சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 18வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே ஸ்பின்னர்கள் அசத்தினர், குறிப்பாக ஹர்பஜன் சிங்.
முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி, டுபிளெசிஸ் அரைசதம் மற்றும் தோனி-ராயுடு அரைசதக் கூட்டணி மூலம் 160 ரன்களை எடுக்க, தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து படுதோல்வியடைந்தது.
சிஎஸ்கே ஸ்பின்னர்கள், ஹர்பஜன், இம்ரான் தாஹிர், ஜடேஜா இணைந்து 12 ஓவர்களில் 61 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற கிங்ஸ் லெவன் எழும்ப முடியவில்லை. அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லை ஹர்பஜன் அபாரமாக வீழ்த்த அடுத்து வந்த மயங்க் அகர்வால் அதே ஓவரில் எதற்காக மேலேறி வந்து அப்படியொரு ஷாட்டை முயன்றார் என்பது உஷ் கண்டுக்காதீங்க ரகம்! பந்து அவர் மட்டையில் சரியாக சிக்கவில்லை, ஹர்பஜன் பந்துகள் திரும்பிக் கொண்டிருக்கும் சமயத்தில் இப்படியொரு ஷாட்டை அவர் ஏன் அடித்தார் என்பது புரியாத புதிர். 7/2 என்ற நிலையில் சேர்ந்த ராகுல், சர்பராஸ் கான் கூட்டணி 93 பந்துகளில் 110 ரன்களைச் சேர்த்தனர்.
ஆனால் ரன் விகிதத்தை உயர்த்த வேண்டிய நேரத்தில் ஏன் உயர்த்தாமல் ஆடிக்கொண்டேயிருந்தார்கள் என்பதும் புரியாத புதிர். இதனால் ஒரு கட்டத்தில் ஓவருக்கு 16 ரன்கள் பிறகு 17 ரன்கள் என்று அதிகரித்து கடைசியில் 22 ரன்களில் தோல்வி தழுவினர் கிங்ஸ் லெவன் பஞ்சாப். டேவிட் மில்லர், மந்தீப் சிங், சாம் கரண் ஆகிய ஹிட்டர்களுக்குப் பதிலாக ஏன் சர்பராஸ் கான் முதலில் இறக்கப்பட வேண்டும்? தெரியவில்லை. கடந்த ஆட்டத்தில் சாம் கரண் தொடக்க வீர்ராகக் களமிறங்கி 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார், இந்த ஆட்டத்தில் இவருக்கு இந்த டவுனா?
பிட்ச் ஸ்பின் பிட்ச் என்று தெரிந்தும் அதாவது அஸ்வின், முருகன் அஸ்வின் இணைந்து 8 ஓவர் 46/3 என்று பிரமாதப்படுத்திய நிலையில் தோனி இறங்கி 7 பந்துகளில் 1 ரன்தான் எடுத்திருந்தார் ஆனால் அப்போது தோனிக்கு எதிராக வீச ஸ்பின்னர்களுக்கு ஓவர்கள் இல்லை. இப்படி ஏன் திட்டமிடப்பட்டது புரியவில்லை. தோனி சமீபகாலங்களில் ஸ்பின்னர்களிடம் ஆட்டமிழப்பதும் நமக்குத் தெரிந்ததே. சென்னை ஸ்கோரைப் பார்த்தால் இவர்களது 8 ஓவர் 46 ரன்கள் 3 விக்கெட்டுக்குகளுடன் பார்க்கும் போது மீதி 12 ஓவர்களில் 114 ரன்கள் விக்கெட் இல்லை என்று ஆகிறது.
சர்பராஸ் கானுக்கு இம்ரான் தாஹிர் பந்தில் எல்.பி.ஆகி அது பிளம்ப் என்று தெரிந்தோ தெரியாமலோ தோனி ரிவியூ கேட்காமல் விடுகிறார், ஒருவேளை கேட்டு அவுட் ஆகியிருந்தால் டேவிட் மில்லர் கிரீசுக்கு வந்து ஆட்டம் திசை மாறியிருந்தால்... ஆகவே தோனி ரிவியூ கேட்காமல் விட்டது தற்போது ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்று விளக்கமளிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் மொத்தம் 120 பந்துகளில் 39 டாட்பால்களை தாராளமாக விட்டது. இதில் 5 விக்கெட் விழுந்த 5 டாட்பால்களை கழித்து விட்டால் மொத்தம் 34 டாட்பால்கள், தோற்றது 22 ரன்கள் வித்தியாசத்தில். ஸ்பின்னர்கள் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஜடேஜா ஓவர்களில் ரன் இல்லாத டாட் பால்கள் 24. இதில் ஹர்பஜன் எடுத்த 2 விக்கெட் டாட்பால்களை கழித்து விட்டால் சரியாக 22 டாட்பால்கள், தோற்ற இடைவெளி சரியாக 22 ரன்கள். ஆகவே இந்தக் கணக்கீடுகளைத் தாண்டிய வேறு கணக்கீடுகள் உள்ளது போலும்... அது நம் சக்திக்கு அப்பாற்பட்ட பிரபஞ்ச கணக்கீடாகக் கூட இருக்கலாம் (Cosmic Calculation!!)
புரியாத புதிரான அந்த 5 ஓவர்கள்:
11 ஒவர்கள் முடிவில் கிங்ஸ் லெவன் 75/2 என்று நல்ல நிலையில் இருந்தது, 12வது ஓவரை குக்கலீன் வீசினார். சர்பராஸ் கான் ஸ்கூப் ஷாட்டில் பவுண்டரி பிறகு மிக அருமையாக லாங் ஆஃபில் ஒரு அபார சிக்ஸ். இந்த ஓவரில் 16 ரன்கள் வர 12 ஒவர்கள் முடிவில் 91/2. மீதமுள்ள 8 ஓவர்களில் 70 ரன்கள் தேவை, கையில் 8 விக்கெட்டுகள் இருக்கின்றன.
இந்நிலையில் அடிக்கத் தொடங்கியிருக்க வேண்டும் ராகுலும், சர்பராஸ் கானும். ஆனால் நடந்தது என்னவெனில் ஜடேஜா, ஹர்பஜன், இம்ரான் தாஹிர் வீசிய அடுத்த 5 ஓவர்களில் பவுண்டரியே வரவில்லை. ராகுல் 47 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 55 ரன்களில் 18வது ஓவரில் குக்கெலீன் ஓவரில் அவுட் ஆகும் வரை, அதாவது 13வது ஓவரில் தொடங்கிய பவுண்டரி வறட்சி 18வது ஓவர் பாதி வரை நீடித்தது எப்படி என்று புரியவில்லை. 17.5 வது ஓவரில் மில்லர் வந்து பவுண்டரி அடித்து பவுண்டரி வறட்சியை முடித்து வைத்தார், ஆனால் அதற்குள் ஆட்டம் கைவிட்டுப் போய்விட்டது.
12வது ஓவர் 16 ரன்களுக்குப் பிறகு திடீரென பவுண்டரி அடிக்க முடியாமல் போனது எப்படி என்பது புரிகிறது ஆனாலும் புரியவில்லை. 12வது ஓவருக்குப்பிறகு வந்த ஓவர்களில் கிங்ஸ் லெவன் எடுத்த ரன்கள் 5, 4, 5, 5, 5, எட்டு ஓவர்களில் 70 ரன்கள் என்பது இந்த 5 ஒவர்களின் பவுண்டரி வறட்சியினால் 17 ஓவர்கள் முடிவில் 115/2 என்று ஆகி 3 ஓவர்களில் 46 ரன்கள் தேவை என்று ஆனது.
சர்பராஸ் கான் 59 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 67 எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். முன்னதாக சாஹர் ஓவரின் முதல் பந்து கையிலிருந்து நழுவி ஹை புல்டாஸ் (நோ-பால்) ஆக சர்பராஸ் அதனை பவுண்டரி அடித்தார். அடுத்ததும் நோ-பால் கையை விட்டு நழுவியது 2 ரன்கள். தோனி நேராக சாஹரிடம் வந்து கொஞ்சம் கோபமாகவே ஏதோ பேசினார். அதன் பிறகு அற்புதமாக வீசினார் சாஹர், ரன்களும் கிங்ஸ் லெவன் கையை விட்டுப் போனது கடைசியில் சாஹர் மில்லரை பவுல்டு ஆக்கினார். சரியாக 22 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் தோல்வி. ஐபிஎல் அறிமுக பவுலர் குக்கெலீன் முதல் 2 ஓவர்களில் 27 ரன்கள் கடைசியில் 4 ஓவர் 37 ரன்கள்.
கிங்ஸ் லெவனைக் காலி செய்தது அந்த புரியாத புதிரான பவுண்டரி அடிக்காத அந்த 5 ஓவர்கள்... இன்னமும் கூட கிங்ஸ் லெவன் எப்படித் தோற்க முடியாத போட்டியை இப்படித் தோற்றுள்ளது என்பது புரியாத புதிராகவே நீடிக்கும்.
ஹர்பஜன் சிங் ஆட்ட நாயகன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago