17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியான் நகரில் இன்று தொடங்குகிறது. 16 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி அக்டோபர் 4-ம் தேதி நிறைவடைகிறது.
இந்தப் போட்டி 3-வது முறையாக தென் கொரியாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்னர் 1986 (சியோல்), 2002 (புசான்) ஆகிய ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டியை தென் கொரியா நடத்தியிருக்கிறது.
ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா, சீனா, ஜப்பான், வடகொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகளைச் சேர்ந்த 13 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 20 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கிறார்கள். 36 வகையான விளையாட்டுகளில் 439 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 28 வகையான விளையாட்டுகள் 2016-ல் நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறுகின்றன.
மொத்தம் 49 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் 23 மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டவையாகும். இதுதவிர வீரர்களின் பயிற்சிக்காக 54 பயிற்சி மைதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விளையாட்டு கிராமத்தில் வீரர்கள், அதிகாரிகள், செய்தியாளர்கள் ஆகியோருக்காக 9,500 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடக்க விழா
இன்சியானில் அமைக்கப்பட்டுள்ள பிரதான மைதானத்தில் (இன்சியான் ஆசியாட் ஸ்டேடியம்) 61 ஆயிரத்து 74 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குதான் தொடக்க விழா நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. முதல் நாளில் எந்தப் போட்டியும் கிடையாது. நாளை முதல் போட்டிகள் ஆரம்பமாகின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான மைதானங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், கட்டிடங்கள், சாலைகள் உள்ளிட்டவற்றுக்காக உத்தேசமாக ரூ.9870 கோடி செலவிடப்பட்டுள்ளது.
சீனா ஆதிக்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் அசைக்க முடியாத அணியாக சீனா திகழ்கிறது. ஆசிய விளையாட்டின் வரலாற்றில் அனைத்து போட்டிகளிலும் சேர்த்து அதிக பதக்கங்கள் வென்ற அணிகள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனா இதுவரை 1,191 தங்கம், 792 வெள்ளி, 570 வெண்கலம் என மொத்தம் 2,553 பதக்கங்களை வென்றுள்ளது.
ஜப்பான் 2,650 பதக்கங்களுடனும், தென் கொரியா 1,829 பதக்கங்களுடனும் முறையே 2 மற்றும் 3-வது இடங்களில் உள்ளன. கடந்த முறை 199 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்த சீனா இந்த முறையும் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது இடத்தை ஜப்பானும், 3-வது இடத்தையும் தென் கொரியாவும் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முதல் 7 இடங்களுக்குள் வரலாம் என தெரிகிறது.
இந்தியா சார்பில் 616 வீரர்கள்
இந்தியாவில் இருந்து 679 பேர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இதில் 516 பேர் வீரர், வீராங்கனைகள். எஞ்சியவர்கள் பயிற்சியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆவர்.
நீச்சல், வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், கூடைப்பந்து, குத்துச்சண்டை, படகுப் போட்டி (கேனோயிங், கயாகிங், ரோவிங், யாட்சிங்), சைக்கிளிங், குதிரையேற்றம், கால்பந்து, கோல்ஃப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ஹாக்கி, ஜூடோ, கபடி, செபக்தாக்ரா, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டேக்வாண்டோ, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், வாலிபால், மல்யுத்தம், ஊஷூ, பளுதூக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
கடும் சவால்
கடந்த ஜூலை-ஆகஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 15 தங்கம் உள்பட 64 பதக்கங்களைக் குவித்த இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் சிறப்பாக செயல்படும் முனைப்பில் உள்ளது. ஆசிய கண்டத்தில் விளையாட்டுத் துறையில் கோலோச்சி வரும் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளின் சவால்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல.
கடந்த முறையைவிட இந்த முறை இந்தியா கூடுதல் பதக்கங்களை வெல்லும் என இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) நம்பிக்கை தெரிவித்துள்ளது. “காமன்வெல்த் போட்டியில் 64 பதக்கங்களை வென்றதன் மூலம் இந்தியாவின் செயல்பாடு திருப்திகரமாக அமைந்தது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 70 பதக்கங்கள் வரை இந்தியர்கள் வெல்வார்கள் என நம்புகிறோம்” என சாய் இயக்குநர் ஜி.ஜி.தாம்சன் தெரிவித்துள்ளார்.
கலக்கல் கபடி அணி
பாட்மிண்டன், ஸ்குவாஷ் போட்டிகளில் சில பதக்கங்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குத்துச்சண்டை, மல்யுத்தம், கபடி ஆகியவற்றில் இந்த முறையும் இந்தியர்கள் பதக்கங்களைக் குவிப்பார்கள் என நம்பப்படுகிறது. கபடியில் தொடர்ச்சியாக 6 முறை தங்கம் வென்றுள்ள இந்திய ஆடவர் அணி, இந்த முறையும் தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மகளிர் அணிக்கும் நல்ல வாய்ப்புள்ளது. இதுதவிர டென்னிஸிலும் பதக்க வாய்ப்புள்ளது.
ஹாக்கி போட்டியைப் பொறுத்தவரையில் 1988-க்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்லவில்லை. இந்தமுறை அந்த குறையைத் தீர்க்கும் முனைப்பில் உள்ளது சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணி. தங்கப் பதக்கம் வெல்லும் பட்சத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடித் தகுதி பெற்றுவிடலாம்.
விகாஸ் கௌடா சாதிப்பாரா?
ஆடவர் வட்டு எறிதலில் விகாஸ் கௌடாவுக்கு பதக்க வாய்ப்புள்ளது. காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கௌடா, இதுவரை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றதில்லை. எனவே அவர் இந்த முறை அந்த குறையைத் தீர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் வட்டு எறிதலில் கிருஷ்ணா பூனியா, சீமா பூனியா ஆகியோருக்கு நல்ல வாய்ப்புள்ளது. இவர்களில் சீமா பூனியா, காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் 110 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் சித்தார்த் திங்காளயா பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. அவர் கடந்த மாதம் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கி சுடுதல்
துப்பாக்கி சுடுதலைப் பொறுத்தவரையில் அபிநவ் பிந்த்ரா, ககன் நரங் ஆகியோர் கடந்த முறை நழுவவிட்ட தங்கப் பதக்கத்தை இந்த முறை வெல்லும் முனைப்பில் உள்ளனர். ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் ஆகியவற்றில் பதக்கம் வென்றுவிட்ட பிந்த்ரா, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனிநபர் பிரிவில் ஒரு பதக்கம்கூட வென்றதில்லை. அவருக்கு இதுவே கடைசி ஆசிய விளையாட்டுப் போட்டியாக இருக்கலாம் என்பதால் அவர் தங்கம் வெல்ல முயற்சிப்பார்.
ஜிது ராய் (50 மீ. பிஸ்டல்), அபூர்வி சான்டீலா (மகளிர் 10 மீ. ஏர் ரைபிள்), மலாய்கா கோயல், அயோனிகா பால் போன்ற புதுமுகங்களும் துப்பாக்கி சுடுதலில் கலக்கக் காத்திருக்கின்றனர். இவர்களில் ஜிதுராய் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதோடு, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம் ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளார்.
மல்யுத்தத்தைப் பொறுத்தவரையில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற சுஷீல் குமார் பங்கேற்கவில்லை. இதனால் மல்யுத்தத்தில் தங்கப் பதக்கத்துக்காக காத்திருக்கும் இந்தியாவின் 28 ஆண்டுகால காத்திருப்பை யோகேஷ்வர் தத் முடிவுக்கு கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே உள்ளது.
பன்மயம் ஒளிர்கிறது இங்கே
இந்தப் போட்டிக்கான அதிகாரப்பூர்வமாக வாசகமாக “பன்மயம் ஒளிர்கிறது இங்கே” என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆசியாவின் வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் மேற்கண்ட வாசகம் இடம்பெற்றுள்ளது.
அமைதியை வலியுறுத்தும் ‘மேஸ்காட்’
போட்டியின் சின்னமாக (மேஸ்காட்) இன்சியானின் சாங்டோ தீவில் வசிக்கும் கடல் நாய்கள் (ஸ்பாட் சீல்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பரேமி, சுமுரோ, விச்வோன் என அழைக்கப்படுகின்றன. கொரிய மொழியில் பரேமி, சுமுரோ, விச்வோனுக்கு முறையே காற்று, நடனம், ஒளி என்பது பொருள். வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே அமைதியை வலியுத்தும் வகையில் மேற்கண்ட சின்னத்தை தேர்வு செய்துள்ளனர் போட்டி ஏற்பாட்டாளர்கள்.
ஆசியர்களுக்கு பெருமை சேர்க்கும் இலச்சினை
போட்டிக்கான அதிகாரப்பூர்வ இலச்சினை ஆசியாவின் முதல் எழுத்தான ‘ஏ’ வை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. ‘ஏ’ வின் இடது மேற்பகுதியில் சூரியன் இடம்பெற்றுள்ளது. ஆசிய மக்கள் வானத்தை தங்களின் கையில் பிடித்திருப்பதைக் குறிக்கும் வகையில் இந்த இலச்சினை அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago