ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் 20 ஒவர் கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. சென்னை நிர்ணயித்த 158 ரன்கள் இலக்கை 19 ஓவர்களில் கொல்கத்தா எட்டியது.
தடுமாற்றத்துடன் பேட்டிங்கை துவக்கிய கொல்கத்தா முதல் ஐந்து ஓவர்களில் 23 ரன்களுக்கு 4 ரன்களை இழந்தது. இதில் 3-வது ஓவரை வீசிய நெஹ்ரா, அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, கொல்கத்தாவை நிலைகுலையச் செய்தார். சிறிது நிலைத்து ஆடிய யாதவ், 19 ரன்களுக்கு வெளியேறினார். 11 ஓவர்களில் 107 ரன்கள் தேவை என்ற நிலையில், ரஸ்ஸல் மற்றூம் டோஸ்சேட் களத்தில் இணைந்தனர்.
சிறிதும் தாமதிக்காமல் சென்னையின் பந்துவீச்சை இருவரும் சிதறடிக்க, இலக்கை மெதுவாக கொல்கத்தா நெருங்கியது. 45 பந்துகளை சந்தித்த இந்த இணை, 80 ரன்களை அதிரடியாகக் குவித்தது. குறிப்பாக, மோஹித் சர்மா வீசிய 16-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உட்பட 18 ரன்கள் வர, ஆட்டம், கொல்கத்தாவிற்கு சாதகமாக மாறியது. ரஸ்ஸல் 22 பந்துகளில், 2 பவுண்டரி, 5 சிக்ஸருடன் அரை சதத்தை எட்டினார். டோஸ்சேட் 38 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் அரை சதம் கடந்தார். ரஸ்ஸல் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அந்த கட்டத்தில் கொல்கத்தாவின் வெற்றிவாய்ப்பு கைக்கு எட்டும் தூரத்திலேயே இருந்தது.
முடிவில் 19-வது ஓவரின் முடிவில் கொல்கத்தா அணி வெற்றி இலக்கை அடைந்தது. டோஸ்சேட் ஆட்டமிழக்காமல் 51 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆட்டநாயகனாக ரஸ்ஸல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. தோனி அதிகபட்சமாக 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் 35 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். 20 பந்துகளில் 5 பந்துகள் ரன் எடுக்காத பந்துகள் ஆகும்.
பேட் கமின்ஸ் வீசிய ஷாட் பிட்ச்சை மிட்விக்கெட்டில் ராட்சத அடி அடித்து சிக்சர் அடித்த தோனி இன்னிங்சின் கடைசி பந்தில் உமேஷ் யாதவின் ஃபுல் லெந்த் பந்தை லாங் ஆன் திசையில் காணாமல் அடித்து முடித்தார்.
சுனில் நரைன் அபாரமாக வீசி மீண்டும் ஒருமுறை தனது மதிப்பை நிலைநாட்டினார். அவர் 4 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து சுரேஷ் ரெய்னா (28) விக்கெட்டைக் கைப்பற்றினார். அந்தத் தீர்ப்பு சந்தேகத்திற்குரியதாக அமைந்த்து. ரெய்னா எல்.பி.ஆன அந்தப் பந்து நோ-பால் போல் ரீப்ளேயில் தெரிந்தது.
அதே போல் பியூஷ் சாவ்லா திறமையாக வீசி 4 ஓவர்கள் 26 ரன்கள் கொடுத்து ஸ்மித் மற்றும் டுபிளேசி விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது சென்னை அணிக்கு சற்றே பின்னடைவை ஏற்படுத்தியது.
11 ஓவர்கள் கொல்கத்தாவின் ஸ்பின் ஆதிக்கத்தில் சென்னை அதிரடி வீரர்கள் 51 ரன்களையே குவித்து 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆனால் வேகப்பந்து வீச்சில் 9 ஓவர்களில் 104 ரன்களை விளாசியது விக்கெட்டுகள் இல்லை.
கொல்கத்தா டாஸ் வென்று முதலில் பீல்ட் செய்ய முடிவெடுத்தது. டிவைன் ஸ்மித் 4 பவுண்டரிகளுடன் அதிரடி காண்பித்து 20 ரன்கள் எடுத்து சாவ்லா பந்தில் பிஸ்லா ஸ்டம்ப்டு செய்ய வெளியேறினார். மெக்கல்லம் 22 ரன்கள் எடுத்து யூசுப் பதான் பந்தில் எல்.பி ஆனார்.
ரெய்னா நிதானமாக ஆடி 24 பந்துகளில் 28 ரன்களை 3 பவுண்டரிகள் உதவியுடன் எடுத்தார். டுபிளேசி 14 ரன்களில் சாவ்லா பந்தில் ஸ்டம்ப்டு ஆனார்.
12.3 ஓவர்களில் 86/4 என்று இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் பிறகு தோனி (35), டிவைன் பிராவோ (28 ரன்கள், 28 பந்துகள் 2 பவுண்டரி 2 சிக்சர்கள்) ஆகியோர் நிலைத்து ஆட கடைசி 45 பந்துகளில் 71 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்தனர்.
ஆஸி. வேகப்புயல் கமின்ஸ் 4 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்தார். உமேஷ் 43 ரன்கள் கொடுத்தார். யூசுப் பத்தான் 3 ஓவர்கள் 16 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
கொல்கத்தா அணியில் உத்தப்பா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பீர் ஆவேசம்:
ஆட்டத்தின் 19வது ஓவரை கமின்ஸ் வீச 4வது ஷாட் பிட்ச் பந்தை தோனி புல் ஆடி சிக்சருக்கு விரட்ட, 6வது பந்தை சற்றே வைடாக வீசினார் கமின்ஸ், தோனியின் பலவீனம் அது. ஆனால் பந்து வைடிற்கான வெள்ளைக்கோட்டைக் கடக்காமல் இருந்த போதே நடுவர் வைடு என்றார். இதனால் ஆத்திரமடைந்த கம்பீர் நடுவரிடம் கடுமையாக, கோபாவேசமான முகத்துடன் கைகளை அசைத்து சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார். இது சர்ச்சையாகுமா என்பது பிறகே தெரியவரும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
57 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago