தோனியையே மாற்றிவிட்டது: ஐபிஎல் போட்டியில் உருவாகும் புதிய கலாச்சாரம்

By க.போத்திராஜ்

'ஜென்டில்மேன் கேம்', 'ஸ்பிரிட் ஆப் தி கேம்' என்று கிரிக்கெட்டின் மகத்துவத்தை உணர்த்தும் வார்த்தைகள் எல்லாம், வர்த்தக ரீதியான ஐபிஎல் லீக் போட்டியால் தலையெடுத்த புதிய கலாச்சாரத்தால் மலையேறி வருகின்றன.

அதற்கு இந்த ஐபிஎல் சீசனில் நடந்த சில சம்பவங்களே சாட்சி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜோஸ் பட்லருக்கு அஸ்வின் செய்த மன்கட் அவுட்.

அஸ்வின் செய்த மன்கட் அவுட் நிச்சயம் கிரிக்கெட் விதிமுறைகள் படி சரியானதுதான். ஆனால் ஸ்பிரிட் ஆப் தி கேம், கிரிக்கெட்டின் தார்மீகத்துக்கு நேர் எதிரானது என்பதை மறுக்க முடியாது.  

அதேபோல, கொல்கத்தா அணிக்கு எதிராக ஓவர் த்ரோவில் 4 ரன்களுக்காக நடுவர்களிடம் வாக்குவாதம் செய்து அஸ்வின்  பெற்றதும் ஸ்பிரிட் ஆப் தி கேமுக்கு எதிரானதுதான்.

அஸ்வின் செய்த இரு செயல்களுக்கும், நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி, நடந்த கொண்ட முறைக்கும் வேறுபாடு ஏதும் இல்லை.

 எதிரணி வீரர் வீசிய பந்து நோபாலாக என்று ஸ்ட்ரைட் அம்பயர் அளித்த தீர்ப்பை மாற்றிய லெக் அம்பயருக்கு எதிராக மைதானத்தில் அமர்ந்திருந்த தோனி, எழுந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டது கிரிக்கெட்டின் விதிமுறைகளுக்கு மட்டும் மாறானது அல்ல, ஸ்பிரிட் ஆப்தி கேமுக்கு பொருந்தாத ஒன்று.

அஸ்வினின் செயல் கிரிக்கெட் விதியின்படி சரியானதுதான், தார்மீக அடிப்படையில் சரியல்ல. ஆனால், தோனியின் செயல் கிரிக்கெட் விதியின்படியும் சரியானது அல்ல, ஸ்பிரிட் ஆப் தி கேமின்படியும் நேர்மையானது அல்ல.

உண்மையில், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தோனியின் ஸ்பிரிட் ஆப் தி கிரிக்கெட் பண்பு அனைத்து வீரர்களாலும் திக்கப்படக் கூடியது.

நடுவர்களின் தீர்ப்புக்கு மாறாக அப்பீல் செய்ய கொண்டுவரப்பட்ட டிஆர்எஸ் முறையை தீவிரமாக எதிர்த்தவர் தோனி. ஏனென்றால், களத்தில் உள்ள நடுவர்கள் கூறும் தீர்ப்பை ஏற்க வேண்டும், ஆனால், அவர்களின் தீர்ப்பையே சந்தேகப்பட வைப்பதுபோன்று டிஆர்எஸ் இருக்கிறது என்று நடுவர்களுக்கு ஆதரவாக பேசி, டிஆர்எஸ் முறையை எதிர்த்தவர் தோனி.

அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்து தொடரில் இங்கிலாந்து வீரர் இயான் பெல், நண்பகல் ஆட்டம் முடிந்து உணவு இடைவேளைக்கு செல்வதாக நினைத்து புறப்படுகையில் அவரை இந்திய வீரர்கள் ரன் அவுட் செய்தனர்.

 ஆனால், அந்த அவுட் ஸ்பிரிட் ஆப் தி கேமுக்கு மாறானது என்று கூறிய தோனி, மீண்டும் இயான் பெல்லை விளையாட அழைத்து வந்தார். அந்த ஆட்டத்தில், இயான் பெல் அடித்த சதத்தால்தான் இந்திய அணி தோற்றது.

இதுபோன்ற தோனி ஸ்பிரிட் ஆப் தி கிரிக்கெட்டுக்கு அதிகம் மதிப்புக் கொடுப்பவர், நடுவர்களின் தீர்ப்பை மதிக்கக்கூடியவர். ஆனால், தோனியே நேற்று தனது கூல் கேப்டன் என்ற தனது பெயருக்கு மாறாக களத்தில் இறங்கி நடுவர்களுடன் வாதிட்டது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

தோனி மாறிவிட்டாரா அல்லது ஐபிஎல் போட்டியில் சமீப காலமாக புகுந்துவரும் வரும் வர்த்தக ரீதியான கலாச்சாரங்கள், வீரர்கள் மீது கோடிக்கணக்கில் கொட்டப்படும் முதலீடுகளை எடுப்பதற்காக வீரர்களை வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு விளையாடச் செய்கிறதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

வெற்றி போதை தலைக்கேறி எப்படி வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற முடிவுக்கு வந்தால், ஸ்மித், வார்னர் கதிதான் வீரர்களுக்கு ஏற்படும்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாட்ஜ் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் கடும் நெருக்கடி அளிக்கப்படுகிறது. அனைத்து அணிகளும் இறுதிப்போட்டியை நோக்கி விரட்டப்படுகிறார்கள். ’வெற்றி பெறு இல்லையா வெளியேறு’ என்று அணி நிர்வாகம் கொடுக்கும் குடைச்சலால் வீரர்களும், கேப்டன்களும் நேர்மை எனும் லட்சுமண ரேகையை விட்டு விலகும் சூழல் ஏற்படுகிறது" என்று வேதனை தெரிவித்திருந்தார்.

இந்த வலையில் தோனி அகப்படாமல் இருந்துவந்தால், ஆனால், தானும் விதிவிலக்கல்ல என்பதை நேற்று அவரின் செயல் நிரூபித்துவிட்டது.

ஐபிஎல் போட்டி என்பது கார்ப்பரேட் நிறுவனங்களால், பொழுதுபோக்கு அம்சத்துக்காக நடத்தப்படும் போட்டியேத் தவிர ஐசிசியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது அல்ல என்பதை வீரர்கள் உணர வேண்டும்.

ஐபிஎல் போட்டியில் கிடைக்கும் வெற்றியும், தோல்வியும் ஐசிசியால் அங்கீகரிக்கப்படுவதும் இல்லை, ஒருவீரரின் சாதனைகளில் இடம் பெறப் போவதும் இல்லை.

 அப்படி இருக்கும் போது வெற்றிக்காக  ஆட்டமிழந்த நிலையில் வெளியே அமர்ந்திருக்கும் கேப்டன் மைதானத்துக்குள் வந்து நடுவரிடம் வாக்குவாதம் செய்தது எதை உணர்த்துகிறது.

வெற்றி மட்டுமே முக்கியம், வர்த்தக நோக்கம் ஒன்றுதான் குறிக்கோள் என்பதைத் தவிர தோனியின் செயல்பாடு வேறு எதையும் உணர்த்தவில்லை. ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு ரன்னும் வர்த்தக ரீதியாகவே பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஒரு கேப்டனாக இருந்து கொண்டு நடுவரிடம் வாக்குவாதம் செய்ததும் தோனியின் மீது அவர் ரசிகர்கள் வைத்திருந்த மிகப்பெரிய அபிமானத்தை குலைத்துவிட்டது.  

சர்வதேச தளத்தில் மதிக்கப்படும் ஒரு லீக் கிரிக்கெட்டில் தெருவில் விளையாடும் கிரிக்கெட் போட்டி போன்று நடுவரிடம் ஒரு கேப்டன் வாக்குவாதம் செய்தது தோனிக்கு மட்டுமல்ல, சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கும் தலைகுனிவுதான்.

தோனியை நாடுமுழுவதும் கிரிக்கெட் பயின்று வரும் லட்சக்கணக்கான இளம் ரசிகர்கள் ஆத்மார்த்தமாக நினைத்து அவரின் செயல்களை பின்பற்றி வருகிறார்கள். அவருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய தோனி நடுவரிடம் வாக்குவாதம் செய்த செயல், அவரைப் பின்தொடரும் ரசிகர்களையும் தூண்டுவது போன்றதாகும்.

தோனியின் செயலை முன்னாள் வீரர்கள் பலரும் கண்டித்துள்ளனர், தோனியிடம் இருந்து இதுபோன்ற செயலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, அதிர்ச்சியாக இருக்கிறது, இது ஆரோக்கியமான கிரிக்கெட்டுக்கு அழகல்ல என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக  இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வான், மைக்கேல் ஸ்லாட்டர், ஆகாஷ் சோப்ரா, அபிஷேக் முகர்ஜி, தமிழக வீரர் ஹேமங் பதானி, சஞ்சய் மஞ்சரேக்கர், வர்ணனையாளர் ஹர்சா போக்லே ஆகியோரின் கண்டனத்துக்கு தோனி ஆளாகியுள்ளார்.

இத்தகைய போக்குகளுக்கு எதிராக கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக ஆடும் முறையை பிசிசிஐ வலியுறுத்துவது அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்