கடைசி 3 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய ரஸலின் காட்டடி; தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி: சன் ரைசர்ஸ் அணியைப் புரட்டி எடுத்த கேகஆர் அபாரம்

By க.போத்திராஜ்

அடின்னா இது அடி, ஆட்டம்னா இது ஆட்டம்... கடைசி 3 ஓவர்களில் ரசிகர்கள், பார்வையாளர்கள், வீரர்கள் அனைவரின் கணிப்பும் மாறிப்போனது. சபாஷ் ஆன்ட்ரூ ரஸல், கில்.

ஆட்டம் கொல்கத்தாவின் கையை விட்டுச் சென்றுவிடுமோ என்று அனைவரும் நம்பி இருந்த நிலையில், ரஸலின் ருத்ர தாண்டவ பேட்டிங், கடைசி ஓவரில் சுப்மான் கில்லின் வின்னிங் சிக்ஸர்கள் முத்தாய்ப்பாக அமைந்தது. குறிப்பாக ரஸின் அடியை சன் ரைசர்ஸ் இனி மறக்கவே மாட்டார்கள்.

182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் தலைமைக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

எதிர்பாரா வகையில் காட்டடி அடித்த ரஸல் 19 பந்துகளில் 49 ரன்கள்(4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்), சுப்மான் கில் 10 பந்துகளில் 18 ரன்கள்(2 சிக்ஸர்கள்) சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

காட்டடி மன்னன்

ஒரு கட்டத்தில் 18 பந்துகளுக்கு 53 ரன்கள் என இருந்த நிலையில், ரஸல் தனது அனாசயமான அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தின் போக்கையை தன்பக்கம் திருப்பிவிட்டார். 17-வது ஓவர்கள் வரை நிச்சயம் சன் ரைசர்ஸ் அணி தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என நினைத்திருந்தார்கள். ஆனால், அடுத்த 3 ஓவர்களில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. கடைசி 25 பந்துகளில் மட்டும் கொல்கத்தா அணி 65 ரன்களைச் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் லின் தேவையா

கொல்கத்தா அணியின் தொடக்கமே சரியில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து கிறிஸ் லின் அவசரப்பட்டு ஆட்டமிழந்து விடுகிறார். அவருக்கு பதிலாக சுப்மான் கில்லை இனி களமிறக்கலாம். தனக்கு கிடைத்த வாய்ப்பை கிறிஸ் லின் தவறவிட்டாலும் உத்தப்பா பயன்படுத்தினார். உத்தப்பாவும், ராணாவும் தொடக்கத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்கள்.

ஆனால், ரஷித்கான் பந்துவீச வந்த பின்பும் உத்தப்பா ஆட்டமிழந்த பின் கொல்கத்தா ரன் ரேட் சரிந்தது. உத்தப்பா, தினேஷ் கார்த்திக், ராணா என சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்ததால் தோல்விதான் என நினைத்தார்கள். ஆனால், சுப்மான் கில், ரஸல் கூட்டணி ஆட்டத்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

சன் ரைச்ர்ஸ் அணியின் பந்துவீச்சுதான் அதற்கு பலம் என்று வர்ணிக்கப்பட்டது. ஆனால், இன்று பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. புவனேஷ்வர் குமார் , உலகக்கோப்பை போட்டியில் எப்படி பந்துவீசப் போகிறாரோ தெரியவில்லை. ரஸலின் அதிரடியில் பந்துவீச்சை மறக்காமல் இருந்தால் சரி. ரஷித் கான் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ஷகிப் அல் ஹசன், சந்தீப் சர்மா, கவுல் என அனைவருமமே ரன்களை வாரி வழங்கும் வள்ளல்களாக மாறிவிட்டார்கள். புவனேஷ்வர் குமாரின் தலைமைக்குப் பெரிய அடி.

விளாசல் வார்னர்

முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விககெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது.  வார்னர், பேர்ஸ்டோ ஆட்டத்தைத் தொடங்கினார்கள். பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் ஓவரில் பொறுமை காத்த வார்னர், பியூஷ் சாவ்லா வீசிய 2-வது ஓவரே நொறுக்கி எடுத்தார்.  5.3 ஓவர்களில் சன் ரைசர்ஸ் அணி 50 ரன்களை எட்டியது.

ஓவருக்கு ஒரு பவுண்டரி, அல்லது சிக்ஸர் வீதம் வார்னர் அடித்ததால், ரன் ரேட் சீராக உயர்ந்தது. முதல் 6 ஓவர்கள் பவர்ப்ளேயில் சன் ரைசர்ஸ் அணி 54 ரன்கள் குவித்தது. ஆன்ட்ரூ ரஸல் வீசிய 9-வது ஓவரை வார்னர் பொளந்து கட்டினார். ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 31 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்தார் வார்னர். வார்னருக்கு ஐபிஎல் போட்டியில் 37-வது அரை சதமாக அமைந்தது. அருமையான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார் வார்னர். ஒரு அண்டு தடைக்குப் பின் ஐபிஎல் தொடருக்குள் வந்தவுடன் முதல் அரை சதத்தை அடித்து அசத்தியுள்ளார் வார்னர்.

முதல் விக்கெட்

13-வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசினார். அந்த ஓவரில் பேர்ஸ்டோ சிக்கிக்கொண்டார். சாவ்லா வீசிய 5-வது பந்தீல் கூக்ளியாக வந்த பந்தை கவனிக்காததால், க்ளீன்  போல்டாகி பேர்ட்ஸ்டோ 39 ரன்களில் வெளியேறினார். இதில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரி அடங்கும். முதல் விக்கெட்டுக்கு வார்னர்,  பேர்ஸ்டோ கூட்டணி 118 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து விஜய் சங்கர் களமிறங்கினார். வந்தவேகத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் விஜய் சங்கர். சுனில் நரேன் வீசிய 14-வது ஓவரில் சிக்ஸர் அடித்து விஜய் சங்கர் விளாசினார்.

சதம் மிஸ்ஸிங்

16-வது ஓவரை ரஸல் வீசினார். ஏற்கெனவே ரஸல் ஓவரை நொறுக்கி எடுத்திருந்த வார்னர் இந்த ஓவரிலும் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். ஆனால், கடைசிப் பந்தில் கவர் டிரைவில் நின்றிருந்த உத்தப்பா, அருமையான கேட்ச் பிடித்து வார்னரை வெளியேற்றினார். 53 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து வார்னர் பெவிலியினர் திரும்பினார். இதில் 3 சிக்ஸர், 6 பவுண்டரி அடங்கும்.

20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. விஜய் சங்கர் 24 பந்துகளில் 40 ரன்களுடனும், பாண்டே 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

182 ரன்கள் இலக்கு

182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ராணாவும், கிறிஸ் லின்னும் ஆட்டத்தை தொடங்கினார்கள்.

சகிப் அல்ஹசன் வீசிய 2-வது ஓவரில் கிறிஸ் லின் சிக்ஸர் விளாசிய நிலையில் அதே ஓவரின் கடைசிப் பந்தில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து 7 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து உத்தப்பா களமிறங்கி, ராணாவுடன் சேர்ந்தார். 2 ஓவர்கள் பொறுமை காத்த ராணா புவனேஷ் குமார் வீசிய 3-வுத ஓவரில் பவுண்டரி அடித்தார், உத்தப்பாவும் தனது பங்கிற்கு பவுண்டரி அடித்தார்.

4-வது ஓவரை வீச சந்தீப் சேனா அழைக்கப்பட்டார். இந்த ஓவரை ராணா பொளந்து கட்டினார். இரு பவுண்டரிகள்,ஒரு சிக்ஸர் அடித்து ரன் ரேட்டை உயர்த்தினார் ராணா. அதன்பின் உத்தப்பாவும், ராணாவும் ஓவருக்கு பவுண்டரி வீதம் ரன் ரேட்டை சீராக உயர்த்தினார்கள்.

8-வது ஓவரை வீச ரஷித் கான் அழைக்கப்பட்டதும்  ரன் ரேட் குறையத் தொடங்கியது. நிதானமாக பேட் செய்துவந்த உத்தப்பாக 12-வது ஓவரில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். சித்தார்த் கவுல் வீசிய பந்தில் க்ளீன் போல்டாகி 34 ரன்களில் உத்தப்பா வெளியேறினார்.

அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் களமிறங்கி, ராணாவுடன் சேர்ந்தார். 13-வது ஓவரை சந்தீப் சர்மா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார். மெதுவாக வீசப்பட்ட அந்த பந்தை ஸ்டிரைட் டிரைவ் அடிக்க முயற்சித்த கார்த்திக்கின் ஷாட் புவனேஷ்வர் குமாரிடம் கேட்ச்சாக மாறியது. 2 ரன்னில் கார்த்திக் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

ராணா அரைசதம்

அடுத்து ஆன்ட்ரூ ரஸல் களமிறங்கி, ராணாவுடன் சேர்ந்தார். நிதானமாக பேட் செய்த ராணா, ஐபிஎல் போட்டியில் தனது 6-வது அரை சதத்தை 35 பந்துகளில் நிறைவு செய்தார்.

16-வது ஓவரை ரஷித் கான் வீசியபோது, மின்னொளியில் பிரச்சினை ஏற்பட்டு ஆட்டம் சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது. பின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.  ரஷித் கான் பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் ராணா 68 ரன்களில் வெளியேறினார். ராணா கணக்கில் 3 சிக்ஸர், 8 பவுண்டரி அடங்கும். அடுத்து சுப்மான் கில் களமிறங்கி, ரஸலுடன் சேர்ந்தார். 17-வது ஓவரை புவனேஷ்வர் குமார் மிகுந்த கட்டுக்கோப்பாக வீசியதால், 6 ரன்கள் மட்டுமே சென்றது.

18 பந்துகளுக்கு 53 ரன்

3 ஓவர்களுக்கு 53 ரன்கள் என்ற நெருக்கடியான நிலையில் கொல்கத்தா அணி இருந்தது. 18-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடிய கவுல் பந்துவீச்சை துவம்சம் செய்து, நொறுக்கி எடுத்துவிட்டார். முதல் இரு பந்துகளில் இரு சிக்ஸர்கள், ஒருபவுண்டரி அடித்து ரன் ரேட்டை உயர்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

12-க்கு 34

12 பந்துகளுக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவர்கள் பந்துவீச்சாளர்களுக்கு ஆபத்தானது என்பதை உணராமல் புவனேஷ் வீசியதற்கு ரஸல் தகுந்த தண்டனை அளித்தார். முதல் பந்தில் பவுண்டரி, 2-வது சிக்ஸர், 3-வது பந்தில் பவுண்டரி, 5-வது பந்தில் சிக்ஸர் என 20 ரன்களை வாரி அள்ளினார்.

6-க்கு 12

கடைசி 6 பந்துகளுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. சகிப் அல் ஹசன் பந்துவீச ரஸல் எதிர்கொண்டார். முதல் பந்து வைடாகவும், அடுத்த பந்தில் ஒருரன்னும் ரஸல் ஓடி எடுத்தார் ரஸல். 2-வது பந்தை எதிர்கொண்ட சுப்மான் கில் ஒரு சிக்ஸரும், 4-வது பந்தில் ஒருசிக்ஸரும் அடிக்க கொல்கத்தா அணி இரு பந்து மீதமிருக்கையில் அபார வெற்றி பெற்றது.

25-க்கு 65

கடைசி 25 பந்துகளில் மட்டும் கொல்கத்தா அணி 65 ரன்கள் சேர்த்துள்ளது. காட்டடி அடித்த ரஸல் 19 பந்துகளில் 49 ரன்களுடனும், கில் 10 பந்துகளில் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்