ரன்கள் எடுக்கத் திணறிய ஆஸி.; மந்தமான பிட்சில் இந்திய பவுலிங் அசத்தல்: இந்தியாவுக்கு 237 ரன்கள் இலக்கு

By இரா.முத்துக்குமார்

ஹைதராபாத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியினால் விருப்பத்துக்கேற்ப ரன்கள் குவிக்க முடியாமல் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் என்று மட்டுப்பட்டது.

 

பும்ராவிடம் ஏரோன் பிஞ்ச் டக் அவுட் ஆன பிறகே ஆஸ்திரேலியாவினால் எழும்ப முடியவில்லை. ஷமி தொடக்கத்தில் 4 ஓவர்கள் 6 ரன்கள் என்று நெருக்க, ஆஸி.மிடில் ஆர்டரை ஸ்பின்னர்கள் கவனித்துக் கொள்ள ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களால் சிங்கிள்கள் கூட சீராக எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு பிற்பாடு பவுண்டரிகளும் வறண்டன.

 

ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா அரைசதம் எடுக்க கிளென் மேக்ஸ்வெல் போராடி 40 ரன்கள் சேர்த்தார். இதற்கு 51 பந்துகளை அவர் எடுத்துக்கொண்டார் என்றால் பந்து வீச்சின் கிடுக்கிப்பிடித் தன்மையை ஊகித்தறியலாம். கடைசியில் மொகமத் ஷமியின் ட்ரேட் மார்க் இன்ஸ்விங்கரில் க்ளீன் பவுல்டு ஆகி வெளியேறினார் மேக்ஸ்வெல். கடைசியில் கேரி, டர்னர், கூல்டர் நைல் ஆகியோரின் பங்களிப்பில் 236 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா.

 

 

இந்தியப் பந்து வீச்சு மிகவும் கட்டுக்கோப்பாக இன்னிங்ஸ் முழுதும் அமைந்தது. குல்தீப் யாதவ் (2/46), ரவீந்திர ஜடேஜா (0/33), கேதார் ஜாதவ் (1/31) ஆகியோர் ஜஸ்பிரித் பும்ராவின் அரிதான ஒரு ரன் கொடுப்பு பந்து வீச்சுக்கு ஈடுகட்டினர், பும்ரா 10 ஓவர்கள் 60 ரன்கள் 2 விக்கெட்.  சமீபத்தில் அவர் நிர்ணயித்த தரநிலைகளுக்கு இந்தப் பந்து வீச்சு உதாரணமாக இருக்க முடியாது.  ஸ்பின்னர்கள் 27 ஓவர்களில் வெறும் 110 ரன்களையே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

மொகமது ஷமி முதல் 4 ஓவர்களில் 6 ரன்கள் என்று நெருக்கியவர் கடைசியில் 2 விக்கெட்டுகளுடன் 10 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்தார்.

 

உஸ்மான் கவாஜா 76 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல், கவாஜா ஆகியோரும் சவுகரியமாக ஆட முடியவில்லை, இந்திய அணி ஏறக்குறைய 169 ரன் இல்லாத பந்துகளை வீசியது. அதாவது ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 28.1 ஓவர்கள் ரன் எடுக்கவில்லை என்று பொருள்.

 

கேதார் ஜாதவ், ஜடேஜா 2வது பவர் ப்ளேயின் போது ஆஸ்திரேலியாவை கிடுக்கிப் பிடி போட்டனர். ஷமி முதல் ஸ்பெல்லுக்குப் பிறகு ஸ்டாய்னிஸ் (37, 53 பந்துகள்), கவாஜா இணைந்து 2வது விக்கெட்டுக்காக 87 ரன்கள் சேர்த்தனர், ஏரோன் பிஞ்ச் ஆஸி. அணியில் நீடிப்பது கடினம் என்பதை நிரூபிக்கும் வகையில் இன்று பும்ராவின் பந்து உள்ளே வருமா வெளியே செல்லுமா என்பதைத் தீர்மானிக்க முடியாமல் அருமையான பந்தில் தோனியிடம் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார்.

 

கவாஜாதான் முதலில் பும்ராவை ஒரு கவர் டிரைவ் அடித்து ஸ்கோரிங் ஷாட்டை நினைவு படுத்தினார், பிறகு பவர் பிளேயின் கடைசி ஓவரில் குல்தீப் அறிமுகமாக அவரை கவாஜா ஒரு சிக்ஸுக்கு விரட்டினார்.

 

முதல் பவர் பிளேயில் 38 ரன்கள்தான் வந்தது. இதனையடுத்து ஸ்டாய்னிஸ் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்து விஜய் சங்கர் பந்துகளில் ரன் குவிக்கத் தொடங்கினார், விஜய் சங்கர் 3 ஒவர்கள் 22 ரன்கள் என்று சொதப்பினார். இவரை பவுண்டரிகள் விளாசினார் ஸ்டாய்னிஸ். இதனையடுத்து அடுத்த 5 ஓவர்களில் 33 ரன்கள் வந்தது. இந்நிலையில்தான் அரைக்கை பவுலர் ஜாதவ் போட்ட படுமோசமான பந்தை, சிக்ஸ் தூக்க வேண்டிய பந்தில் ஸ்டாய்னிஸ் விராட் கோலி கையில் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், ஜாதவ்விடம் ஆட்டமிழப்பவர்கள் 2 போட்டிகளுக்கு நீக்கப்படுவார்கள் என்று எந்த அணி கூறுகிறதோ அந்த அணிதான் உருப்படும், ஜாதவ் 7 ஒவர்கள் 31 ரன் 1 விக்கெட்.

 

கவாஜா தனது 6வது ஒருநாள் அரைசதத்தை எடுத்தார், குல்தீப் பந்தை மேலேறி வந்து அடிக்கிறேன் பேர்வழி என்று தூக்கி அடிக்க சரியாகச் சிக்காமல் டீப் மிட்விக்கெட்டில் விஜய் சங்கர் அருமையான ரன்னிங் கேட்ச் எடுத்தார்.

 

97/3 என்ற நிலையில் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், மேக்ஸ்வெல் இணைந்தனர்.  ஹேண்ட்ஸ்கம்ப் கால்களை நன்றாகப் பயன்படுத்தினார், ஆனால் குல்தீப் யாதவ் அருமையான சைனமன் பந்தை வீசினார். முதலில் பந்து காற்றில் வரும் போது ஏமாந்த ஹேண்ட்ஸ்கம்ப் பிட்ச் ஆகி உள்ளே வந்ததையும் கணிக்கத் தவறினார், தோனிக்கு சுலபமான ஒரு ஸ்டம்பிங்காக ஆனது.

 

ஹேண்ட்ஸ் கம்ப் ஆட்டமிழந்தவுடன் 2வது பவர்ப்ளெயை கேதார் ஜாதவ், ஜடேஜாவை வைத்து இந்தியா பிடியை இறுக்கியது.

 

விக்கெட் எடுக்காவிட்டாலும் ஜடேஜா முதலில் 5 ஒவர்கள் 15 பிறகு 5 ஓவர்கள் 18 என்று சிக்கனம் காட்டினார், 34 டாட்பால்களை அவர் வீச 2 பவுண்டரிகளை மட்டுமே மொத்தமாக கொடுத்தார் ஜடேஜா.

 

மேக்ஸ்வெல், டர்னர் (21) கடினமான கட்டத்தில் கொண்டு சென்றனர், 36 ரன்களை இருவரும் சேர்த்தனர், அப்போதுதான் டர்னரை இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆக்கிய ஷமி மேக்ஸ்வெலுக்கு அருமையான இன்ஸ்விங்கரை வீசி பவுல்டு செய்தார்.

 

ஆனால் கேரி (36), கூல்ட்டர் நைல் (28) இணைந்து 62 ரன்களைச் சேர்க்க ஆஸ்த்ரேலியா 236/7 என்று முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்