மிகப்பெரிய இலக்கை அடித்துக்கொடுத்தும், மோசமான பந்துவீச்சு, பீல்டிங், கேட்சுகளை கோட்டைவிட்டது போன்ற தவறுகளால், பெங்களூருவில் நேற்று நடந்த 2-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலிய அணி.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. 191 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நான் தேர்வு செய்வதுதான் அணி, எந்த அணியையும் எந்த அணியைக் கொண்டும் வீழ்த்துவோம் என்று சீரற்ற முறையில் அணியை மாற்றிக்கொண்டேயிருக்கும் கோலி, ரவிசாஸ்திரி திமிருக்கு விழுந்த அடியாகும் இது.
குறிப்பாக ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெலின்(113) ஆர்ப்பரிப்பான சதம்,உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகும். முதல் டி20 ஆட்டத்திலும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெல்லக் காரணமாகினார். ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருதையும் மேக்ஸ்வெல் பெற்றார்.
இந்திய அணி வீரர்கள் தங்களின் மோசமான பந்துவீச்சில் ஃபார்மில் இல்லாத ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை முழுமையான பேட்டிங்ஃபார்முக்கு கொண்டு வந்துவிட்ட பெருமையைப் பெற்றனர். இன்னும் ஒருநாள் தொடர் இருக்கிறது, அதற்குள் இந்திய அணியை வைத்து தேவையான அனைத்து பயிற்சிகளையும் ஆஸ்திரேலிய அணியினர் எடுத்துக்கொள்வார்கள் என்று நம்பலாம்.
ஆஸ்திரேலிய அணியை ஒருநாள் தொடர் முடியும் போது வெற்றியை மட்டுமல்ல நமது அணியின் தன்னம்பிக்கையையும் சேர்த்து எடுத்துக்கொண்டு செல்லப்போகிறார்கள்.
விராட் கோலி தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து எந்தவிதமான டி20 தொடரிலும் தோல்வி அடையாமல் தொடர்ந்து 6 தொடர்களில் இந்திய அணி வென்றுவந்தது. ஆனால், 40 மாதங்களுக்குப்பின் கோலி தலைமையில் முதல் முறையாக தொடரை இந்திய அணி இழந்துள்ளது. அது மட்டுமல்லாமல், இந்தியாவில் வந்து டி20 தொடரை ஆஸி. கைப்பற்றிச் செல்வது இதுதான் முதல் முறையாகும்.
உலகக்கோப்பைப் போட்டி நெருங்கும் வேளையில் இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச தொடர் இதுதான் என்று சொல்லிவிட்டு, இதுபோன்ற மோசமான பந்துவீச்சையும், பீல்டிங்கையும், பேட்டிங்கையும் வெளிப்படுத்துவது ஆரோக்கியமானதல்ல.
ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அவர்களின் நம்பிக்கையை நாம் தூள்தூளாக உடைத்துவிட்டு திரும்பினோம். இப்போது நம்மண்ணில் வைத்து நம்மை பதம் பார்த்த்திருக்கிறார்கள். இதுஒட்டுமொத்தமாக அணியின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் துறையில் ஏற்பட்ட தோல்வியாகும். சித்தார்த் கவுல் சராசரியாக12 ரன்களும் , சாஹல் 11 ரன்களும், விஜய் சங்கர் 9, பாண்டியா 8 ரன்களும் வாரி வழங்கிய கொடுமையை என்ன சொல்வது? இதில் பல கேட்சுகளை கோட்டை விட்டது, பீல்டிங்கை தவறவிட்டு பந்துபின்னால் ஓடியது என சொதப்பல் ஏராளம்.
டி20 போட்டியில் 191 ரன்கள் இலக்கு என்பது உண்மையில் ஓவருக்கு 10 ரன்ரேட்டில் கொண்டு செல்ல வேண்டிய கடினமானதுதான். அந்தவகையில் கோலியும், தோனியும் நல்ல இலக்குக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், பெங்களூரு போன்ற தட்டையான ஆடுகளத்தில், இந்திய வீரர்களின் பந்துவீச்சு மிக மோசமாக அமைந்தது. 20 ஓவர்களையும் பும்ரா வீசி இருந்தால் மட்டுமே இந்திய அணி வென்றிருக்கும். ஆனால், அதுசாத்தியமா. அந்த வகையில், பும்ராவைத் தவிர அணியில் எந்த வீரரும் மெச்சும் அளவுக்கு பந்துவீசவில்லை.
முதல் போட்டியில் ஓய்வுஅளிக்கப்பட்ட ஷிகர் தவணுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், பேட்டிங்கை மறந்ததுபோன்று அவர் அடித்த ஷாட்கள், உலகக்கோப்பையில் இவர் எவ்வாறு இங்கிலாந்து மண்ணில் வேகப்பந்தை எதிர்கொள்ளப்போகிறார் என்கிற பதற்றத்தை ஏற்படுத்துகிறது. 24 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்து தன்னை தேர்வு செய்தது தவறு என்று தவண் உணர்த்திவிட்டு சென்றுவிட்டார்.
ராகுல் இந்த போட்டியிலும் தன்னால் முடிந்த பங்களிப்பைச் செய்தார். முதல் போட்டியில் அரைசதம் அடித்த ராகுல், இந்த ஆட்டத்திலும், ஓரளவுக்கு கை கொடுக்கும் வகையி்ல அவரின் பேட்டிங் அமைந்தது. தவண் வேடிக்கை பார்த்த நிலையில், ராகுலின் அதிரடி ஆட்டமே அணியின் ஸ்கோரை உயர்த்தியது என்பதே உண்மை.
ரிஷப் பந்த் தனக்கு இன்னும் முதிர்ச்சி வரவில்லை என்பதை தனது பேட்டிங்கால் தொடர்ந்து உணர்த்தி வருகிறார். ஆனால், அவரை இழுத்துப்பிடித்து பிசிசிஐ நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பு அளிப்பது ஏனோ தெரியவில்லை. ஷ்ரேயஸ் அய்யர், சூரிய குமார் யாதவ் போன்றவர்கள் இருக்கும் போது ரிஷப் பந்த் லாபி இப்போதைக்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் ஆட்டத்திலும் அவசரப்பட்டு ரன் அவுட் ஆகிய பந்த், இந்த ஆட்டத்திலும் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார்.
ஒட்டுமொத்தத்தில் “தவண்+ரிஷ்பந்த் கூட்டணி என்பது 30 பந்துகள், 15 ரன்கள், ஒரு கேட்சை தவறவிட்டது” போன்ற தோல்விக்கான காரணங்களுக்கு மட்டுமே சொந்தமாக்கி இருக்கிறார்கள்.
கடந்த முதல் ஆட்டத்தில் பேட்டிங்கில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகிய தோனி, கோலியுடன் இணைந்து அதிரடியாகவே விளையாடினார். 7வது ஓவரிலிருந்து சில ஓவர்களுக்கு பவுண்டரி இல்லாமல் இந்திய அணி சிரமப்பட்டது. ஆனால், அதன்பின் அடித்து ஆடத்த தொடங்கினார்கள். கடைசி10 ஓவர்களில் மட்டும் 117 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆனால், அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போன்றுதான் ஆனது.
தினேஷ் கார்த்திக் தன்னை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். ஆனால், இவர் ஓரம் கட்டப்படுவதன் அரசியல் என்ன எனத் தெரியவில்லை. கடைசி ஓவரில் 3 பந்துகளைச் சந்தித்தாலும், அருமையான 2 பவுண்டரிகளை தினேஷ் கார்த்திக் அடித்தார். இந்த இரு பவுண்டரிகளை தினேஷ் கார்த்திக் அடிக்காமல் இருந்திருந்தால், இந்திய அணியின் ஸ்கோர் இன்னும் 9 ரன்கள் குறைவாக விரைவாக தோல்வி அடைந்திருக்கும்.
பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் நேற்று இந்திய அணி மிகமோசமாக செயல்பட்டனர். தொடக்கத்தில் இரு விக்கெட்டுகளை விரைவாக கழற்றினாலும், 3-வது விக்கெட்டை பிரிக்கமுடியாமல் சிரமப்பட்டனர். சித்தார்த் கவுல், ரிஷப் பந்த், சாஹல் ஆகியோர் பீல்டிங்கிலும் கோட்டைவிட்டு தலா ஒரு கேட்சையும் நழுவிட்டனர். இந்திய அணியின் பீல்டிங், ரன்னைக் கட்டுப்படுத்தும் பந்துவீச்சு உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக கவலையளிக்கும் விதத்தில் இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு 30 பந்துகளில் வெற்றிக்கு 60 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில்தான் இருந்தது. பந்துவீச்சில் துல்லியத்தன்மையை வெளிப்படுத்தி, லைன் லென்த்தில் பந்துவீசி இருந்தால், விக்கெட்டை இழந்திருப்பார்கள். ஆனால், மோசமானமான பந்துவீச்சை ஆஸி. பேட்ஸ்மேன்கள் வெற்றிக்கு எளிதாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
டாஸ்வென்ற ஆஸி. அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்தது. தவண், ராகுல் நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். அதிரடியாக பேட் செய்த ராகுல் 26 பந்துகளில் 47ரன்கள்(4சிக்ஸர், 3பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தனர். தவண் 14 ரன்களோடு வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு தோனி, கோலி கூட்டணி அணியை இழுத்துச் சென்றனர். இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தனர். 6-வது ஓவரில் இருந்து 10-வது ஓவர்வரை ரன்வேகம் மந்தமாக இருந்தது. 10 ஓவர்களில் 73 ரன்கள் 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. ஆனால், கடைசி 10 ஓவர்களில் 117 ரன்கள் குவித்து.
16 ஓவர்களில் கோல்டர் நீல் ஓவரில் கோலி அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள, ஷார்ட் வீசிய 18-வது ஓவரில் தோனி அடித்த 2சிஸ்கர்கள், ஒரு பவுண்டரியை குறிப்பிட்டே ஆக வேண்டும். அதிரடியாக ஆடிய கோலி 29 பந்துகளில் டி20 போட்டியில் தனது 20-வது அரைசதத்தை நிறைவு செய்தார். டார்சி ஷார்ட் முதல் 2 ஓவர்கள் நன்றாக வீசினார், அதை அப்படியே தொடர்ந்திருந்தால் ஒருவேளை தோனி அடிக்கப்போய் அவுட் ஆகியிருக்கலாம். ஒருவேளை கடந்த போட்டியின் நினைவில் தோனி விக்கெட்டை வீழ்த்த வேண்டாம் என்று ஆஸ்திரேலியர்கள் நினைத்தார்களோ என்னவோ? ஆனால் இம்முறை தோனிக்கு வாகான இடங்களில் பந்து விழுந்தது.
தோனி 23 பந்துகளில் 40 ரன்கள்(3சிஸ்கர்கள், 3 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 100 ரன்கள் சேர்த்தனர். தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் களமிறங்கி இரு பவுண்டரிகள் விளாசினார். கோலி 38 பந்துகளில் 72 ரன்களுடனும்(6சிக்ஸர்,2 பவுண்டரி) சேர்த்தும், தினேஷ் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
191 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஸ்டாய்னிஸ்(7), பிஞ்ச்(8) ரன்களில் விரைவாக வெளியேறினார். ஆனால், இதைப் பயன்படுத்தி பந்துவீச்சில் தொடர்ந்து நெருக்கடி அளிக்க இந்திய வீரர்கள் தவறிவிட்டனர். மேக்ஸ்வெல், ஷார்ட் கூட்டணி ஆட்டத்தை கையில் எடுத்துக்கொண்டனர். 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் சேர்த்திருந்தனர். 60 பந்துகளில் வெற்றிக்கு 104 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டம் இந்தியாவின் பக்கமே இருந்தது.
ஆனால், இந்திய வீரர்களின் பொறுப்பற்ற பந்துவீச்சு, ஷார்ட் பிட்ச்களில் அதிகமாக பந்துவீசியது, ஓவர் பிட்சில் பந்துவீசியது போன்றவை மேக்ஸ்வெலுக்கு நன்கு பேட்டிங் பயிற்சியாக அமைந்தது. அதிலும் குர்னல் பாண்டியா, சாஹல், கவுல் ஆகியோரின் பந்துவீச்சு துல்லியமாக அமையவில்லை.
28 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்த நிலையில் ஷார்ட் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த ஹேண்ட்ஸ்கம்ப், மேக்ஸ்வெலுக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார். 28 பந்துகளில் அரைசதம் அடித்தமேக்ஸ்வெல், 50 பந்துகளில் சதம் அடித்தார்.
கடைசி ஓவரில் 9 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. கடந்த போட்டியில் உமேஷ் யாதவ் வாரி வழங்கினார், இந்த முறை சித்தார்த் கவுல் யார்க்கர் வீசுகிறேன் என்று கூறிக்கொண்டு புல்டாஸாக வீச மேக்ஸ்வெல் சிக்ஸருக்கு அனுப்பினார், 4-வது பந்தில் பவுண்டரி அடிக்க மேட்ச் முடிவுக்கு வந்தது.
19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து ஆஸ்திரேலிய அணி 194 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 ரன்களுடனும்(9சிக்ஸர்,7பவுண்டரி), ஹேண்ட்ஸ்கம்ப் 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியத் தரப்பில் விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago