தொடக்கத்திலும், முடிவிலும் சரிந்த விக்கெட்டுகள்: ஹர்திக் காட்டடி; ராயுடு, சங்கர் ஹீரோ: நியூசி.க்கு 253 ரன்கள் இலக்கு

By க.போத்திராஜ்

ஹர்திக் பாண்டியாவின் காட்டடி பேட்டிங், ராயுடு, விஜய் சங்கர் ஆகியோரின் நிதானமான ஆட்டம் ஆகியவற்றால், இந்திய அணி 252 ரன்கள் என்கிற கவுரமான ஸ்கோரை எட்டியது.

நிச்சயமாக இது நியூசிலாந்து அணிக்கு இந்தப் பிட்சில் சவாலான ஸ்கோர்தான். இந்திய அணி கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினால் வெற்றியுடன் தொடரை முடிக்கலாம்.

ஒரு கட்டத்தில் போல்ட், ஹென்ரி பந்துவீச்சை எதிர்கொள்ளத் தெரியாமல், 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. ஆனால் அனுபவம் அதிகம் இல்லா, அம்பதி ராயுடு(90), தமிழக வீரர் விஜய் சங்கர்(45) ஆகியோர் இணைந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டெடுத்தது பாராட்டுக்குரியது.

அதிலும் விஜய் சங்கரின் பிரமாதமான ஆட்டத்தைப் பார்க்கும் போது, இந்திய அணி இத்தனை நாட்களாகப் பயன்படுத்தாமல் இருந்தது தவறு. இவரை டி20 போட்டிகளுக்கு மட்டும் பயன்படுத்தாமல் உலகக்கோப்பைப் போட்டிகளுக்களுக்கும் பயன்படுத்துவது சிறப்பாகும். அணிக்கு அடுத்த ஆல்ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்று நம்பலாம்.

ராயுடு தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டுள்ளார். கடந்த போட்டியில் ஏமாற்றமளித்தாலும், இந்தப் போட்டியில் அணியைச் சரிவில் இருந்து கட்டி இழுத்த பெருமைக்குரியவர்களில் முக்கியமானவர் ராயுடு. அணியில் தனக்குரிய இடத்தைக் கெட்டியாக பிடித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாவின் தனக்குரிய வெற்றிடத்தை மீண்டும் நிரப்பிவிட்டார். 22 பந்துகளில் 45 ரன்கள், இதில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என பட்டையை கிளப்பினார் பாண்டியா.

கடைசிநேரத்தில் அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்திச் செல்ல இதுபோன்ற அதிரடியான பேட்ஸ்மன்கள் தேவை என்பதை நிரூபித்துவிட்டார் பாண்டியா. கடைசி 5 ஓவர்களி்ல் காட்டடி அடித்ததை நியூசிலாந்து வீரர்கள் மறக்க மாட்டார்கள்.

இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. தினேஷ் கார்த்திக்கு பதிலாக தோனி சேர்க்கப்பட்டார். காயத்தில் இருந்து மீண்டதால் தோனி களமிறங்கினார். கலீல் அகமது,குல்தீப் யாதவுக்கு பதிலாக விஜய் சங்கர், முகமது ஷமி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமானது, பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும் எனத் தெரிந்திருந்தும் முதலில் பேட்டிங் செய்ய ரோஹித் சர்மா ஏன் தீர்மானித்தார் எனத் தெரியவில்லை.

பிட்ச் ரிப்போர்ட்டில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தால், ஆடுகளத்தின் ஈரப்பதம், தன்மையைப் பயன்படுத்தி விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே வீழ்த்தி நெருக்கடி அளிக்க முடியும். இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், 2-வதாக பந்துவீசும் அணிக்குச் சிரமம் ஏற்படும் என்று தெரிவித்தனர். ஆனால் ஏன் பேட்டிங்கை தேர்வு செய்தார் என்பது புரியாமல் இருக்கிறது.

ரோஹித் சர்மா, தவண் களமிறங்கினார்கள். டிரன்ட் போல்ட், ஹென்ரி பந்துவீச்சு தொடக்கத்தில் இருந்தே இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கிலி ஏற்படுத்தியது. 140 கிமீ வேகத்தில் வந்த பந்துகள், ஸ்விங் ஆகியதால், சமாளித்து பேட் செய்ய தவண், ரோஹித் சர்மா திணறினார்கள். ரன் சேர்ப்பிலும் மந்தமாகச் செயல்பட்டனர்.

ஹென்ரி வீசிய 5-வது ஓவரின் முதல் பந்தை ரோஹித் சர்மா எதிர்கொண்டார். பந்து அருமையாக ஸ்விங் ஆகி ஸ்டெம்பை பதம் பார்த்தது. 2 ரன்களுடன் ரோஹித் சர்மா ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

அடுத்து சுப்மான் கில் களமிறங்கினார். 6-வது ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ஹென்ரியிடம் கேட்ச் கொடுத்து தவண் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஹென்ரி வீசிய 7-வது ஓவரில் கில் ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து கில் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளிலும், இந்திய ஏ அணியிலும் விளையாடிய கில்லை சர்வதேச போட்டிகளுக்கு போதுமான அனுபவமின்றி விளையாட வைத்தது மிகப்பெரிய தவறாகும். இன்னும் கால்களை நகர்த்தி விளையாடுவதற்கு அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இருக்கும் பந்துவீச்சுக்கும், சர்வதேச போட்டிகளில் வீரர்களின் பந்துவீச்சுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. இரு பொன்னான வாய்ப்புகளை சுப்மான் கில் இழந்துவிட்டார்.

அடுத்து தோனி களமிறங்கி, ராயுடுவுடன் இணைந்தார். காயத்தால் இரு போட்டிகளில் களமிறங்காமல் இருந்த தோனி இந்த ஆட்டத்தில் விளையாடினார். ஆனால், 6 பந்துகளை மட்டுமே சந்தித்த தோனி ஒரு ரன் சேர்த்த நிலையில் டிரன்ட் போல்ட் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

ஃபிரன்ட்புட் கொடுத்து பேட் செய்ய வேண்டிய பந்தை தவறாகக் கணித்து பேட் செய்து விக்கெட்டை இழந்தார் தோனி. இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பந்துவீசும்போது பந்து பெரும்பாலும் வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு ஆப்கட்டராக வரும் என்பதைக் கணித்து ஆடி இருந்தாலே தோனி விக்கெட்டை இழந்திருக்கமாட்டார். நல்ல லென்த்தில் பந்தைத் தனது கால்களுக்கு உள்ளே கொடுத்து விக்கெட்டை தேவையில்லாமல் இழந்தார் தோனி.

18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு ராயுடு, விஜய் சங்கர் இணைந்து மீட்டெடுத்தனர்.

5-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 98 ரன்கள் சேர்த்தனர். விஜய் சங்கர், ராயுடுவின் பேட்டிங்கில் நல்ல முதிர்ச்சியும், பொறுமையும் தென்பட்டது. தேவையில்லாத பந்துகளை தொடாமல், மோசமான பந்துகளுக்கு மட்டுமே பவுண்டரிகளாக மாற்றினார்கள். ராயுடு 86 பந்துகளில் அரைசதம் அடித்தார். அருமையாக ஆடிய விஜய் சங்கர் 45 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் செய்யப்பட்டார்.

அடுத்து வந்த ஜாதவ், ராயுடுவுடன் இணைந்தார். ஜாதவும் தனது பங்கிற்கு நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தார். 6-வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையில் ராயுடு ஆட்டமிழந்தார். 113 பந்துகளைச் சந்தித்த ராயுடு 90 ரன்கள் சேர்த்தார் இதில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும்.

7-வது விக்கெட்டுக்கு பாண்டியா களமிறங்கிய ஜாதவுடன் சேர்ந்தார். 46 ஓவர்களுக்குப்பின் பாண்டியாவின் காட்டடி ராஜ்ஜியம் தொடங்கியது.

ஆஸ்லே வீசிய 47-வது ஓவரில் பாண்டியா ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டார். போல்ட் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார் பாண்டியா. நீஷம் வீசிய 49-வது ஓவரில் இரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து ஸ்கோரை உயர்த்திய பாண்டியா 45 ரன்களில் போல்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

போல்ட் வீசிய கடைசி ஓவரில் புவனேஷ்குமார் 6 ரன்னிலும், சாஹல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 49.5ஓவர்களில் இந்திய அணி 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து தரப்பில் ஹென்ரி 4 விக்கெட்டுகளையும், போல்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

விளையாட்டு

24 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்