டேவிட் வார்னரின் அதிரடி அரைசதம், ரஷித் கானின் திணறவைக்கும் லெக்ஸ்பின் ஆகியவற்றால், ஹைதராபாத்தில் நேற்று நடந்த 48-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இதன் மூலம் 12 ஆட்டங்களில் 6 வெற்றிகள், 6 தோல்விகள் என மொத்தம் 12 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் அணி 5-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் அணி நல்ல நிலையில் இருப்பதால், அடுத்து வரும் இரு ஆட்டங்களையும் கட்டாயம் வென்றால், ப்ளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அதேசமயம், மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளும் சன்ரைசர்ஸ் அணி ப்ளே-ஆப் சுற்றுக்குள் செல்வதையும் தீர்மானிக்கும்.
அதேசமயம், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் 5 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் பெற்று 10 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அடுத்துவரும் 2 ஆட்டங்களையும் கட்டாயம் அதிகமான ரன்ரேட் அடிப்படையில் வெல்ல வேண்டியது அவசியம். அவ்வாறு வென்றாலும், ரன்ரேட் அடிப்படையில் பார்க்கும் போது, ப்ளே-ஆப் சுற்றுக்கு செல்வதை உறுதி செய்ய முடியாது.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. 213 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து 45 ரன்களில் தோல்வி அடைந்தது.
'ப்ளையிங் கிஸ்' வார்னர்
சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரின் பேட்டிங், ரஷித் கானின் பந்துவீச்சு ஆகியவை வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிடலாம். இந்த ஆட்டத்துடன் வார்னர் உலகக் கோப்பைப் போட்டிக்கு தயாராவதற்காக தன்னுடைய தாய்நாட்டுக்கு புறப்பட்டார். ஆட்டமிழந்து செல்லும் போது வார்னர் சொந்த மைதானத்தில் உள்ள ரசிகர்களுக்கு ப்ளையிங் கிஸ் கொடுத்துவிட்டு சென்றபோது, ரசிகர்கள் கரகோஷம் காதைப் பிளந்தது.
இந்த சீசனில் தன்னுடைய கடைசி ஆட்டம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்த வார்னர், இந்த ஆட்டத்தில் 56 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். தொடர்ந்து இந்த சீசனில் 8-வது முறையாக வார்னர் அரைசதம் அடித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு சென்றதில் இருந்து கடந்த ஆண்டைத் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் எல்லாம் வார்னர் 500 ரன்களுக்கு குறையாமல் சேர்த்துள்ளார். தற்போதுவரை 12 ஆட்டங்களில் 692 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம், 8 அரை சதங்கள் அடங்கும்.
இங்கு மட்டுமே காண முடியும்
சிறப்பாகப் பந்துவீசிய ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கே.எல். ராகுல் சன்ரைசர்ஸ் கேப்டன் வில்லியம்ஸன் கேட்ச்பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். வில்லியம்ஸன் கேட்ச் பிடித்ததும் அவரின் தலையில் முத்தமிட்டு கலீல் அகமது பாராட்டியது அழகு, மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. இதுபோன்ற நிகழ்வுகளை நிச்சயம் ஐபிஎல் போட்டியில் மட்டுமே காண முடியும்.
மோசமான பந்துவீச்சு
அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் அணியில் நேற்றைய பந்துவீச்சும், பேட்ஸ்மேன்களின் செயல்பாடும் மிக மோசமாக இருந்தது. அந்த அணியின் தொடக்க பந்துவீச்சாளர் அர்ஷதீப் சிங், முஜிப் உர் ரஹ்மான் இருவரும் சேர்ந்ந்து 108 ரன்களை வாரி வழங்கினார்கள்.
ஐபிஎல் வரலாற்றில் தொடக்க பந்துவீச்சாளர்கள் இந்த அளவுக்கு மோசமாக பந்துவீசியது இதுதான் முதல் முறையாகும். அதிலும் முஜிப் உர் ரஹ்மான் 4 ஓவர்களில் 66 ரன்கள் வழங்கி ஐபிஎல் சீசனில் அதிகபட்ச ரன்களை வழங்கிய பந்துவீச்சாளர் என்ற பெயரைப் பெற்றார்.
பஞ்சாப் அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில் நேற்று 4 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ராகுல் 79 ரன்கள் சேர்த்ததே அந்த அணிக்கு மிகப்பெரிய ஆறுதலாகும். மற்ற வீரர்கள் அனைவரும் ப்ளே-ஆஃப் வாய்ப்பு கிடைக்காதோ என்று தெரிந்து கொண்டு விளையாடியதுபோல் பொறுப்பின்றி பேட் செய்ததைக் காண முடிந்தது.
213 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கெயில், ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். கெயில் 4 ரன்கள் சேர்த்தநிலையில், கலீல் அகமது வீசிய 3-வது ஓவரில் பாண்டேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கெயில் ஏமாற்றம்
அடுத்துவந்த மயங்க் அகர்வால், ராகுலுடன் சேர்ந்து ஓரளவுக்கு நிதானமாக ரன்களைச் சேர்த்தார். பவர்ப்ளேயில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் சேர்த்தது. ரஷித்கான் வீசிய 8-வது ஓவரில் விஜய்சங்கரிடம் கேட்ச் கொடுத்து 27 ரன்கள் சேர்த்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர்.
அதன்பின் வந்த நிகோலஸ் பூரன் வேகமாக ரன்களைச் சேர்த்தார். ரஷித் கான் வீசிய 11-வது ஓவரில் ஒருசிக்ஸர், 2 பவுண்டரிகள் சேர்த்து, 4-வது பந்தில் புவனேஷ்வரிட் கேட்ச் கொடுத்து 21 ரன்களில் பூரன் ஆட்டமிழந்தார்.
ரஷித் கான் வீசிய 13-வது ஓவரில் மில்லர் 11 ரன்னிலும், அஸ்வின் டக்அவுட்டிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப் அணியை மேலும் சிக்கலாக்கியது. விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தபோதிலும் நிதானமாக பேட் செய்த ராகுல் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ராகுல் ஆறுதல்
6-வது விக்கெட்டுக்கு சிம்ரன் சிங், ராகுல் கூட்டணி ஓரளவுக்கு நிலைத்தனர். இருவரும்53 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கலீல் அகமது பந்துவீச்சில் 56பந்துகளில் 79 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் ஆட்டமிழந்தார். அதன்பின் பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது.
சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரில் சிம்ரன் சிங் 16 ரன்களிலும், முஜிப் உர் ரஹ்மான் டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். கடைசி 7 ரன்களுக்குள் 3 விக்கெட்டை பஞ்சாப் அணி இழந்தது குறிப்பிடத்தக்கது. 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து 45 ரன்களில் தோல்வி அடைந்தது.
வார்னர் அதிரடி
warner-pandejpgவிரைவாக ரன்கள் சேர்த்த வார்னர், மணிஷ் பாண்டே கூட்டணி : படம் உதவி ஐபிஎல்100
முன்னதாக, டாஸ்வென்ற அஸ்வின் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். வார்னர், விர்திமான் சாஹா நல்ல தொடக்கம் அளித்தனர். குறிப்பாக வார்னர் முஜிப்உர்ரஹ்மான் பந்துவீச்சையும், அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சையும் வெளுத்துவாங்கி பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் குவித்தது.
முருகன் அஸ்வின் வீசிய 7-வது ஓவரில் சாஹா 28 ரன்கள் சேர்த்தநிலையில், கீப்பர் சிம்ரன் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து மணிஷ்பாண்டே களமிறங்கி வார்னருடன் இணைந்தார். இருவரும் சீராக ரன்களை சேர்த்ததால், ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. வார்னர் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். 10 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் சேர்த்தது.
அஸ்வின் வீசிய 17-வது ஓவர் திருப்புமுனையாக அமைந்தது. 36 ரன்கள் சேர்த்த நிலையில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து மணிஷ் பாண்டே ஆட்டமிழந்தார். அடுத்த இரு பந்துகளில் , ரஹ்மானிடம் கேட்ச் கொடுத்து 81 ரன்களில் வார்னர் வெளியேறினார்.
கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்
இருவரும் சென்றபின் விக்கெட்டுகள் விரைவாக விழுந்தன. முஜிப்பூர் வீசிய 18-வது ஓவரில் வில்லியம்ஸன் ஒரு சிக்ஸர், பவுண்டரியும், முகமது நபி ஒரு சிக்ஸர்,பவுண்டரியும் அடித்து நொறுக்கினார்கள்.
ஷமி வீசிய 19-வது ஓவரில் வில்லியம்ஸன் 14 ரன்னில் முருகன் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்தார், அடுத்து இரு பந்துகளில் முகமது நபி 20 ரன்னில் போல்டாகி வெளியேறினார்.
அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் ரஷித் கான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 7 ரன்னிலும், அபிஷேக் சர்மா 5 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் அணி இழந்தாலும், ஏறக்குறைய 73 ரன்களைச் சேர்த்தது.
20ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது சன்ரைசர்ஸ் அணி. பஞ்சாப் அணித் தரப்பில் ஷமி, அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago