அமெரிக்க ஓபன்: இறுதிச்சுற்றில் செரீனா, வோஸ்னியாக்கி

By செய்திப்பிரிவு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியும் மோதவுள்ளனர். இந்த ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ள செரீனா தனது அரையிறுதியில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் எக்டெரினா மகரோவாவை தோற்கடித்தார்.

இந்த ஆண்டில் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் செரீனா. அவர் இந்தப் போட்டியில் பட்டம் வெல்லும் பட்சத்தில் இது அவருடைய 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும். மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனைகள் கிறிஸ்

எவர்ட், மார்ட்டினா நவரத்திலோவா ஆகியோரின் சாதனையையும் செரீனா சமன் செய்வார்.

மற்றொரு அரையிறுதியில் வோஸ்னியாக்கியும், சீனாவின் பெங் ஷுவாயும் மோதினர். இதில் வோஸ்னியாக்கி 7-6 (1), 4-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது வெப்பத்தால் ஏற்பட்ட உடல் நலகுறைவு காரணமாக ஷுவாய் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து வோஸ்னியாக்கி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த வோஸ்னியாக்கி, “ஷுவாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை பார்த்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. டென்னிஸ் மிகப்பெரிய விஷயம். ஆனால் உடல்நலம் இன்னும் முக்கியமானது. அவர் பூரண குணமடைய வேண்டும்” என்றார்.

இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வதற்காக இளம் வயதிலேயே அறுவை சிகிச்சை செய்து கொண்டவரான பெங் குறித்து மிகவும் கவலை தெரிவித்த வோஸ்னியாக்கி, “சிகிச்சைக்காக பெங் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது விதிமுறை மீறலாக இருக்குமா என்பது குறித்தெல்லாம் நான் கவலைப்படவில்லை” என்றார்.

சானியா ஜோடி சாம்பியன்

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-பிரேசிலின் புருனோ சோயர்ஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் 6-1, 2-6, 11-9 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அபிகெய்ல் ஸ்பியர்ஸ்-மெக்ஸிகோவின் சான்டியாகோ கொன்ஸாலெஸ் ஜோடியைத் தோற்கடித்தது. முதல்முறையாக அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றிருக்கும் சானியாவுக்கு ஒட்டுமொத்தத்தில் இது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

வெற்றிக்குப் பிறகு பேசிய புருனோ சோயர்ஸ், “எங்களுக்கு ஆதரவு அளித்த இந்திய மற்றும் பிரேசில் ரசிகர்களுக்கு நன்றி” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE