அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் ஜப்பானின் கெய் நிஷிகோரி. இதன்மூலம் கடந்த 96 ஆண்டுகளில் அமெரிக்க ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஜப்பானியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் நிஷிகோரி. இதற்கு முன்னர் 1918-ல் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் ஜப்பானின் இசியா குமாகே அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்.
இசியாவுக்குப் பிறகு மற்றொரு ஜப்பான் வீரர் அரையிறுதிக்கு முன்னேற ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம் ஆகியிருக்கிறது. போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் நிஷிகோரி கடும் போராட்டத்துக்குப் பிறகு 3-6, 7-5, 7-6 (7), 6-7 (5), 6-4 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவை தோற்கடித்தார். 5 செட்கள் வரை சென்ற இந்த ஆட்டம் 4 மணி நேரம், 15 நிமிடங்கள் நடைபெற்றது. 4-வது செட்டில் 3-வது கேமுக்குப் பிறகு கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிஷிகோரி விடாப்பிடியாக போராடி வெற்றி பெற்றார்.
வெற்றி குறித்துப் பேசிய நிஷிகோரி, “ஆரம்பம் முதலே சவாலாக இருந்தபோதிலும், முதல் செட்டுக்குப் பிறகு எனக்குள் நம்பிக்கை ஏற்பட்டது. இந்த வெற்றி எனக்கு வியப்பாக இருக்கிறது. அரையிறுதியிலும் 100 சதவீதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன்” என்றார்.
நிஷிகோரி தனது அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை சந்திக்கவுள்ளார். இவர்கள் இருவரும் இதுவரை இருமுறை நேருக்கு நேர் மோதி, தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் கடைசியாக மோதியுள்ளனர்.
முர்ரே தோல்வி
ஜோகோவிச் தனது காலிறுதியில் 7-6 (1), 6-7 (1), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி அமெரிக்க ஓபனில் தொடர்ந்து 8-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார். 3 மணி நேரம், 32 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தோடு சேர்த்து முர்ரேவுடன் 21 முறை மோதியுள்ள ஜோகோவிச் 13-வது வெற்றியை ருசித்துள்ளார். வெற்றி குறித்துப் பேசிய ஜோகோவிச், “நான் எதிர்பார்த்தது போலவே முர்ரே சவால் அளித்தார்” என்றார்.
அரையிறுதியில் செரீனா
மகளிர் ஒற்றையர் காலிறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் இத்தாலியின் பிளேவியா பென்னட்டாவை தோற்கடித்தார். செரீனா தனது அரையிறுதியில் ரஷ்யாவின் எக்டெரினா மகரோவாவை சந்திக்கிறார். போட்டித் தரவரிசையில் 17-வது இடத்தில் இருக்கும் மகரோவா தனது காலிறுதியில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அசரென்காவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.
இறுதிச்சுற்றில் சானியா ஜோடி
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-பிரேசிலின் புருனோ சோயர்ஸ் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் அரையிறுதியில் 7-5, 4-6, 10-7 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் யங் ஜான் சான்-ஜெர்மனியின் ரோஸ் ஹட்சின்ஸ் ஜோடியை தோற்கடித்தது.
இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் அபிகெய்ல் ஸ்பியர்ஸ்-மெக்ஸி கோவின் சான்டியாகோ கொன்ஸாலேஸ் ஜோடியை சந்திக்கிறது சானியா ஜோடி.
கிராண்ட்ஸ்லாம் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் 5-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் சானியா மிர்சா. இந்தப் பிரிவில் 2009-ல் ஆஸ்திரேலிய ஓபனிலும், 2012-ல் பிரெஞ்சு ஓபனிலும் மகேஷ் பூபதியுடன் இணைந்து சானியா பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 mins ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago