மேட்ச்னா இப்படி இருக்கணும், கடைசி நேரத்தில் ஒவ்வொரு பந்து வீசப்படும் போதும் ரசிகர்களை இருக்கை நுனிவரை அமரவைத்து, நகரவிடாமல் கட்டிப்போட்டது கொல்கத்தா, டெல்லி இடையிலான ஆட்டம்.
ரபாடாவின் உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சு, பேட்டிங்கில் பட்டைய கிளப்பிய பிரித்வி ஷா ஆகியோரால் 12-வது ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லியில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
பிரித்வி ஷாவின் அட்டகாசமான பேட்டிங், ஷாட்கள், உடல்அசைவுகள் ஏறக்குறைய சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்தியது. அபாரமாக ஆடி டெல்லி அணியை வெற்றிக்கு அருகே அழைத்துவந்தும், கடைசிநேரத்தில் அவசரப்பட்டு பிரித்வி ஷா அடித்த ஷாட்டால் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். 55 பந்துகளில் 99 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த பிரித்வி ஷா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
டெல்லி அணியின் வெற்றிக்கு வாய்ப்புகள் இருந்த போதும் அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாததால், போட்டி டையில் முடிந்தது.
வெற்றியாளரை அறிய நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் உலகத் தரம்வாய்ந்த ரபாடாவின் பந்துவீச்சு டெல்லிக்கு வெற்றியை எளிதாக்கியது. ஒரு வேகப்பந்துவீச்சாளர் எப்படி யார்கர் வீச ேவண்டும் என்பதை ரபாடா நேற்று சூப்பர் ஓவரில் பாடமாகவே எடுத்துவிட்டார்.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சு நேற்று எதிர்பார்த்த வகையில் இல்லாத நிலையிலும் கூட அணியை கேப்டன் தினேஷ் கார்த்திக் சிறப்பாக வழிநடத்தினார். ஒருகட்டத்தில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிைலயில் இருந்த அணியை ரஸலுடன் இணைந்து மீட்டு கவுரமான ஸ்கோருக்க கொண்டு வந்தார்.
கடைசி நேரத்தில் பந்துவீச்சாளர்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை கார்த்திக் திட்டமிட்டு செய்தார். குல்தீப் யாதவுக்கு கடைசி ஓவரை கொடுத்து, தனது கேப்டன்ஷிப் அனுபவத்தை வெளிப்படுத்தினார். அதற்கு நல்லபலனும் கிடைத்தது. ஆனால், துரத்திய துரதிர்ஷ்டம் சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணியை பரிதாபமாக தோல்வி அடைய வைத்தது. இந்த சீசனில் கொல்லக்தா நைட் ரைடர்ஸ் அணி அடைந்த முதல் தோல்வியாகும். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இது 2-வது வெற்றியாகும்
போட்டி டை
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் ேசர்த்ததால், ஆட்டம் டையில் முடிந்தது.
சூப்பர் ஓவர்
இதையடுத்து, சூப்பர் ஓவரில் ஒரு ஓவர் வீசப்பட்டது. இதில் டெல்லி ேகபிடல்ஸ் அணி ஒரு விக்கெட்டை இழந்து 10 ரன்கள் சேர்த்தது. 11 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற பரபரப்புடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஒரு விக்கெட்டை இழந்து 7 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.
நாயக் வேஸ்ட்
டாஸ்வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பீல்டிங்கத் தேர்வு செய்தது. சுனில் நரேன் காயத்தால் சேர்க்கப்படாததால், அவருக்கு பதிலாக நாயக், கிறிஸ் லின்னுடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடங்கினார்.
ரபாடாவின் முதல் ஓவரிலையே லின் இரு பவுண்டரிகளை விளாசி அதிரடியாகத் தொடங்கினார். இளம் லெக்ஸ்பின்னர் லாமிசானே ஓவரை சமாளிக்க முடியாமல் நாயக் திணறினார். லாமிசானே வீசிய 4-வது ஓவரில் நாயக் 7 ரன்னில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.
விக்கெட் சரிவு
உத்தப்பா(11), லின்(20), கில்(4) என விரைவாக விக்கெட்டுகளை நேற்று பறிகொடுத்தனர். இதனால், 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது. 6-வது விக்கெட்டுக்கு ரஸல், தினேஷ் கார்த்திக் இணைந்து அணியை சரிவில் இருந்து தங்களின் அதிரடியால மீட்டனர். பவர்ப்ளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்களை மட்டுமே கொல்கத்தா சேர்க்க முடிந்தது.
லாமிசானே முதல் 3 ஓவர்களை நன்றாக வீசிய நிலையில், 12-வது ஓவரை வீச வந்தபோது கார்த்திக்கும், ரஸலும் நொறுக்கிவிட்டனர். ரபாடா வீசிய 17-வது ஓவரில் பவுண்டரி அடித்து 23 பந்துகளில் அரைசதம் அடித்தார் ரஸல்.
மோரிஸ் வீசிய 18-வது ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்த ரஸல், 62ரன்கள்(28பந்துகள், 4பவுண்டரி,6சிக்ஸர்) சேர்த்த நிலையில், பைன்-லெக் திசையில் திவேசியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தனர். பியூஸ் சாவ்லா களமிறங்கினார்.
19-வது ஓவரை மிஸ்ரா வீசினார். முதல் பந்தில் சாவ்லா ஒரு சிக்ஸரும், தினேஷ் கார்த்திக் ஒரு சிஸ்கரும் அடித்தனர். கார்த்திக் 35 பந்துகளில் அரைசதம் அடித்து 50 ரன்களில் ரிஷப்பந்திடம் கேட்ச்கொடுத்து ஆட்டமிழந்தார். ரபாடா வீசிய கடைசி ஓவரின் கடைசிப்பந்தில் ஒரு ரன் சேர்க்க ஆசைப்பட்டு 12 ரன்கள் சேர்த்தநிலையில் சாவ்லா ரன்அவுட் ஆகினார். குல்தீப் யாதவ் 10 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணித் தரப்பில் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
186 ரன்கள் இலக்கு
186 ரன்களை சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. தவண், பிரித்வி ஷா ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆடினர்.
பியூஷ்சாவ்லா வீசிய 4-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் விளாசிய தவண் 3-வது பந்தில் மிட் ஆப் திசையில் தூக்கி அடித்தபோது ரஸிலிடம் கேட்ச் கொடுத்து 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கி, பிரித்வி ஷாவுடன் இணைந்தார்.. ரஸல் வீசிய 6-வது ஓவரில் பிரித்வி ஷா ஒரு பவுண்டரி, சிக்ஸர் , குல்தீப் வீசிய 8-வது ஓவரில் அய்யர் ஒருபவுண்டரியும், பிரித்வி ஒரு சிக்ஸரும் விளாசி ரன்ரேட் குறையவிடாமல் கொண்டு சென்றனர்.
89 ரன்கள் கூட்டணி
குல்தீப் வீசிய 11-வது ஓவரில் அய்யர் சிக்ஸர் அடிக்க, அதைத் தொடர்ந்து பிரித்வி ஷா சிக்ஸர், பவுண்டரி அடித்து 30 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ரஸல் வீசிய 12-வது ஓவரின் கடைசிப்பந்தில் கில்லிடம் கேட்ச் கொடுத்து 43 ரன்னில் அய்யர் வெளியேறினார். இதில் 2 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்துவந்த ரிஷப் பந்த் நிதானமாக பேட் செய்ய, பிரித்வி ஷா கிடைக்கும் பந்துகளில் சிக்ஸரையும், பவுண்டிகளையும் விளாசினார். பெர்குஷன் வீசிய 15-வது ஓவரில் 2 பவுண்டரி, பிரசித் கிருஷ்ணா வீசிய 16-வது ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்து பிரித்விஷா பட்டையக் கிளப்பினார்.
2 ஓவர்கள் 15ரன்கள்
கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இப்போது ஆட்டம் டெல்லி அணி பக்கமே செல்ல அதிகமாக வாய்ப்பிருந்தது. குல்தீப் வீசிய 18-வது ஓவரை வீசினார். சிக்ஸர் அடிக்க முயற்சித்து பந்த் 11ரன்களில் சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே குல்தீ்ப் விட்டுக்கொடுத்தார். அடுத்து இங்ராம் களமிறங்கினார்.
சதத்தை தவறவிட்ட பிரித்வி
19-வது ஓவரை பெர்குஷன் வீசினார். பிரித்வி ஷா 99 ரன்களில் களத்தில் இருந்தார். 4-வது பந்தை தூக்கி அடிக்க பிரித்வி ஷா முயற்சித்தார். ஆனால், பேட்டின் நுனியில் பட்டு தேர்ட் மேன் திசையில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்சாக மாறியது. 55 பந்துகளில் 99 ரன்கள் சேர்த்து பிரித்வி ஷா(12பவுண்டரி, 3 சிக்ஸர்) ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டு வெளியேறினார்.
6-க்கு 6
அடுத்து விஹாரி களமிறங்கினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி அணிநிச்சயம் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. கடைசி ஓவரை குல்தீப் வீசினார்.
தனது அனுபவமான பந்துவீச்சால் குல்தீப் விஹாரியையும், இங்ராமையும் திணறச் செய்தார். முதல் பந்தில் வாஹாரி ஒரு ரன்னும், 2-வது பந்தில் இங்ராம் 2 ரன்னும் சேர்த்தனர். அடுத்த ஒரு பந்தில் இங்ராம் ரன் சேர்க்கவில்லை, 4-வது பந்தில் இங்ராம் ஒரு ரன் சேர்த்தார். 5-வது பந்தை விஹாரி எதிர்கொண்டா். பந்தை தூக்கி அடிக்க அது மிட்விக்கெட்டில் சாவ்லாவிடம் கேட்சாக மாறியது. விஹாரி 2 ரன்னில் வெளிேயறினார்.
போட்டி “டை”
கடைசிப்பந்தில் 2 ரன்கள் டெல்லி அணியி்ன் வெற்றிக்கு தேவைப்பட்டது. இங்ராம் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடி 2-வது ரன்னுக்கு முயற்சித்தபோது, ரன்அவுட் செய்யப்பட்டார். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185ரன்கள் டெல்லி அணி சேர்த்தால் ஆட்டம் டையில் முடிந்து சூப்பர் ஓவருக்குச் சென்றது.
சூப்பர் ஓவர்
சூப்பர் ஓவரில் முதலில் டெல்லி அணி பேட் செயத்து. ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர் பேட் செய்தனர். கொல்கத்தா தரப்பில் பிரசித் கிருஷ்ணா பந்துவீசினார். முதல் பந்தில் ரிஷப் பந்த் ஒரு ரன் சேர்த்தார். 2-வது பந்தில் அய்யர் பவுண்டரி அடித்தார். 3-வது பந்தை தூக்கி அடித்தபோது சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து அய்யர் ஆட்டமிழந்தார். அடுத்து பிரித்வி ஷா களமிறங்கினார். ரிஷப்பந்த் அடுத்த 3 பந்துகளில் 5 ரன்கள் சேர்த்தார். இதனால், டெல்லி அணி சூப்பர் ஓவரில் 10 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்தது.
கொலகத்தா அணி தரப்பில் ரஸல், கார்த்திக் களமிறங்கினர், ரபாடா பந்துவீசினார். முதல் பந்தில் ரஸல் பவுண்டரி அடித்தார். 2-வது பந்தில் ரன் சேர்க்கப்படவில்லை 3-வது பந்து யார்கராக உள்ளேவர ரஸல் க்ளீன்போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த உத்தப்பா ஒருரன்எடுத்தார். இரு பந்துகளையும் கட்டுக்கோப்பாக ரபாடா வீசியதால், கார்த்திக்கால் ரன் அடிக்கமுடியவில்லை. கொல்கத்தா அணி 7ரன்கள் மட்டுமே சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago