சர்வதேச கிரிக்கெட்டில் ரன் அவுட்டின் போது சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ரன் அவுட் ஆகியபோது, இது ஏன் கடைபிடிக்கப்படவில்லை என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை ட்விட்டரில் கொட்டியுள்ளனர்.
12-வது ஐபிஎல் சீசனில் இறுதி ஆட்டம் ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தோல்வி அடைந்தது. இதனால் 4-வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை சிஎஸ்கே இழந்தது. இந்த ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் சர்ச்சைக்குரிய முறையில் தோனிக்கு ரன் அவுட் வழங்கப்பட்டிருந்தது.
ஹர்திக் பாண்டியா வீசிய 13-வது ஓவரின் 4-வது பந்தை வாட்ஸன் அடித்து விட்டு ரன் ஓடினார். முதல் ரன்னோடு நிறுத்தி இருக்கலாம், ஆனால், ரன் தேவையின் நெருக்கடி காரணமாக 2-வது ரன்னுக்கு தோனி முயற்சித்தார். அப்போது இஷான் கிஷன், பந்தை சரியாக ஸ்டெம்பில் எறிந்தார். இந்த ரன் அவுட்தான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.
அதேசமயம், இந்த ரன் அவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதப்பொருளாகவும் மாறி இருக்கிறது. ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தக்கூடிய மிகவும் முக்கியமான விக்கெட் என்பதால் பல கோணங்களிலும் இந்த ரன் அவுட் குறித்து 3-வது நடுவர் ஆய்வு செய்தார். இஷான் கிஷன் த்ரோ அடிக்கும் போது தோனியின் மட்டை சரியாக கிரீஸில் இருந்தது. ஆனால் கிரீஸை தாண்டி உள்ளே வரவில்லை.
பல்வேறு கோணங்களில் பார்த்த போதிலும் பந்து ஸ்டெம்பை தாக்கும் போது தோனி, கிரீஸை தொடவில்லை என்பதற்கு தெளிவான ஆதாரம் கிடைக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சந்தேகத்தின் பலனை கருத்தில் கொண்டு பேட்ஸ்மேனுக்கு சாகதமான தீர்ப்பு வழங்கப்படும்.
இதனால் சந்தேகத்தின் பலன் கருதி தோனிக்கு ரன் அவுட் வழங்கப்படாது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக 3-வது நடுவரான நைஜல் லாங், ரன் அவுட் வழங்கினார். இது சிஎஸ்கே ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தோனியின் இந்த ரன் அவுட்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஒருவேளை தோனிக்கு இந்த ரன் அவுட் வழங்காமல் இருந்திருந்தால், ஆட்டத்தின் முடிவு தலைகீழாக முடிந்திருக்கக்கூடும்.
இது ஒருபுறம் இருக்க வர்ணனையாளராக இருந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், அறிவுஜீவியாக செயல்பட்டு நடுவர் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னரே தோனி அவுட் என்று ஆணித்தரமாக அடித்து கூறினார்.
அவரது வர்ணணை முற்றிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதமாகவும், தோனிக்கும் ஒட்டுமொத்த சிஎஸ்கே அணிக்கும் எதிராக இருப்பது போன்று இருந்தது. இந்நிலையில் தோனிக்கு வழங்கப்பட்ட ரன் அவுட் தீர்ப்பு குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதன் விவரம்:விகாஷ் சர்மா: ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு முறை ரன் அவுட் விஷயத்தில் மோசமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 3-வது நடுவர் தனது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் வரை அவுட் கொடுக்க காத்திருந்தார். இது ஐபிஎல் தொடரே இல்லை. சிறந்தவைக்கும், பணத்துக்கும் இடையிலான தொடர். இறுதியில் சிறந்ததை பணம் வென்றுள்ளது.
அமித் அன்காலே: தோனி அவுட் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் அவுட் வழங்கப்பட்டுள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களை ஏமாற்றும் வேலை. இனி ஐபிஎல் தொடரை பார்ப்பதை நிறுத்திக் கொள்வேன். இந்த சீசன் முழுவதுமே நடுவர்கள் பல்வேறு தவறான அவுட்களை வழங்கியுள்ளனர்.
அத்துல் சர்மா: தோனியின் ரன் அவுட் சர்ச்சைக்குரியதுதான். ரன் அவுட் தெளிவாக இல்லை. சந்தேகத்தின் பலன் கட்டாயமாக பேட்ஸ்மேனுக்கு சாதகமாக வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
கிரிஷ் கோபால்: “தோனிக்கு வழங்கப்பட்ட ரன் அவுட் முடிவு நிச்சயம் சர்சைக்குரியதுதான். இது ரசிகர்களின் மனதில் இருந்து கொண்டே இருக்கும். நடுவர் நைஜல் லாங் நீண்ட நேரம் எடுத்துக்கொண்ட போதிலும் மோசமான முடிவை வழங்கியுள்ளார். சந்தேகத்தின் பலன் என்ற விதிமுறை மறக்கப்பட்டுள்ளது.
ஹனிஷ் சிங்: தோனியின் ரன் அவுட், அவுட்டே கிடையாது. வர்ணனையாளர்கள் கூட இதைக் கூறினார்கள். மற்றொரு கோப்பையை ‘வாங்கிய’ அம்பானி குடும்பத்துக்கு வாழ்த்துகள். சிஎஸ்கே கடுமையாக போராடியது. ஆனால் முகேஷ் அம்பானி அதைவிட கடுமையாக (விலை கொடுத்து) விளையாடிவிட்டார்.
குர்சிம்ரன் கோச்சார்: சஞ்சய் மஞ்ச்ரேக்கரை தவிர வர்ணனையாளர்கள் குழுவில் உள்ள அனைவரும் தோனியின் ரன் அவுட்டில் சமரசம் ஆகவில்லை. மஞ்ச்ரேக்கர் ஒரே ஒரு காட்சியை மட்டும் பார்த்துவிட்டு தோனி அவுட்தான் என முடிவு செய்துவிட்டார். அவர், மும்பை இந்தியன்ஸ் அணியின் தூதராக செல்லலாம்.
சாபமிட்ட சிறுவர்கள்..
தோனிக்கு ரன் அவுட் வழங்கியதற்கு இரண்டு சிறுவர்கள் அழுதபடி பேசி சாபமிடும் வீடியோ வைரலாகி வருகிறது.
முதல் காணொலியில் தோனியின் அவுட்டை ஏற்காத சிறுவன் தனது தாயிடம் அழுதபடி பேசுகிறார். தாய் அந்தச் சிறுவனைச் சமாதானப்படுத்துகிறார். ஆனால் சமாதானத்தை ஏற்காத சிறுவன், “தோனி அவுட்டே இல்லை, 3-வது நடுவர் அவுட் கொடுத்துவிட்டார், 3-வது நடுவர் தூக்குப்போட்டுட்டு செத்துருவார்” என அழுகிறார்.
மற்றொரு காணொலியில் சிஎஸ்கே ஜெர்சி அணிந்த சிறுவன், தோனியின் அவுட்டை ஏற்றுக்கொள்ளாமல் ‘அய்யோ மம்மி அய்யோ மம்மி என்று கூச்சலிட்டு குதித்து குதித்து அழுகிறார்.
மும்பையின் பயிற்சியாளரா மஞ்ச்ரேக்கர்?
ஐபிஎல் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் வர்ணனையாளர் குழுவில் இடம் பெற்றிருந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து நேர்மறையான கருத்துகள் எழவில்லை. மாறாக மஞ்ச்ரேக்கரை, ட்விட்டரில் கேலிக்குள்ளாக்கினர் ரசிகர்கள்.
நிரஞ்ஜன் என்ற ரசிகர் தனது பதிவில், “வர்ணனையாளர் குழுவில் இருந்து கொண்டு ‘இதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள் குயிண்டன் டி காக்‘ என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூச்சல் போடுகிறார். அவர், வர்ணனையாளரா அல்லது மும்பை அணியின் பயிற்சியாளரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு ரசிகர், “சஞ்சய் மஞ்ச்ரேக்கர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாகவே வர்ணனை செய்வது ஏன்? அவர், ரசிகர்களின் கேலரியில் அமர்ந்து கொண்டு தனக்கு விருப்பமான அணியை ஆதரிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago