உஸ்மான் கவாஜாவின் சதம், கம்மின்ஸ், ஸாம்ப்பா, லயன் ஆகியோரின் பந்துவீச்சு ஆகியவற்றால், கோலி தலைமையிலான இந்திய அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, 10 ஆண்டுகளுக்குப்பின் ஒருநாள் தொடரை இந்தியாவில் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. 273 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 237 ரன்களுக்கு ஆட்டமிழந்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது. 2-0 முன்னிலையிலிருந்து தொடரை இழப்பது இதுவே முதல்முறை. எல்லாவற்றிலும் வரலாறு படைக்கும் கோலி இதிலும் வரலாறு படைத்து விட்டார்.
இலக்கை விரட்டும் போது ரோஹித் சர்மா தன் வழக்கமான பாணியில் ஆடவில்லை இருமுறை அடுத்தடுத்து அவருக்கு கேட்ச் வாய்ப்புகள் நழுவ விடப்பட்டன. ஷிகர் தவண் இன்னொருமுறை விக்கெட் கீப்பர், ஸ்லிப், பாயிண்டில் அவுட் ஆனால் அணியிலிருந்து தூக்குவோம் என்று அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும், ஆனால் நேற்று கமின்ஸ் வீசிய பந்து அபாரமானது. விராட் கோலி அருமையாக எந்த விதப் பிரச்சினையும் இன்றி ஆடினார், ஆனால் பிட்சின் தன்மையினால் ஸ்டாய்னிஸ் பந்து ஒன்று சற்று கூடுதலாக எழும்ப கட் ஷாட் ஆட வேண்டிய பந்து விராட் கோலி கட் ஷாட்டில் சச்சின், சேவாக் போன்ற அளவுக்கு பாண்டித்தியம் உள்ளவர் அல்ல, அதனால் கட் ஆடும் முயற்சி எட்ஜ் ஆனது. தவண், கோலி வெளியேற்றமும் ஆஸி.யினரின் திட்டமிடலும் ரோஹித்தைக் கட்டிப் போட்டது.
இருமுறை ஸாம்ப்பாவிடம் கேட்ச் ஆகியிருப்பார் ஆனால் கேட்ச் விடப்பட்டது, அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஸாம்பா பந்தை மேலேறி வந்து ஆடும் முயற்சியில் ஸ்டம்ப்டு ஆனார். ரிஷப் பந்த் வந்தவுடன் வேகம் காட்டினார். ஸாம்பாவை சிக்ஸ் அடித்தார், ஆனால் அவரை நேதன் லயன் உள்ளிட்டோர் சாந்தப்படுத்தி தம்பி அவசரப்படாதே என்றனர். கடைசியில் நேதன் லயனின் கிளாசிக் பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். விஜய் சங்கர் ஸாம்பாவை ஒரு சிக்ஸ் அடித்தார், ஆனால் மீண்டும் அவசரப்பட்டு அடிக்கப்போய் டீப் மிட்விக்கெட்டில் கொடியேற்றி 16 ரன்களில் ஸாம்பாவிடம் வீழ்ந்தார். ரோஹித் சர்மாவையும் ஜடேஜாவையும் ஸாம்பா ஒரே ஓவரில் வீழ்த்தினார். ஜடேஜா ஸாம்பாவின் கூக்ளியில் ஏமாந்தார், ஸ்டம்ப்டு ஆனார்.
132/6 என்ற நிலையில் கேதார் ஜாதவ்வும், புவனேஷ்வர் குமாரும் ‘உலகின் சிறந்த அணி’க்கு எப்படி ஆட வேண்டும் என்று பாடம் கற்பித்தனர். இருவரும் சேர்ந்து 17 ஓவர்களில் 91 ரன்களைச் சேர்த்து கொஞ்சம் அச்சுறுத்தினர், ஆனால் வெற்றிக்க்குத் தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 10 ரன்கள் வரை சென்று விட்டது. புவனேஷ்வர் குமார் மிகப் பிரமாதமாக ஆடி 54 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்க்ளுட்ன 46 ரன்கள் எடுத்தார் ஆனால் இலக்கின் நெருக்கடியினால் கமின்ஸ் பந்தில் கொடியேற்றி அவுட் ஆனார். கேதார் ஜாதவ் தன்னால் இயன்ற அளவுக்கு சாதுரியமாகவும் அடித்தும் ஆடினார், அவரும் புவனேஷ்வர் போன பிறகு 44 ரன்களில் ஜை ரிச்சர்ட்சன் பந்தில் புல் ஆடப்போய் அவுட் ஆகி வெளியேற இந்திய நம்பிக்கை இருண்டது. 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி எனும் வெறுப்பைச் சந்தித்தது.
கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிச் சென்றிருந்தது. அதன்பின் 10 ஆண்டுகளுக்குப்பின் இதுபோன்று தொடரை வென்று இந்திய அணி முகத்தில் கரிபூசிவிட்டு செல்கிறது. ஆஸ்திரேலியாவில் சென்று நாம் ஒருநாள் தொடரை வென்றதற்கு பழிதீர்த்துவிட்டது ஆஸி. முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற ‘ஹேங் ஓவர்’ இன்னமும் தீரவில்லை போலும்.
சதம் அடித்த கவாஜா ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் இரு சதங்கள், 2 அரைசதங்கள் அடித்துள்ளார். பாட் கம்மினஸ் இந்த தொடரில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கடந்த 28 மாதங்களாக உள்நாட்டில் எந்த அணியிடமும் தொடரை இழக்காமல் கம்பீரமாக பயணித்துவந்த இந்திய அணி, முதல் முறையாக பெருத்த அடி வாங்கியுள்ளது.
உலகக்கோப்பைப் போட்டிக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், இந்திய அணி விளையாடிய கடைசி சர்வதேச தொடர் இதுவாகும். இதில் தொடரை இழந்து ஒட்டுமொத்த தன்னம்பிக்கையையும், தார்மீக மனோபலத்தையும் தொலைத்திருக்கிறது இந்திய அணி,
இனி ஐபிஎல் போட்டித்தொடரில் விளையாடினாலும் அது பலனில்லை. சர்வதேச அளவில் இந்திய வீரர்களின் பலவீனத்தை இந்தத் தொடர் வெளிச்சம் போட்டுகாட்டிவிட்டது.
பேட்டிங்கிற்கு சாதகமான, பந்துவீச்சுக்கு சிறிதும் ஒத்துழைக்காத உள்நாட்டு மைதானங்களிலேயே இந்திய அணி தொடரை இழந்துவிட்ட நிலையில், மின்னல் வேகத்தில் ஸ்விங் ஆகும் இங்கிலாந்து ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் எவ்வாறு மற்ற அணிகளின் பந்துவீச்சை எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை ஒரு கட்டத்தில் 0-2 என்ற கணக்கில் இருந்தார்கள், அதன்பின் தொடர்ந்து 3 போட்டிகளை வென்று தொடரை வென்றுள்ளது கிரிக்கெட் வரலாற்றில் இது 5-வது முறையாகும்.
அது மட்டுமல்லாமல் கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பின் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை வெல்ல முடியாமல் பெரும் நெருக்கடியிலும், நம்பிக்கைக் குறைவிலும் தள்ளாடிக்கொண்டிருந்தது. அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் இந்திய வீரர்கள் அளித்திருக்கிறார்கள்.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் இந்திய அணியின் நல்ல பேட்டிங் பயிற்சியையும், பந்துவீச்சுப் பயிற்சியையும் அளித்து உலகக்கோப்பைப் போட்டிக்கு ஃபார்முக்கு கொண்டுவந்துவிட்டார்கள். சபாஷ் இந்திய அணி!
ஆனால், இந்திய அணியில் ஷிகர் தவண், ரோகித் சர்மா, கோலி, தோனி, ரிஷப்பந்த், கேதார் ஜாதவ் ஆகிய ஸ்பலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் இருந்தும் இந்த தொடரை வெல்ல முடியவில்லை. இதில் தோனி மட்டுமே கடைசி இரு போட்டிகளுக்கு இல்லை.
விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கத் தொடரில் இருந்து அணிக்குள் ஏரளமான சோதனை முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால், இன்னும் உருப்படியாக 4 மற்றும் 5-வது இடத்துக்கு வீரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
உலகக் கோப்பையும் நெருங்கிவிட்டது. கே.எல்.ராகுல், அம்பதி ராயுடு, மயங்க் அகர்வால், தோனி, கேதார் ஜாதவ், விஜய சங்கர் என பலரையும் சோதித்துப் பார்த்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
அணியில் வீரர்களை மாற்றாமல் இருந்தாலே கோலி தலைமையில் சாதனையாக இருந்தது என்று வர்ணிக்கப்பட்டது. அந்த அளவுக்கு வீரர்களின் இருப்பு அணியில் நிலையற்றதாக இருந்தது. இப்படி ஒரு மோசமான கேப்டன்ஷிப், வீரர்களின் நம்பிக்கையை குலைத்துவிடும், குலைத்தும்விட்டது.
வீரர்கள் தங்களை நிலைப்படுத்திக்கொள்வதற்கு குறைந்தபட்ச வாய்ப்புகளை வழங்காமல் இருப்பதாலேயே அவர்களால் தொடர்ந்து திறமையை வெளிப்படுத்த முடியாமல் போகிறது. 4-வது 5-வது இடத்துக்கு தெளிவான பேட்ஸ்மேன்கள் இல்லாமல், குழப்பத்துடனே உலகக்கோப்பையை இந்திய அணி எதிர்கொள்ளப்போகிறது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் முயற்சித்தும் குழப்பவாதி கோலியால் இன்னும் வீரர்களை அடையாளம் காண முடியவில்லை.
உலகிலேயே சிறந்த அணி, இதுவரை இல்லாதஅளவுக்கு சிறந்த இந்திய அணி என்று மார்தட்டிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் முகத்தில் ஆஸி. அணி கரிபூசிவிட்டு சென்றுள்ளது. உலகிலேயே ஒருநாள் தரவரிசையில் 2-ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் போராடி தோற்றாலும் பரவாயில்லை, கடைசி இரு போட்டிகளையும் போராடாமல் தாரை வார்த்துள்ளது.
இந்தப் போட்டியில் ஷிகர் தவண் ஆட்டமிழந்தது வேதனைக்குரியதாகும். தவணின் வழக்கமான வீ்க் பாயிண்ட்டை தெரிந்து கொண்டு பாயிண்ட் ஸ்லிப்,விக்கெட் கீப்பர் என கச்சித்தமாக ஸ்கெட்ச் போட்டு ஆஸி. அணி வெளியேற்றினார்கள். ஏதோ ஒருபோட்டியில் மட்டும் சதம் அடித்துவிட்டு, தொடர்ந்து தவண் சொதப்பி வருகிறார். உலகக் கோப்பையில் என்ன செய்யப்போகிறார் எனத் தெரியவில்லை.
ரோஹித் சர்மா இந்த தொடரில் பெரிய அளவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை,இரு போட்டிகளில் மட்டும் அரைசதம் அடித்துள்ளார். ரோஹித் சர்மா, உலகக்கோப்பையில் எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் தொடக்கத்தை அளிக்கும் விளையாடுவது அவசியம்.
கோலி நேற்றைய ஆட்டத்தில் ஷார்ட் பிட்ச்சாக வரும் பந்தை தேவையில்லாமல் தொட்டு ஆட்டமிழந்தார். ஆக்ரோஷமான, ஆவேசமான கேப்டனாக இருக்கும் கோலி, சொந்த மண்ணில் தொடரை இழப்பது மனச்சோர்வை ஏற்படுத்தும். இங்கிலாந்து தொடரில் இருந்து தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிவரும் இந்திய அணிக்கு உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக போதுமான ஓய்வு அளிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இல்லாவிட்டால், மனச்சோர்வு, சலிப்பு உலகக்கோப்பையில் எதிரொலித்துவிடும்.
அதுமட்டுமல்லாமல் நேற்றைய ஆட்டத்தில் கவாஜாவுக்கு கேட்ச் பிடித்துவிட்ட கோலி, பந்தை தரையில் எரிந்து, ஆவேசமாக உரக்கத் கத்தியது அருவருப்பாக இருந்தது. களத்தில் எதிரிணிவீரர் மீது தனது இயலாமையை வெளிப்படுத்துவதாகவே இது காணப்பட்டது.
விஜய் சங்கர், ரிஷப் பந்த் இருவரும் இந்த தொடரில் தங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்கள். அதிலும் குறிப்பாக ரிஷப் பந்து கீப்பிங் செய்வதில் இன்னும் முதர்ச்சி அடைய வேண்டும், பேட்டிங்கிலும் பொறுமையில்லை. உலகக்கோப்பையில் மாற்றுவிக்கெட் கீப்பருக்கு ரிஷப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யலாம்.
மீண்டும் தோனியின் வெறுமை, கேப்டனுக்கு வழங்கும் ஆலோசனையின்மை ஆகியவற்றின் வெற்றிடம் தெரிந்துவிட்டது. தோனிக்கு ஏன் ஓய்வு அளித்தார்கள் எனத் தெரியவில்லை.
விஜய் சங்கர் ஓரளவுக்கு நன்றாக பேட் செய்தாலும் அவசரப்பட்டு அடிக்கும் ஷாட்களால் ஆட்டமிழந்து விடுகிறார். அவர் இந்த தொடரில் தன்னை நிரூபித்து இருக்கலாம். கேதார் ஜாதவ், ராகுல், அம்பதி ராயுடு இவர்கள் உலகக்கோபப்ைபயில் எந்த இடத்தில் விளையாடப் போகிறார்கள் இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது.
இந்திய அணியின் பந்துவீச்சும் நேற்றைய ஆட்டத்தில் எடுபடவில்லை. டெல்லி போன்ற செத்துப்போன ஆடுகளம் என்று கூறினால், ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதை. அல்லது இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை கேள்விக்குள்ளாக்க வேண்டும்.
புவனேஷ்வர் குமார் ஏதாவது ஒருபோட்டியில் சிறப்பாக செயல்பட்டார் என்பதற்காக அவரை முழுநேர பேட்ஸ்மேனாக பயன்படுத்தவும்முடியாது. பந்துவீச்சிலும் பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் தவிர்த்து வேகப்பந்துவீச்சுக்கு அடுத்ததாக யாரையும் அடையாளம் காணவில்லை. 4-வது, 5-வது இடத்துக்கும் பேட்ஸ்மேன்கள் இல்லை. வலுவான தொடக்க கூட்டணி இல்லை. மொத்தத்தில் உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக இந்திய அணி முன் பல்வேறு கேள்விகள் இருக்கிறது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. 273 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 237 ரன்களுக்கு ஆட்டமிழந்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா 100 ரன்கள், ஹேண்ட்ஸ்கம்ப் 52 ரன்கள் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் சுமாராகவே பேட் செய்தனர்.
ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 174 ரன்கள் என்ற வலுவாக இருந்த அணி, அடுத்த 98 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்ததும் விமர்சனத்துக்குரியது. கடைசி 62 ரன்களுக்குள் ஆஸி. பேட்ஸ்மேன்கள் 5 விக்கெட்டுகளை இழந்தனர்.
இந்தியத் தரப்பில் முகமது ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலிய அணித் தரப்பில் சம்ப்பா 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், ரிச்சர்ட்ஸன், ஸ்டாய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட மற்றும் தொடர் நாயகனாக உஸ்மான் கவாஜா தேர்வு செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago