பொலார்ட் காட்டடி தர்பார் : கடைசிப்பந்தில் மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி: ராகுலின் முதல் சதம் வீண்

By க.போத்திராஜ்

ஒற்றை மனிதராக இருந்து பொலார்ட் நடத்திய காட்டடி தர்பாரில், மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 24-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி  த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. 198 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசிப் பந்தில் 198 ரன்கள் எனும் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி மொத்தம் 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.

ஐபிஎல் வரலாற்றில், மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் செய்த 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். தன்னுடைய சொந்த மண்ணில் இதுபோன்ற மிகப்பெரிய ஸ்கோரை எந்த அணியும் இதுவரை சேஸிங் செய்தது இல்லை.

11 ஆண்டுகளில் முதல்முறை

 மும்பை இந்தியன்ஸ் அணியின் வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக போட்டியில் விளையாடாததால், கேப்டன் பொறுப்பை பொலார்ட் ஏற்றார். கடந்த 2008-ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் ரோஹித் சர்மா இருப்பது இதுதான் முதல் முறையாகும். ஏறக்குறைய 11 ஆண்டுகளாக தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் ஒரு ஆட்டத்தைக் கூட தவறவிடாமல் பங்கேற்ற ரோஹித் சர்மா முதல்முறையாக நேற்று விளையாடவில்லை.

பொறுப்பான கேப்டன்

ரோஹித் சர்மா இல்லாத நிலையிலும், கேப்டனுக்குரிய அனைத்து தகுதிகளுடன் அணியை கடைசி கட்டம் வரை வழிநடத்தி வெற்றிக்கு இட்டுச் சென்றார் பொலார்ட். பொலார்ட் அடித்த காட்டடியை நிச்சயம் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் மறக்க மாட்டார்கள். சாம் கரண், அஸ்வின், ராஜ்பூத் ஆகியோரின் பந்துகளை பொலார்ட் நொறுக்கித் தள்ளிவிட்டார்.

4 ஓவர்கள் வீசிய சாம் கரண் 54 ரன்கள் வாரிக்கொடுத்தார், அஸ்வின் 37 ரன்களும், ராஜ்பூத் 52 ரன்களும் வழங்கினார்கள்.

கடைசி 10 ஓவர்களில் 133 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதை பொலார்ட் ஒற்றை மனிதராக  இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 22 பந்துகளில் அரைசதம் அடித்த பொலார்ட் 31 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 10 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும். அதிரடியாக ஆடிய பொலார்ட் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.

வாய்ப்பை தவறவிட்ட அஸ்வின் அணி

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி தொடக்கத்திலே டீ காக், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு 2 கேட்ச்சுகளை தவறவிட்டனர். இருந்தபோதிலும், கூட விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 63 ரன்கள் மட்டுமே மும்பை அணியை சேர்க்க விட்டிருந்தனர். இதனால், அடுத்த 10 ஓவர்களில் 133 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி சேர்ப்பது கடினமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆட்டத்தின் போக்கும் கிங்ஸ்லெவன்  பஞ்சாப் அணியின் பக்கமே இருந்தது. ஆனால், 10 ஓவர்களுக்கு மேல் நெருக்கடி தரும் பந்துவீச்சு கிங்ஸ்லெவன் அணியில் இல்லாததால், பொலார்டின் அதிரடிக்கு கடிவாளம் போட முடியவில்லை. குறிப்பாக சாம் கரண், ராஜ்பூத் ஆகியோருக்கு ஓவர்களை தவிர்த்து கெயில், மில்லர் ஆகியோரை பந்துவீச அழைத்திருக்கலாம். ராஜ்பூத், சாம் கரண் ஆகிய இரு வீரர்களின் ஓவர்களில் மட்டும் 100 ரன்களுக்கு மேல் சென்றுள்ளது.

கடின இலக்கு

198 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்கோடுதான் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. லாட், டீ காக் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ராஜ்புத் வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸர், பவுண்டரி அடித்து லாட் அசத்தினார். ராஜ்புத்வீசிய 3-வது ஓவரில் டீ காக் 2 பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை உயர்த்தினார்.

ஷமி வீசிய 4-வது ஓவரில் லாட் 15 ரன்கள் சேர்த்த நிலையில், கிளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ராஜ்புத் வீசிய 5-வது ஓவரில் யாதவ் 3 பவுண்டரிகள் அடித்து நொறுக்கினார். இந்த ஓவரில் கைக்கு கிடைத்த கேட்சை மில்லர் நழுவவிட்டார்.

நிதானமாக பேட் செய்து வந்த யாதவ் 8-வது ஓவரில் ஆட்டமிழந்தார். சாம் கரன் வீசிய அந்த ஓவரில் டீப் ஸ்கொயரில் ஹென்ரிக்ஸிடம் கேட்ச் கொடுத்து  21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அஸ்வின் வீசிய 9-வது ஓவரில் டீ காக் லாங் ஆப் திசையில் தூக்கி அடித்த பந்தை மில்லர் ஓடிவந்து லாவகமாக கேட்ச் பிடித்தார். டீ காக் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

60 பந்துகளில் 133 ரன்கள்

பொலார்ட், இஷான் கிஷன் களத்தில் இருந்தனர். 10 ஓவர்களில் வெற்றிக்கு 133 ரன்கள் தேவைப்பட்டது. மும்பை அணியின் வெற்றி அருகிவிடுமோ என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொலார்ட் அடுத்தடுத்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை தன் பக்கம் திருப்பினார்.

அஸ்வின் வீசிய 11-வது ஓவரில் கிஷான் ஒரு பவுண்டரி அடிக்க, பொலார்ட் ஒரு சிக்ஸர் விளாசினார். கரண் வீசிய 12-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசினார், அந்த ஓவரின் கடைசிப் பந்தில் கிஷான் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, பொலார்டுடன் இணைந்தார். பொலார்ட்டின் அதிரடிக்கு ஒத்துழைத்து பாண்டியா விளையாடினார். அஸ்வின் வீசிய 14-வது ஓவரில் பாண்டியா ஒரு பவுண்டிரியும், பொலார்ட் இரு சிக்ஸர்களையும் விளாசினார்கள்.

பட்டையை கிளப்பிய பொலார்ட்

கடைசி 5 ஓவர்களுக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. முகமது ஷமி 16-வது ஓவரை வீசினார். 19 ரன்கள் சேர்த்த நிலையில், ஹர்திக் பாண்டியா முதல் பந்திலேயே மில்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த குர்னல்  பாண்டியாவும் நிலைக்கவில்லை, ஒரு ரன் சேர்த்த நிலையில் அதே ஓவரின் 4-வது பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இரு முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தது பொலார்டுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

அடுத்து அல்சாரி ஜோசப் வந்து, பொலார்டுடன் சேர்ந்தார். சாம் கரண் வீசிய 17-வது ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார் பொலார்ட். 18-வது ஓவரை ஷமி வீசி 4 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து நெருக்கடியே ஏற்படுத்தினார்.

கடைசி 2 ஓவர்களில் 32 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சாம் கரண் வீசினார். இந்த ஓவரின் 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என மொத்தம் 17 ரன்கள் விளாசினார் பொலார்ட்.

கடைசி ஓவர்

josdepjpgத்ரில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி : படம் உதவி ஐபிஎல்100 

கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. ராஜ்புத் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்து நோபாலாக மாற, அதை பொலார்ட் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அடுத்த பந்தில் ஒரு பவுண்டரி விளாச ஆட்டம் பெரும் பரபரப்பு நிலைக்கு வந்தது.

வெற்றிக்கு 4 ரன்கள் தேவை, கைவசம் 5 பந்துகள் இருந்தன. 2-வது பந்தில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து பொலார்ட் 83 ரன்களில் வெளியே ஆட்டம் உச்சகட்டத்தை அடைந்தது.

அடுத்து சாஹர் களமிறங்கி, ஜோசப்புடன் சேர்ந்தார். முதல் பந்தில் ஜோசப் ரன் ஏதும் எடுக்கவில்லை. 4-வது பந்தில் ஜோசப் ஒரு ரன்னும், 5-வது பந்தில் சாஹர் ஒரு ரன்னும் எடுத்தார். கடைசிப்பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. புல்டாசாக வீசப்பட்ட பந்தை ஜோசப் லெக் திசையில் அடித்து 2 ரன்கள் ஓட, வெற்றி மும்பை பக்கம் சென்றது.

20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்து மும்பை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ராகுல், கெயில் கூட்டணி

gaylejpgவலுவான அடித்தளம் அமைத்த ராகுல், கெயில் கூட்டணி : படம் உதவி ஐபிஎல்100 

முன்னதாக, டாஸ்வென்ற மும்பை  அணி பீல்டிங் தேர்வு செய்ய, கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. கெயில் , ராகுல் களமிறங்கி வலுவான அடித்தளத்தை முதல் விக்கெட்டுக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர்.

கெயில், ராகுல் தங்களின் வழக்கமான அதிரடிக்கு மாறி ரன்களைச் சேர்த்தனர். கெயில் 31 பந்துகளிலும், ராகுல் 41 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்த நிலையில், கெயில் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கிங்ஸ்லெவன்  பஞ்சாப் அணியின் ரன் வேகம் குறைந்தது. 13-வது ஓவரில் இருந்து 17-வது ஓவர்கள் வரை 30 ரன்கள் மட்டுமே பஞ்சாப் அணி சேர்த்தது.

முதல் சதம்

rahuljpgஐபிஎல் போட்டியில் முதல் சதம் அடித்த கே.எல்.ராகுல் : படம் உதவி ஐபிஎல்100 

மில்லர்(7), நாயர்(5), சாம் கரண்(8) ரன்களில் விரைவாக வெளியேறினார்கள். ஆனால், விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும் ராகுல் சளைக்காமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 63 பந்துகளில் ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தை ராகுல் நிறைவு செய்தார். இதில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். மன்தீப் சிங் 7 ரன்களிலும், ராகுல் 100 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசிய 57 ரன்கள் வாரிக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்