வார்னரின் காட்டடி ஆட்டம், விஜய் சங்கரின் பொறுப்பான பேட்டிங் ஆகியவற்றால், கொல்கத்தாவில் இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் 2-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
ஒரு ஆண்டுக்குப் பின் ஐபிஎல் போட்டிக்குத் திரும்பிய ஆஸ்திரேலிய இடதுகை பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், உலகக்கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் இந்த போட்டி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னுடைய பேட்டிங் ஃபார்ம் எந்தவிதத்திலும் சோடைபோகவில்லை என்பதை நிரூபதித்துவிட்டார்.
ஒவ்வொரு ஓவரிலும் சொல்லி வைத்ததைப்போல், பவுண்டரி, சிக்ஸர் என விளாசித் தள்ளினார். கடந்த ஓராண்டுக்கு முன் வார்னர் காட்டடி ஆட்டம் எப்படி இருந்ததோ அதே ஆட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் வரவுள்ள ஆட்டங்களில் வார்னருக்கு பேட்டிங் வெறி ஏறிவிட்டால், உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அசுரபலம் கிடைக்கும்.
சன் ரைசர்ஸ் அணிக்கு மிகச்சரியான தொடக்கத்தை வார்னர் கொடுத்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. 31 பந்துகளில் அரை சதம் அடித்து, ஐபிஎல் போட்டியில் 37-வது அரை சதத்தை நிறைவு செய்துள்ளார். ஒரு ஆண்டுக்கு பின்வந்து முதல் ஆட்டத்திலேயே அரை சதம் அடித்துள்ளார் வார்னர்.
உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம் பெறும் நோக்கில் இன்றைய ஆட்டத்தில் விஜய் சங்கர் மிகவும் பொறுமையாக விளையாடினார். பந்துகளைத் தேர்வு செய்து, மோசமான பந்துகளை மட்டுமே சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார். இந்த ஐபிஎல் தொடர் விஜய் சங்கருக்கு நிச்சயம் தேர்வுக்களமாகவே இருக்கப் போகிறது.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. பிரசித் கிருஷ்ணா, பெர்குஷன் பந்துவீச்சு மட்டுமே ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக இருந்தது. ரஸல் உடம்பை குறைத்துவிட்டு பந்துவீச வரலாம், அனேகமாக ரஸலுக்கு இதுதான் கடைசி சீசனாகக்கூட இருக்கலாம். வேகப்பந்துவீச்சு என்று கூறிக்கொண்டு 125 கி.மீ வேகத்துக்கு மேல் வீச முடியவில்லை, துல்லியமும் இல்லை. கேகேஆர் அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது.
அதேசமயம், தொடக்கத்தில் கேகேஆர் அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருந்தது, குறிப்பாக வார்னருக்கு உத்தப்பா பிடித்த சேட்ச் அருமையானது.
டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். வார்னர், பேர்ஸ்டோ ஆட்டத்தைத் தொடங்கினார்கள். பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் ஓவரில் பொறுமை காத்த வார்னர், பியூஷ் சாவ்லா வீசிய 2-வது ஓவரே நொறுக்கி எடுத்தார்.
சாவ்லா வீசிய 2-வது ஓவரில் இரு பவுண்டரிகளையும், பிரசித் கிருஷ்ணா வீசிய 3-வது ஓவரில் ஒரு பவுண்டரியையும் வார்னர் விளாசினார்.
4-வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசியபோது, பேர்ஸ்டோ ஸ்டிரைட் டிரைவில் ஒரு சிக்ஸர் அடித்து ரன் வேட்டையைத் தொடங்கினார். இதனால் ஓவர்கள் மாற்றப்பட்டன. 5.3 ஓவர்களில் சன் ரைசர்ஸ் அணி 50 ரன்களை எட்டியது.
பெர்குஷன், நரேன் பந்துவீச அழைக்கப்பட்டனர். பெர்குஷன் வீசிய ஓவரில் வார்னர் ஒருபவுண்டரியும், சுனில் நரேன் வீசிய 6-வது ஓவரில் இரு பவுண்டரிகளையும் வெளுத்தார் வார்னர். ஓவருக்கு ஒருபவுண்டரி, அல்லது சிக்ஸர் வீதம் வார்னர் அடித்ததால், ரன்ரேட் சீராக உயர்ந்தது. முதல் 6 ஓவர்கள் பவர்ப்ளேயில் சன்ரைசர்ஸ் அணி 54 ரன்கள் குவித்தது.
7-வது ஓவரை வீச வந்த குல்தீப்பையும் வார்னர் விட்டுவைக்கவில்லை. குல்தீப் ஓவரிலும் ஒரு பவுண்டரியை வெளியே தள்ளினார் வார்னர்.
ஆன்ட்ரூ ரஸல் வீசிய 9-வது ஓவரை வார்னர் பொளந்து கட்டினார். ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 31 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்தார் வார்னர். வார்னருக்கு ஐபிஎல் போட்டியில் 37-வது அரை சதமாக அமைந்தது.
அருமையான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார் வார்னர். ஒரு அண்டு தடைக்குப் பின் ஐபிஎல் தொடருக்குள் வந்தவுடன் முதல் அரை சதத்தை அடித்து அசத்தியுள்ளார் வார்னர்.
குல்தீப் வீசிய 10-வது ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸர் விளாசினார் வார்னர். ஒருபுறம் வார்னர் அடித்து பட்டையைக் கிளப்ப, மறுபுறம் பேர்ஸ்டோ நிதானமாக பேட் செய்தார். பெர்குஷன் ஓவரில் பேர்ஸ்டோவுக்கு கேட்ச் வாய்ப்பு கிடைத்தும் அதை தவறவிட்டனர்.
13-வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசினார். அந்த ஓவரில் பேர்ஸ்டோ சிக்கிக்கொண்டார். சாவ்லா வீசிய 5-வது பந்தீல் கூக்ளியாக வந்த பந்தை கவனிக்காததால், க்ளீன் போல்டாகி பேர்ட்ஸ்டோ 39 ரன்களில் வெளியேறினார். இதில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரி அடங்கும். முதல் விக்கெட்டுக்கு வார்னர், பேர்ஸ்டோ கூட்டணி 118 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து விஜய் சங்கர் களமிறங்கினார். வந்த வேகத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் விஜய் சங்கர். சுனில் நரேன் வீசிய 14-வது ஓவரில் சிக்ஸர் அடித்து விஜய் சங்கர் விளாசினார்.
15-வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா மிகுந்த கட்டுக்கோப்பாக வீசியதால் அந்த ஓவரில் ரன் சேர்க்க் முடியவில்லை.
16-வது ஓவரை ரஸல் வீசினார். ஏற்கெனவே ரஸல் ஓவரை நொறுக்கி எடுத்திருந்த வார்னர் இந்த ஓவரிலும் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். ஆனால், கடைசிப் பந்தில் கவர் டிரைவில் நின்றிருந்த உத்தப்பா, அருமையான கேட்ச் பிடித்து வார்னரை வெளியேற்றினார். 53 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து வார்னர் பெவிலியினர் திரும்பினார். இதில் 3 சிக்ஸர், 6 பவுண்டரி அடங்கும்.
அடுத்து வந்த யூசுப் பதான், சங்கருடன் சேர்ந்தார். 17-வது ஓவரை வீசிய பெர்குஷன், பதானுக்கும், விஜய் சங்கருக்கும் நிற்க வைத்துப் படம் காட்டினார். அந்த ஓவரில் அதிகமான ரன்களை அடிக்க முடியவில்லை.
18-வது ஓவரை ஆன்ட்ரூ ரஸல் வீசினார். தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய யூசுப் பதான், ஒரு ரன் சேர்த்த நிலையில், க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
அடுத்ததாக மணீஷ் பாண்டே களமிறங்கி விஜய் சங்கருடன் சேர்ந்தார். வந்தவுடன், ரஸல் பந்தில் மிட்-ஆப் திசையில் அருமையான பவுண்டரி விளாசினார். 19-வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா ஓவரில் விஜய் சங்கர் ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார்.
20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. விஜய் சங்கர் 24 பந்துகளில் 40 ரன்களுடனும், பாண்டே 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago