்தல் இல்லை. இந்த ஓவர்களில் படபடவென விக்கெட்டுகளைக் காலி செய்திருந்தால் இலங்கை தோற்றிருக்கும். தரங்கா 18 பந்துகளில் 17 ரன்கள் என்ற தடவல் இன்னிங்ஸுக்குப் பிறகு சாஹலிடம் பவுல்டு ஆனார்.

கடைசிய்ல் 18 பந்து 24 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது ரூ.11.5 கோடி உனாட்கட் வீச வந்தார். அதுவரை தட்டுத்தடவி வந்த ஷனகா ஸ்லோயர் பந்தை கவர் திசையில் தூக்கி அடித்தார்.

பிறகு திசர பெரேரா பேட்டிங் முனைக்கு வர ஃபுல் பந்தை லாங் ஆஃபில் சிக்ஸ் விளாசி, தாழ்வான புல்டாஸை லாங் ஆனில் 4 ரன்களை விளாச 16 ரன்கள் எடுக்கப்பட 18வது ஓவரின் 3வது பந்து டீப் ஸ்கொயர் லெக் பவுண்டரிக்கு திசரா பெரேராவால் விரட்டப்பட இதுதான் வெற்றி ஷாட்டாக அமைந்தது. ஷனகா 15 ரன்களுடனும் பெரேரா 10 பந்துகளில் 22 ரன்களுடனும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர். இந்திய அணியில் உனாட்கட் சரியாக வீசவில்லை 3 ஓவர் 35 ரன்கள், தாக்குர் முதல் ஓவரில் 27 ரன்கள் விளாசப்பட்டாலும் பிறகு டைட்டகா வீசி 3.3 ஒவர்களில் 42 ரன்கள். சாஹல் 4 ஒவர்களில் 37 ரன்கள். வாஷிங்டன் சுந்தர் அருமையாக வீசி 4 ஒவர்களில் 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள்.

ஷிகர் தவண் அதிரடி 90 ரன்கள் வீண்!

dhawanjpg100 

முன்னதாக முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணியில் ரோஹித் சர்மா ஏமாற்றமளித்தார். துஷ்யந்த சமீரா வீசிய முதல் ஓவரின் 4வது பந்திலேயே அவர் மிட் ஆஃப் மேல் தூக்கி அடிக்க முனைந்தார், பந்து சரியாகச் சிக்காமல் கொடியேற்றினார், மெண்டிஸ் கேட்ச் பிடிக்க ஸ்கோரரைத் தொந்தரவு செய்யாமல் ரோஹித் ஆட்டமிழந்தார்.

சுரேஷ் ரெய்னா இறங்கியவுடன் அவருக்கு விசித்திரமான ஒரு களவியூகம் அமைத்து ஷார்ட் பிட்ச் பந்து வீசப்போவதான ஒரு மாயையை உருவாக்கினர் இலங்கை அணியினர் இதனால் ஷார்ட் பிட்ச் பந்தை எதிர்பார்த்து கடைசியில் புல்டாஸ் பந்தை விலகிச் சென்று ஆட நினைத்து பவுல்டு ஆனார். அனுபவமிக்க ரெய்னாவை ஏதோ சிறுபிள்ளை போல் சொல்லி வைத்துக் குழப்பி எடுத்து விட்டனர். நுவான் பிரதீப் ரெய்னாவை 1 ரன்னில் வெளியேற்றினார். 9/2 என்ற நிலையில் மணீஷ் பாண்டே, ஷிகர் தவன் இணைந்தனர்.

64 பந்துகளில் 95 ரன் கூட்டணி அமைத்தனர். மணீஷ் பாண்டே 35 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார், பிறகு மெண்டிஸ் பந்தில் ஆட்டமிழந்தார், தொடக்கத்தில் பந்துகளை நன்றாக டைம் செய்த பாண்டே போகப்போகத் திணறினார்.

ஷிகர் தவண் இன்னிங்சும் அதிர்ஷ்டம் நிரம்பியது, பவுண்டரிகள் முன்னால் இழுக்கப்பட்டு குறைந்த தூரமாக்கப்படாமல் இருந்தால் தவணும் விரைவில் வெளியேறிருப்பதை நாம் பார்த்திருக்க முடியும். அவரது 3 பைன் லெக் சிக்சருமே மிஸ்டைம் ஷாட்களே. அது சிக்சருக்குப் போனது என்றால் எல்லைக் கோடு அவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

தவண் இன்னிங்ஸ் ரிஸ்குகள் நிரம்பியது, ஸ்பின்னர்களை 2 ஸ்லாக் ஸ்வீப் பிறகு சமீராவை இறங்கி வந்து அடித்த சிக்சர்களுடன் தவண் மொத்தம் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 49 பந்துகளில் 90 ரன்கள் எடுத்த நிலையில் வைடு பந்தை லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து குணதிலகவிடம் வீழ்ந்தார், ரிஷப் பந்த் ஒரு அபாரமான சிக்ஸ், ஒரு அரக்க கவர் பவுண்டரி ஷாட்டுடன் 23 பந்துகளில் 23 ரன்களையும் தினேஷ் கார்த்திக் 6 பந்துகளில் 13 ரன்களையும் எடுக்க இந்திய அணி 174/5 என்று முடிந்தது. இலங்கை அணியில் சமீரா 2 விக்கெட்களையும் நுவான் பிரதீப், மெண்டிஸ், குணதிலக ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக அதிரடி குசல் பெரேரா தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்