இன்னும் எத்தனை அவதாரங்கள் வேண்டும்? தினேஷ் கார்த்திக் அணியில் நீடிக்க…

By த.இளங்கோ

ஆஸ்திரேலியாவுக்கான எதிரான ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக்குக்கு இடம் தரப்படவில்லை. உலகக்கோப்பை போட்டிகளுக்கு முந்தைய இந்திய அணியின் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் இது விவாதத்திற்குரியதாகிறது.

 

தினேஷ் கார்த்திக் ஒவ்வொரு முறையும் நீக்கப்படும்போதெல்லாம் அணியின் தேவைக்கேற்ப தன்னுடைய அவதாரத்தை மாற்றிக்கொண்டு மீண்டும் திரும்பியிருக்கிறார். அணி நிர்வாகம் எந்தப் பணி கொடுத்தாலும் அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு சாதித்திருக்கிறார். ஆனாலும் சில வீரர்களுக்கு தங்களை நிரூபிக்க தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கும் தேர்வாளர்கள் இவரை அணியிலிருந்து நீக்குவதற்காகவே வாய்ப்புகளை வழங்கியது போலுள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு அளவுகோல்கள் வைப்பது வாடிக்கைதான் என்றாலும் டிகே விஷயத்தில் இது மிகவும் வேடிக்கையாகத்தான் உள்ளது.

 

தோனிக்கு முன்பாக இவர் இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தது இவரது நிதானமான மற்றும் உறுதியான பேட்டிங்தான். ஆனால் இன்று பினிஷிங் ரோல் என்று 7-வது இடத்திற்கு அனுப்பப்பட்டும் அதற்கேற்ப தயாராகி முதல் பந்திலிருந்தே பெரிய ஷாட்களை ஆடுகிறார். இன்று இவருக்கு ஓரளவு ஆதரவை பெற்றுத் தந்திருப்பதற்கு காரணமான இன்னிங்ஸான நிதகாஸ் டிராபி இறுதிப் போட்டியில் 6-வது இடத்தில் இறங்க வேண்டியவரை விஜய் சங்கருக்காக 7-வது இடத்தில் இறக்கினார்கள். முந்தைய இடத்தில் இறக்கியிருந்தால் சாதாரணமான வெற்றியை சாத்தியமாக்கி இருப்பார். ஆனால் அன்று சாத்தியமில்லாத வெற்றியை 29(8)* ரன்கள் அடித்து பெற வைத்திருக்காவிட்டால் அதுவேகூட இவருக்கு கடைசி சர்வதேச போட்டியாக இருந்திருக்கலாம்.

 

சமீபத்திய சர்ச்சையானது நியூசிலாந்துடனான டி20 இறுதிப்போட்டியில் சிங்கிள் எடுக்கவில்லை என்பது. ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய அந்த போட்டியில் துவக்கத்தில் ரோஹித் சர்மா 32 பந்துகளில் 38 ரன்கள் அடித்தது, கடைசி கட்டத்தில் மிகப்பெரிய ஹிட்டரான தோனி 4 பந்துகளை வீணடித்தும் அச்சிறிய மைதானத்தில் உள்வட்டத்திற்குள்ளேயே உயரே அடித்து ஆட்டமிழந்தது, பாண்டியா சகோதர்கள் இணைந்து பந்துவீச்சில் விக்கெட் எடுக்காமல் 98 ரன்கள் கொடுத்தது...ஆகிய அத்தனை சொதப்பல்களையும் ஒற்றை சிங்கிளில் தன் தோள்களில் ஏற்றிக்கொண்டார் டிகே. நல்லவேளை போகட்டும் அந்த பந்தில் சிங்கிள் எடுத்திருந்தாலும் பினிஷர் வேலைக்கு லாயக்கில்லாதவர் என்ற அவப்பெயர்தான் கிடைத்திருக்கும். ஏனெனில் இவர் ராசி அப்படி.

 

இவர் ஒருநாளும் தோனியாகி விட முடியாது என்றவர்கள் அம்பத்தி ராயுடுவை எதிர்முனையில் நிறுத்திக்கொண்டு தோனி சிங்கிள் ஆடாமல் இந்திய அணியை தோல்வியடையச் செய்ததை மறந்துவிட்டனர். விக்கெட் கீப்பிங்கிலும் விருத்திமான் சாஹாவுக்கு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வழங்கப்பட்ட வாய்ப்புகள் இவருக்கு வழங்கப்படவில்லை. அங்கு மட்டுமல்ல தமிழக அணியிலும் சில காலம் டிகே அணியில் இருக்கும்போதே சுசில் என்பவரை விக்கெட் கீப்பிங் செய்ய வைத்தனர். அதற்கு கூறப்பட்ட காரணம் கார்த்திக் அனைத்து இடங்களிலும் சிறப்பாக பீல்டிங் செய்யக் கூடியவர் என்பது. இதுபோன்ற காரணங்கள் மற்றவர்களுக்கும் பொருந்துமானால் தற்போது பகுதிநேர பந்துவீச்சாளர்கள் இல்லாத இந்திய அணியில் தோனியை பந்துவீச்சாளராக்கிவிட்டு, டிகேவை கீப்பராக்கலாமே.

 

தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பந்த் தேர்வுசெய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு திணறலுடன் பதிலளித்த தேர்வுக்குழு தலைவரான எம்எஸ்கே.பிரசாத்,

 

பந்த் இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால் முன்னுரிமை என்கிறார். இதுதான் காரணமென்று முன்பே கூறியிருந்தால் இடதுகை பேட்ஸ்மேனாகவும் புது அவதாரம் எடுத்திருப்பார் டிகே. ஆனால் அதன் பிறகு வேறு காரணம் கண்டுபிடிப்பார்கள். உண்மையில் என்னதான் காரணம்?. கூகுளில் கூட டிகே (DK) எனத் தேடினால் “தெரியாது” (Don’t Know) என்றே பதில் வருகிறது.

 

-

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE