ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் பிரிவில் தொடர்ந்து நழுவி வரும் பதக்கத்தை இந்த முறை வென்று, இந்தியா இதுவரை பதக்கம் வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்ற முயற்சிப்போம் என இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரரான அஜந்தா சரத் கமல் தெரிவித்தார்.
17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை தென் கொரியாவின் இன்சியோன் நகரில் நடைபெறவுள்ளது. அதில் 10 பேர் கொண்ட இந்திய டேபிள் டென்னிஸ் அணி, தமிழக வீரரான சரத் கமல் தலைமையில் பங்கேற்கிறது.
2004-ல் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றவரான சரத் கமல், 2006 காமன்வெல்த் போட்டியில் ஒற்றையர் பிரிவு, அணி பிரிவு என இரண்டிலும் தங்கப் பதக்கம், 2010 காமன்வெல்த் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம், 2014 காமன்வெல்த் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
சர்வதேச தரவரிசையில் 46-வது இடத்தில் இருக்கும் சரத் கமல் பல்வேறு சர்வதேச போட்டிகளில் வாகை சூடியிருந்தாலும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் இன்னும் பதக்கம் வெல்லவில்லை. இதற்கு முன்னர் 2006, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சரத் கமல் பங்கேற்றிருந்தாலும் அவருடைய பதக்கக் கனவு நனவாகவில்லை.
தொடர்ந்து 3-வது முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள சரத் கமல், இந்த முறை பதக்கத்தை நழுவவிட்டுவிடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளார். அதற்காக ஜெர்மனியின் டஸில்டா்ப் நகரில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சரத் கமல் ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக எப்படி தயாராகியிருக்கிறீர்கள்?
காமன்வெல்த் போட்டியை முடித்த பிறகு இங்கு (டஸல்டர்ப்) வந்து தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். பயிற்சி மிக நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இதேபோல் இந்திய வீரர்கள் இருவர் ஸ்வீடனிலும், மற்ற இருவர் போலந்திலும் பயிற்சி பெற்று வருகிறார்கள். வரும் 22-ம் தேதி இங்கிருந்து தென் கொரியாவுக்கு புறப்படுகிறேன்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்க வாய்ப்பு எப்படியிருக்கிறது?
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் டேபிள் டென்னிஸைப் பொறுத்தவரை ஆசிய நாடுகளைச் சேர்ந்த அணிகள்தான் சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதனால் ஆசிய விளையாட்டுப் போட்டியை ஒலிம்பிக்கிற்கு நிகரான போட் டியாகவே பார்க்கிறேன். டேபிள் டென்னிஸில் தொடர்ந்து கோலோச்சி வரும் ஜப்பான், கொரியா, ஹாங்காங், சீனா, சீன தைபே போன்ற அணிகள், எதிரணிகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகத் திகழக் கூடியவை.
அணி பிரிவைப் பொறுத்த வரை காலிறுதிக்கு முன்னேறி விடுவோம். அப்படி வந்துவிட்டால் பதக்கம் வெல்வதற்கு மேலும் ஒரு வெற்றியை மட்டுமே பெற வேண்டியிருக்கும். ஆனால் அந்த ஒரு வெற்றியை பெறுவது அவ்வளவு எளிதல்ல. அப்படி வெற்றி பெற வேண்டுமானால் கடுமையான முயற்சியும், மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதும் அவசியம். அப்படி விளையாடும்பட்சத்தில் நிச்சயமாக பதக்கம் வெல்ல முடியும்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸில் இந்தியா இதுவரை ஒரு முறைகூட பதக்கம் வென்றதில்லை. அதனால் இந்த முறை எப்படியாவது பதக்கம் வெல்ல முயற்சிப்போம். அதேநேரத்தில் போட்டிக்கான டிராவும் (யாருடன் யார் மோதுவது என்பது தொடர்பான போட்டி அட்டவணை) எங்களின் வெற்றி வாய்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கும்.
ஆசிய விளையாட்டு போட்டியில் உங்களின் பதக்கக் கனவு தொடர்ந்து நழுவி வருவது பற்றி…
கடந்த இரு முறையும் காலிறுதி வரையே முன்னேற முடிந்தது. அதுதான் இன்றளவும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சிறந்த செயல்பாடாக உள்ளது. இந்த முறை அந்த வரலாற்றை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறோம். இந்த முறை பதக்கம் வென்றுவிட்டால் ரியோ டி ஜெனிரோவில் 2016-ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் நிச்சயம் பதக்கம் வெல்ல முடியும் என நம்புகிறேன்.
காமன்வெல்த் வெற்றியால் கிடைத்த உந்துதலும், உற்சாகமும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு உதவுமா?
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு நானும், ஆண்டனி அமல்ராஜும் இணைந்து விளையாடவில்லை. நாங்கள் இருவரும் இணைந்து விளையாடிய அனுபவம் மிகக் குறைவு என்றாலும், நான் அமல்ராஜின் ஆட்டத்தைப் பற்றியும், அவர் என்னுடைய ஆட்டத்தைப் பற்றியும் தெரிந்துவைத்திருப்பது எங்கள் இருவருக்குமே பலம். காமன்வெல்த் போட்டியின் போது நான் என்னுடைய முழுத்திறமையையும் வெளிப்படுத்தவில்லை என நினைக்கிறேன்.
ஆனால் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முடிந்த அளவுக்கு சிறப்பாக ஆட வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். சோர்வு காரணமாக காமன்வெல்த் போட்டியில் சிறப்பாக ஆட முடியாமல் போனது. போதிய அளவுக்கு சர்வீஸும் அடிக்கவில்லை, எதிராளிகளின் சர்வீஸையும் சரியாக எதிர்கொள்ளவில்லை. மேற்கண்ட இரண்டையுமே கட்டுக்குள் வைப்பது மிக மிக்கியமான விஷயம். எனினும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக ஆடுவேன் என நம்புகிறேன்.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணியை அனுப்புவது உறுதியில்லாமல் இருந்தது. அது உங்களை பாதித்ததா?
அதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனெனில் ஆசிய விளை யாட்டுப் போட்டிக்கான டேபிள் டென்னிஸ் அணியில் இடம்பெற்றி ருப்பவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். அது தொடர்பாக எங்களுடைய பயிற்சியாளர் எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. பயிற்சி எப்போ துமே வீண் போகாது என நாங்கள் நினைக்கிறோம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago