இந்தியாதான் வெல்லும் இங்கிலாந்துதான் வெல்லும் என்றால் உ.கோப்பையை வென்று விடுவார்களா? - ஷாகிப் அல் ஹசன் கடுப்பு

2019 உலகக்கோப்பையில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு கோப்பையை வெல்ல வாய்ப்பு என்று முத்திரைக் குத்திவிட்டால் வென்று விட முடியுமா, கிரிக்கெட் களத்தில் ஆடப்படுவது பேப்பரில் ஆடப்படுவது அல்ல என்று வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் கடுப்புடன் தெரிவித்துள்ளார்.

 

இந்தியச் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

 

இயான் மோர்கன், விராட் கோலி ஆகியோரது அணிகள் உலக கிரிக்கெட்டைத் தற்போது ஆண்டு வருகின்றன இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இவர்கள்தான் வெல்வார்கள் என்ற முத்திரை மட்டுமே கோப்பையை வெல்ல போதாது.

 

இந்தியாவும் இங்கிலாந்தும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளே. ஆனால் இந்த முத்திரை போதுமா? உலகக்கோப்பையை வென்று விட முடியுமா? ஒரு தொடரை வெல்ல கடினமான ஆட்டத்தை களத்தில் இறங்கி ஆட வேண்டும், காகிதத்தில் ஆடுவது அல்ல...குறிப்பாக உலகக்கோப்பைத் தொடர்களில்.  ஆஸ்திரேலியா சமீபமாக நன்றாக ஆடுகின்றனர். மே.இ.தீவுகள் சரியான நேரத்தில் உச்சம் பெற்றுள்ளனர்.  உள்ளபடியே பார்த்தோமானால் அனைத்து அணிகளும் போராட்டத்துக்குத் தயாராகவே உள்ளன. யார் குறிப்பிட்ட நாளில் சிறப்பாக ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்து வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.

 

இந்த முறை எங்களுக்கு உண்மையாகவே வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன். ஆனால் இந்த முறை தொடர் விளையாடப்படும் முறையைக் கருத்தில் கொண்டு சீரான முறையில் சிறப்பாக ஆட வேண்டும். அதைச் செய்தால் நாக் அவுட் சுற்றுக்கு நாங்களும் தயாராவோம். அங்கிருந்து அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டு செல்வோம். இம்முறை நாங்கள் நிச்சயமாக நன்றாக ஆடுவோம் என்றே நம்புகிறேன்.

 

தனிப்பட்ட முறையில் வங்கதேசம் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் நிறைய விஷயங்கள் நமக்குச் சாதகமாக அமைய வேண்டும்.

 

எங்கள் அணி நல்ல அணிதான், ஆனால் பந்து வீச்சு குறித்து நான் கவலையடைகிறேன். புதிய பந்திலும் சரி முடிவு ஓவர்களிலும் சரி பவுலிங் மேம்பட வேண்டும். எந்த அணியும் எந்த அணியையும் வீழ்த்த முடியும்.

 

என்று ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE