செயின்ட் ஜார்ஜில் நேற்று நடந்த பரபரப்பான ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த இமாலய 418 ரன்கள் இலக்கை விரட்டிச் சென்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னணியில் உள்ளது.
பேட்ஸ்மேனுக்கு சொர்க்கபுரியான கிரனடா மைதானத்தில் இங்கிலாந்து வீரர்கள் சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்ட, பதிலுக்கு கெயிலும் போட்டிபோட்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ்பட்லர்(150), கேப்டன் மோர்கன்(103) சதம் அடித்தனர். இவர்களுக்குக் கொஞ்சம் கூட சளைத்தவன் இல்லை என்பதுபோல், கிறிஸ் கெயில் ருத்தர தாண்டவம் ஆடி, காட்டடி அடித்து 162 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆட்டநாயகன் விருது பட்லருக்கு வழங்கப்பட்டது.
மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஒட்டுமொத்த போராட்டமும், கடைசியில் அதில் ரஷிதிடம் தோற்றுப்போனது. ரஷித் வீசிய 48-வது ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்டை இழந்து பரிதாபமாகத் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் இங்கிலாந்து தரப்பில் 24 சிக்ஸர்களும், மேற்கிந்தியதீவுகள் தரப்பில் 22 சிக்ஸர்கள் என ஒட்டுமொத்தமாக 46 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. ஒருநாள் போட்டியில் 46 சிக்ஸர்களை அடித்தது சாதனையாகும்.
300 சிக்ஸர்கள், 10 ஆயிரம் ரன்
மேலும், கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டியில் 300 சிக்ஸர்கள் அடித்த வீரர் எனும் சாதனையை இப்போட்டியில் படைத்தார். அதுமட்டுமல்லாமல், அனைத்துவகையான போட்டிகளிலும் சேர்த்து கெயில் 500 சிஸ்கர்களைக் கடந்தார். மேலும், 282 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கெயில் எட்டினார்.
டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுள் அணியின் கேப்டன் ஹோல்டர் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். பேர்ஸ்டோ, ஹேல்ஸ் இருவரும் முதல் விக்கெட்டுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்து 100 ரன்களில் பிரிந்தனர். பேர்ஸ்டோ(52) ரன்னிலும், ரூட் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹேல்ஸ் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். 165 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்தது.
பட்லர் காட்டடி
4-வது விக்கெட்டுக்கு மோர்கனுடன், ஜோஸ்பட்லர் சேர்ந்தார். இருவரும் மேற்கிந்தியத்தீவுகள் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் அடித்த காட்டடியால் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 55 பந்துகளில் மோர்கனும், 45 பந்துகளில் ஜோஸ்பட்லரும் அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து அணி 42 ஓவர்களில் 300 ரன்களை எட்டியது.
அதன்பின் மேற்கிந்தியத்தீவுகள் வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்த பட்லர் அடுத்த 15 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து 60 பந்துகளில் சதம் அடித்தார். மோர்கன் 86 பந்துகளில் சதம் அடித்தார்.
4-வது விக்கெட்டுக்கு இருவரும் 204 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். மோர்கன் (88பந்துகள்)103 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 6 சிஸ்கர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.
தொடர்ந்து காட்டடி அடித்த பட்லர் 60 பந்துகளில் சதத்தையும், 76 பந்துகளில் 150 ரன்களையும் எட்டி ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 12 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கும். கடைசி 10 ஓவர்களில் மட்டும் இங்கிலாந்து அணி 154 ரன்கள் குவித்தது.
50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 418 ரன்கள் சேர்த்தது. கரிபீயன் மண்ணில் ஒருநாள் போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் பிராத் வெய்ட், தாமஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
இமாலய இலக்கு
419 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் மிகப்பெரிய இலக்குடன் மே.இ.தீவுகள் களமிறங்கியது. கெயிலுக்கு துணையாக ஆடாமல், கேம்பெல்(15), ஹோப்(5) ரன்னில் ஆட்டமிழந்தனர். 44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
3-வது விக்கெட்டுக்கு பிராவோ, கெயில் கூட்டணி இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. குறிப்பாக 39 வயதான கெயில் அடித்த அடி, இங்கிலாநந்து பந்துவீச்சாளர்களை மிரள வைத்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் பறந்தன.
காட்டடி அடித்த கெயில் 32 பந்துகளில் அரை சதத்தையும், 55 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். அரைசதம் அடித்த போது கெயில் 5 சிக்ஸர்களையும், சதம் அடித்தபோது 9 சிக்ஸர்களையும் அடித்திருந்தார். பிராவோ 54 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
மேற்கிந்தியத்தீவுகள் அணி 21.2 ஓவர்களில்200 ரன்களையும், 28 ஓவர்களில் 250 ரன்களையும் எட்டியது. இருவரின் ஆட்டத்தைப் பார்த்தபோது, இலக்கை எட்டிப் பிடித்துவார்கள் எனத் எண்ணத் தோன்றியது.
ஆனால், 3-வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். பிராவோ 61 ரன்களில்(59பந்து) ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்து வந்த ஹெட்மெயர் 6 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ஹோல்டர் களமிறங்கி, கெயிலுக்கு உறுதுணையாக இருந்தார்.
கெயில் 85 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். 55 பந்துகளில் சதம் அடித்த கெயில் அடுத்த 30 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து 150 ரன்களை எட்டினார்.
கெயில் 97 பந்துகளில் 162 ரன்கள் (14 சிஸ்கர்கள்,11 பவுண்டரிகள்) சேர்த்து ஆட்டமிழந்தார். ஹோல்டர் 29 ரன்களில் வெளியேறினார்.
7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நர்ஸ், பிராத்வெய்ட் இருவரும் அணியை நிதானமாக வெற்றியின் அருகே அழைத்துச் சென்றனர். நிதானமாகப் பேட் செய்த பிராத்வெய்ட் தனது ஒருநாள் போட்டியின் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். இருவரின் நிதானமான ஆட்டத்தால் வெற்றியை நோக்கி மே.இ.தீவுகள் நகர்ந்தது.
ஆனால், அதில் ரஷித் வீசிய 48-வது ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. 48-வது ஓவரின் 2-வது பந்தில் நர்ஸ்(43) ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து பந்துகளில் வரிசையாக, பிராத்வெய்ட் 50 ரன்கள், பிஷு, தாமஸ் டக்அவுட் ஆக ஆட்டம் முடிவுக்கு வந்தது. 4 விக் என்றாலும் ஹாட்ரிக் எடுக்கவில்லை.
இறுதிவரை போராடிய மே.இ.தீவுகள் அணி 48 ஓவர்களில் 389 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
அதில் ரஷித் 5 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago