ஜோஸ் பட்லரின் பேரடியால் மும்பையில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 27-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 3 பந்துகள் மீதம் இருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெறும் 2-வது வெற்றி இதுவாகும். 7 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 2 வெற்றிகள், 5 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லரின் பேரடியை மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மறக்க மாட்டார்கள்.குறிப்பாக அல்சாரி ஜோஸப் ஓவரில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என மொத்தம் 28 ரன்கள் விளாசி பட்டையை கிளப்பிவிட்டார். 29 பந்துகளில் அரைசதம் அடித்த பட்லர் 43பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிஅடங்கும். ஆட்டநாயகன் விருதையும் பட்லர் வென்றார்.
ஜோஸ்பட்லர் வலுவாக அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக்கொள்ளாதது கடைசி நேர பரபரப்புக்கு வித்திட்டது. 147 ரன்களுக்கு 2-வது விககெட்டை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 27 ரன்களைச் சேர்ப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் குறிப்பாக 170 ரன்களில் 3-வது விக்கெட்டையும் அடுத்த 4 ரன்களுக்குள் அடுத்த 3 விக்கெட்டுகளையும் இழந்தது வேதனைக்குரியதாகும்.
அதேசமயம், ஐபிஎல் போட்டி ஏதோ நாடகத்தனமான நிலைக்கு இட்டுச் செல்கிறதோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. ஆனால், பட்லர் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தை சரியாகப் பயன்படுத்தி இருந்தால், ராஜஸ்தான் அணி எளிமையாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், கடைசி வரை ஆட்டத்தை இழுத்துச் சென்றது வேடிக்கை.
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொருத்தவரை, கடைசிநேரத்தில் பரபரப்பாக பந்துவீசினாலும், இந்த ஆட்டத்தில் அதிகமான கேட்சுகளை கோட்டைவிட்டனர். முதல் ஓவரில் கேப்டன் ரோஹித் சர்மா கேட்ச்சை நழுவவிட்டார், அதன்பின் இஷான் கிஷான் ஒரு கேட்சே நழுவிட்டார்.
இரு கேட்சுகளையும் பிடித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும். இதைக்காட்டிலும் அல்ஜாரி ஜோஸப் 53 ரன்கள் வாரி வழங்கியதும், அதில் பாதி ரன்கள் ஒரே ஓவரில் கிடைத்ததும் தோல்விக்கு முக்கியக் காரணம்.
188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. பட்லர், ரஹானே ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஜோஸப் வீசிய 2-வது ஓவரில் இருந்து பட்லர் அதிரடியை காட்டினார். அந்த ஓவரில் இரு பவுண்டரிகள் விளாசினார்.
பெஹரன்டார்ப் வீசிய 3-வது ஓவரில் ரஹானே 2 பவுண்டரிகளும், பட்லர் ஒரு சிக்ஸரும்விளாசினர். ஜோஸப் வீசிய 5-வது ஓவரில் ரஹானே 3 பவுண்டரிகள் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார்.
பும்ரா ஓவரையும் விட்டு வைக்காத பட்லர் 6-வது ஓவரில் ஒரு சிக்ஸர் விளாச, ரஹானே பவுண்டரி அடித்தார்.ராஜஸ்தான் அணி பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் குவித்தது.
குர்னால் பாண்டியா வீசிய 7-வது ஓவரில் டீப் மிட்விக்கெட்டில் நின்றிருந்த யாதவிடம் கேட்ச் கொடுத்து ரஹானே 37 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 60 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து சாம்ஸன் களமிறங்கினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய பட்லர், சிக்ஸர்களும், பவுண்டரிகளும் விளாசினார். குர்னால் பாண்டியா வீசிய 9-வது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசினார் பட்லர். சாஹர் வீசிய 12-வது ஓவரில் சாம்ஸனும், பட்லரும் தலா ஒரு சிக்ஸர் விளாசினார். அதிரடியாக ஆடிய பட்லர் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அல்சாரி ஜோஸப் வீசிய 13-வது ஓவரை பட்லர் எதிர்கொண்டார். முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் பட்லர். அடுத்த 4 பந்துகளிலும் பவுண்டரிகளையும், கடைசிப்பந்தில் ஒரு சிக்ஸரையும் விளாசினார் பட்லர். ஒட்டுமொத்தமாக 28 ரன்களை இந்த ஓவரில் சேர்த்தார் பட்லர்.
சாஹர் வீசிய 14-வது ஓவரில் லாங் ஆப் திசையில் யாதவிடம் கேட்ச் கொடுத்து 89 ரன்களில் பட்லர் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து ஸ்மித் களமிறங்கி, சாம்ஸனுடன் சேர்ந்தார். பும்ரா வீசிய 17-வது ஓவரில் சாம்ஸன் 31 ரன்களில் எல்பிடபில்யு முறையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வரிசையாக சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
குர்னல் பாண்டியா வீசிய 18-வது ஓவரில் திரிபாதி ஒரு ரன்னிலும் லிவிங்ஸ்டோன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி 2 ஓவர்களில் 14 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா வீசிய 19-வது ஓவரில் ஸ்மித் 12 ரன்களில் இஷான்கிஷானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டது.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்டியா வீசிய அந்த ஓவரில் ஸ்ரேயாஸ் கோபால் 2 ரன்களும், ஒரு பவுண்டரியும் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
மும்பை அணித் தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும், குர்னல் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முன்னதாக, முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் ி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டீகாக் 81 ரன்களும், ரோஹித்சர்மா 47 ரன்களும் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். மற்ற வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. யாதவ் 16 ரன்களிலும், பொலார்ட் 6 ரன்களிலும் , இசான் கிஷான்5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago