ஆசிய விளையாட்டு: இந்தியக் கால்பந்து அணி தோற்று வெளியேறியது

By செய்திப்பிரிவு

இன்சியானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் கால்பந்து அணி பலத்த ஏமாற்றமளித்து வெளியேறியது.

இந்திய கால்பந்து வீரர்கள் ஓரளவுக்கு நல்ல முறையில் ஆடினாலும் வலுவான ஜோர்டான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெல்வதைத் தடுக்க முடியவில்லை.

இந்தத் தோல்வியின் மூலம் குரூப் லீக் கட்டத்திலேயே இந்திய கால்பந்து அணி வெளியேறியது. இரண்டு ஆட்டங்களில் 7 கோல்களை வாங்கியது இந்தியா.

இந்தியக் கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள முடிவெடுக்கப்பட்ட போதே சர்ச்சைகள் கிளம்பின. விளையாட்டுத் துறை அமைச்சகம் அரசு செலவில் கால்பந்து அணியை அனுப்ப முடியாது என்று தொடக்கத்தில் தெரிவித்தது. இந்த நிலையில் இந்திய கால்பந்து அணி தோற்று லீக் மட்டத்திலேயே வெளியேறியுள்ளது.

ஜோர்டான் அணியில் லைத் அல்பாஷ்டாவி 17வது நிமிடத்தில் முதல் கோலை அடிக்க மொகமது யூசுப் 66வது நிமிடத்தில் 2வது கோலை அடித்தார்.

இந்திய அணியின் தடுப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. டெம்போவின் நாராயண் தாஸ் மற்றும் மோகன் பகன் அணியின் பிரீதம் கோடல் ஆகியோர் ஜோர்டான் அணியின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திய தருணங்கள் அதிகம்.

இந்திய அணியில் ஒரேயொரு ஸ்ட்ரைக்கர் (ராபின் சிங்) மட்டுமே விளையாடினார். கேப்டன் சேட்ரி வலது மூலைப்பகுதியில் விளையாடினார். ஆனால் முக்கால்வாசி நேரம் தடுப்பாட்டத்திற்கு உதவுவதாகவே அவர் பணி இருந்தது.

அப்படியும் ராபின் சிங் இருமுறை ஜோர்டான் கோல் நோக்கி தனிநபராக கோல் முயற்சி செய்தார். ஆனால் பயனில்லாமல் போனது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE