தமிழக கால்பந்துக்கு பெருமை சேர்த்த கிராமத்து ஹீரோக்கள்

By பெ.மாரிமுத்து

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி  அணி இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்று அனைவரையும் வியக்கவைத்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய கால்பந்து வரைபடைத்தில் தமிழகத்துக்கு தனி இடம் கிடைத்துள்ளது. பெரிய அளவிலான தொடரில் முதன்முறையாக பட்டம் வென்று சாதித்துள்ளதன் மூலம் தமிழக கிராமங்களைச் சேர்ந்த வீரர்களின் திறமைக்கு சரியான வெளிச்சமும் கிடைத்துள்ளது.

 சென்னை சிட்டி அணியின் வெற்றி பயணத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சூசை ராஜ், ரெஜின், பிரவிட்டோ ராஜு, திண்டுக்கல்லைச் சேர்ந்த அலெக்

சாண்டர் ரொமாரியோ, சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம், நெய்வேலியைச் சேர்ந்த எட்வின் சிட்னி வான்ஸ்பால் உள்ளிட்ட வீரர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது.  ஐ லீக் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு அடுத்து நடைபெற உள்ள சூப்பர் கோப்பை தொடருக்கான தீவிர பயிற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் உடன் பிறந்த சகோதரர்களான ரெஜின், சூசை ராஜ் ஆகியோர் மீன்பிடி தொழிலை பிரதானமாகக் கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள். 15 வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் தனது தந்தையுடன் கடலுக்குள் தொழிலுக்காக படகில் சென்றுள்ளனர். கடல் சீதோஷண நிலைஒத்துக்கொள்ளாமல் முதல் நாளே இருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

அன்று கடலுக்குள் செல்வதை மறந்தவர்கள்தான் சூசை ராஜும், ரெஜினும். அதன் பின்னர்படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் கால்பந்து விளையாட்டால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள். தங்களது திறனை வளர்த்துக் கொண்ட இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு ஐ லீக் சீசனில் சென்னை சிட்டி அணிக்காக விளையாடினார்கள்.

இதில் சூசை ராஜ் அபார திறனை வெளிப்படுத்த இந்த சீசனில் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த அணிக்காக விளையாடினார். அதேவேளையில் நடுகள வீரரான ரெஜின், ஐ லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கினார். இதன் மூலம் இருவரும் தமிழக கால்பந்தில் ஹீரோக்களாகவே உருவெடுத்துள்ளனர்.

30 வயதான ரெஜின் கூறும்போது, “ மீனவரின் மகனாக இருந்து, கால்பந்தில் தற்போது ஐ லீக் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு கடினமாக உழைத்துள்ளேன். எனது மாமா ஜெகன் தான் எங்களது கிராமத்தில் இருந்து முதன்முறையாக தொழில்முறை ரீதியிலான கால்பந்தில் ஐசிஎப் அணிக்காக விளையாடினார். அவரது வழிகாட்டுதலில் நாங்கள் தற்போதுவிளையாடி வருகிறோம். இம்முறை நாங்கள் சாம்பியன் பட்டம் வென்றதில் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் பங்களிப்பும் உள்ளது. பயிற்சியாளர் அக்பர் நவாஸ், வெளிநாட்டு வீரர்கள் அதிகளவில் எங்களை ஊக்கப்படுத்தினார்கள்.

எல்லா வீரர்களையும் ஒருங்கிணைத்து அவர்களின் திறனை வெளிக்கொண்டு வந்தது சிறப்பான விஷயம். சென்னை சிட்டி அணி உள்ளூர் வீரர்களுக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம். இந்த அணியால் தற்போது தமிழக வீரர்கள் நாடு முழுவதும் அறியப்பட்டுள்ளனர். மற்ற அணிகளிடத்தில் தமிழக அணி பற்றி நன்மதிப்பு கிடையாது. ஆனால் ஐ லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றதும் அனைத்தும் மாறியுள்ளது. நமது திறமையையும் அனைவரும் திரும்பி பார்க்கத் தொடங்கியுள்ளனர்” என்றார்.

ரெஜினின் பக்கத்து கிராமமான மார்த்தாண்டன்துறையைச் சேர்ந்த பிரவிட்டோ ராஜு கூறுகையில், “தற்போது நாங்கள் எங்களது கிராமத்தில் ஹூரோக்களாக பார்க்கப்படுகிறோம். முன்பெல்லாம் எங்களது குடும்பம் மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டிருந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. தனிப்பட்ட முறையில் ஐ லீக்கில் இந்த சீசனில் பெரிய அளவில் என்னிடம் இருந்து திறன் வெளிப்படவில்லை. ஆனால் வரும் சீசன்களில் இது மேம்படும்” என்றார். இந்த சீசனில் கோகுலம் கேரளா அணிக்கு எதிரான ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் பிரவிட்டோ ராஜு கோல் அடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 350 கி.மீட்டர் தூரத்தில் உள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த விவசாயி மகனான அலெக்சாண்டர் ரொமாரியோவுக்கும் ஐ லீக் கால்பந்து தொடர் நல்ல முகவரியை கொடுத்துள்ளது. பிரேசில் அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக்கொடுத்த ரோமரியோவின் பெயரை இவருக்கு சூட்டியதே அவரது மாமா திரவியம்தான். இந்த சீசனில் சில கோல்கள் அடித்த அலெக்சாண்டர் ரொமாரியோ, 3 கோல்கள் அடிக்க உதவியும் செய்திருந்தார். தனது கால்பந்து பயணம் குறித்து அவர் கூறுகையில், “ஐ லீக் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக 3 மாதங்களுக்கு முன்பே நாங்கள் தீவிர பயிற்சி எடுத்தோம். இந்த 3 மாத காலம்தான் எங்களை ஒரு குடும்பமாக இணைத்தது.

முதல் 4 இடங்களுக்குள் வரவேண்டும் என்ற இலக்கையே முதலில் கொண்டிருந்தோம். ஆனால் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற, பெற கோப்பையை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் நகர்ந்தோம். எங்கள் அணியில் பெரிய அளவிலான அனுபவ வீரர்கள் என்று யாரும் இல்லாத நிலையில் பயிற்சியாளர், வெளிநாட்டு வீரர்கள் எந்தவித ஈகோவும் இல்லாமல் பல்வேறு ஆட்ட நுணுக்கங்களை எங்களுக்கு கற்றுக்கொடுத்தனர்” என்றார்.

சேலம் மாவட்டம் ஊத்தங்கரை என்றால் கடந்த சில ஆண்டுகளில் நம் நினைவுக்கு வருவது இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜன்தான். டிஎன்பிஎல் தொடர் முழுவதும் பிரபலமான அவர்,  ஐபிஎல் தொடரில் தற்போது ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். நடராஜனின் கிராமத்தில் கால்பந்து வீரராக உருவெடுத்துள்ளவர்தான் சென்னை சிட்டி அணியின் நடுகள வீரரான ஸ்ரீராம். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஸ்ரீராமின் தந்தை வெல்டராக பணியாற்றி வருகிறார். தனது அசாத்தியமான திறனால் சென்னை சிட்டி அணியின் ஒரு அங்கமாக மாறியுள்ள ஸ்ரீராம் வரும் சீசன்களிலும் அசத்த காத்திருக்கிறார்.

இந்த 5 வீரர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்26 வயதான எட்வின் சிட்னி வான்ஸ்பால். நெய்வேலியைச் சேர்ந்தவர். இவரது தந்தை என்எல்சி ஹாக்கி வீரர். அதனால் தனது மகனையும் விளையாட்டு வீரராக உருவாக்க வேண்டும் என நினைத்து பல்வேறு விளையாட்டுகளில் பங்குபெறச் செய்தார். ஆனால் வான்ஸ்பாலை, கால்பந்து ஆக்கிரமித்துக் கொண்டது. பயிற்சி பெறுவதற்கான அனைத்து வசதிகளும் நிதி பிரச்சினையின்றி கிடைக்க கைதேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரராக தன்னை மேம்படுத்திக் கொண்டார் வான்ஸ்பால். அவர் கூறுகையில், என்எல்சியில் விளையாடுவதற்கு அதிக வீரர்கள் இருந்தனர்.

அதனால் விரைவாக ஆட்டத்தை உள்வாங்கி கற்றுக்கொண்டேன். இரு ஆண்டுகளாக சென்னை சிட்டி அணியில் இருப்பதால் எங்களது பலம், பலவீனத்தை நான் நன்கு அறிவேன். தென்பகுதியைச் சேர்ந்த அணிகள் என்றாலே பிற பகுதிகளில் நன்மதிப்பு இருக்காது. அனுபவம் இல்லாத வீரர்கள். இவர்களை வைத்துக் கொண்டு எதுவும் சாதிக்க முடியாது என்ற கடுமையான விமர்சனங்கள் கடந்த சீசன்களில் எழுந்தன. ஆனால் அவை அனைத்தும் இந்த சீசனில் தலைகீழாக மாற்றியுள்ளோம். தமிழக வீரர்களின் திறனை உலகறியச் செய்துள்ளோம். விமர்சனங்களை எதிர்த்து போராடும் வகையில் பயிற்சியாளர் அக்பர் நவாஸ் எங்களை ஊக்கப்படுத்தினார். அதுதான் சாதிக்க உதவியது” என்றார்.

கிராமப்புறங்களில் இருந்து வந்த போதிலும் இந்த வீரர்களிடத்தில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையும், அதற்கான முனைப்பும் இருந்ததாலேயே வெற்றியை வசப்படுத்த முடிந்தது. இவர்களை பட்டை தீட்டியதில் பயிற்சியாளர் அக்பர் நவாஸின் பங்களிப்பும் அளப்பரியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்