பார்பேடோஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் கிமார் ரோச்சின் 5 விக்கெட்டுகள், பிறகு ஜேசன் ஹோல்டரின் மராத்தான் அதிரடி இரட்டைச் சதம், விக்கெட் கீப்பர் டவ்ரிச்சின் அருமையான சதம், ராஸ்டன் சேசின் 2வது இன்னிங்ச் 8 விக்கெட் ஆகியவற்றினால் மிகப்பெரிய உதை வாங்கிய இங்கிலாந்து அணி நேற்று நார்த் சவுண்ட் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகளிடம் இன்னொரு பெரிய உதையை வாங்கி தொடரை இழந்தது.
2012க்குப் பிறகு உள்ளேயோ, வெளியேயோ டெஸ்ட் விளையாடும் பிரதான நாடுகளில் ஒன்றிற்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது. 2012-ல் நியூஸிலாந்தை வீழ்த்திய பிறகு பிரதான டெஸ்ட் அணிக்கு எதிரான தொடர் வெற்றியாகும் இது.
கிரீன் டாப் விக்கெட் பற்றி வாய் கிழிய எதிரணியினரின் பலவீனங்களைப் பேசும் இங்கிலாந்து ஊடகங்கள், முன்னாள் இந்நாள் வீரர்கள் தங்கள் அணியின் இதே கிரீன் டாப் விக்கெட், வேகப்பந்து வீச்சுக்கு எதிரான சொதப்பல்கள் குறித்து ஆத்மபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பழைய மே.இ.தீவுகளின் ஆவிநிபாதம் அடைந்த மே.இ.தீவுகளாக இந்த மே.இ.தீவுகளும் உள்ளது, இந்திய அணி அங்கு செல்லும்போது பிட்ச்கள் குறித்த பேர-சமரசம் செய்து கொள்ளாமல் இப்படிப் பிட்ச் போட்டால் இந்த சூப்பர் ஸ்டார் இந்திய அணியின் உண்மையான திறமை என்னவென்பது புரிந்து விடும்.
முதல் இன்னிங்சில் 119 ரன்கள் பின் தங்கியிருந்த இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் ஆக்ரோஷமான மே.இ.தீவுகள் பவுலிங்கில் 132 ரன்களுக்குச் சுருண்டது. மீண்டும் கிமார் ரோச் (4-52), கேப்டன் ஜேசன் ஹோல்டர் (4-43) தாயை இழந்தும் அணிக்காக ஆடி அபாரமாக வீசிய அல்சாரி ஜோசப் (2/12) ஆகியோர் இங்கிலாந்துக்கு ஆணியறைய வெற்றி பெற தேவையான 14 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்து தொடரை 2-0 என்று கைப்பற்றியது.
இங்கிலாந்து நேற்றைய தினத்தை பிரகாசமாகவே தொடங்கியது, மே.இ.தீவுகளின் மீதமுள்ள 4 விக்கெட்டுகளை 34 ரன்களுக்கு வீழ்த்தி 306 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது (பேசாமல் இன்னும் கொஞ்சம் ஆடவிட்டிருக்கலாம்... - ஜோ ரூட் மைண்ட் வாய்ஸ்). டேரன் பிராவோ பொறுப்புகளை உணர்ந்து 215 பந்துகள் நின்று அரைசதம் எடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மே.இ.தீவுகள் வீரர் ஒருவர் எடுக்கும் மிகமெதுவான அரைசதம் இதுவே, இவர் கடைசியில் மொயின் அலி (3/62) யிடம் ஆட்டமிழந்தார்.
உணவு இடைவேளைக்கு முன்பாக ஆக்ரோஷமான 4 ஓவர்களை இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஜோ டென்லிக்கு பிராத்வெய்ட் ஒரு கேட்சை விட்டார். இதனையடுத்து டென்லி, பர்ன்ஸ் கூட்டணி 35 ரன்கள் கூட்டணி அமைத்தது. ஆனால் அதன் பிறகு இங்கிலாந்தின் புகழ்பெற்ற சரிவு தொடங்கியது.
மற்றொரு தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ், ஹோல்டரின் உள்ளே வந்த பந்தி கேம்பலிடம் 3வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மென் ஜானி பேர்ஸ்டொ (14), ஹோல்டரின் அபாரமான லைன் பந்து வீச்சை ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து தவறாக இன்ஸ்விங்கரை பெரிய ட்ரைவ் ஆடப்போய் பவுல்டு ஆகி வெளியேறினார், மிகப்பெரிய விக்கெட்.
தாயை இழந்த துக்கத்திலும் படு ஆக்ரோஷமாக வீசிய அல்சாரி ஜோசப், ஜோ ரூட்டை (7) ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார், அப்போதுதான் அவர் உடலை இரண்டாகப் பிளக்கும் ஒரு சற்றே எழும்பிய ஷார்ட் ஆஃப் லெந்த் இன்கட்டரை வீச எஸ் போல் வளைந்த ஜோ ரூட்டின் கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனது, களநடுவர் நாட் அவுட் என்றார், ஆனால் மிகப்பிரமாதமான ரிவியூ செய்தார் ஹோல்டர், அதில் கிளீன் எட்ஜ் தெரிந்தது ஜோ ரூட் தலையைத் தலையை ஆட்டியபடி வேண்டாவெறுப்பாக வெளியேறினார்.
பிறகு டெனில்யும் ஜோசப் இன்ஸ்விங்கரை ஆடாமல் விட நினைத்தார், ஸ்டம்புகளை இழந்தார். பென் ஸ்டோக்ஸ் 11 ரன்களுக்கு நிறைய பீட்டன் ஆனார், வந்தவுடனேயே கடினமான கேட்ச் தவற விடப்பட்டது, கடைசியில் கிமார் ரோச் பந்தில், மிகவும் வெளியே சென்ற பந்தை வாங்கி ஸ்ட்ம்பில் விட்டுக் கொண்டு வெளியேறினார். மொயின் அலி, கிமார் ரோச் ஃபுல் பந்தில் பவுல்டு ஆனார்.
பென் ஃபோக்ஸ், பட்லர் இருவரும் கொஞ்சம் நின்று பார்த்தனர், ஆனால் ஆக்ரோஷத்துக்கு முன் பென் ஃபோக்ஸ் (13), கிமார் ரோச்சின் இன்ஸ்விங்கருக்கு எல்.பி.ஆனார். பட்லரும் 24 ரன்களில் ஹோல்டர் பந்தில் கிரீசில் நின்றபடியே எல்.பி.ஆனார். சாம் கரன் 13 நாட் அவுட் என்று நிற்க ஸ்டூவர்ட் பிராடை கிமார் ரோச் எல்.பி.செய்ய ஜேம்ஸ் ஆண்டர்சன் ஹோல்டரின் வேகம் குறைக்கப்பட்ட பந்தை மிட் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 132 ரன்களுக்கு இங்கிலாந்து காலியானது.
வெற்றி பெறத் தேவையான ரன்களை 2.1 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் எடுத்து புகழ்பெற்ற தொடர் வெற்றியை ஈட்டியது. செயிண்ட் லூசியாவில் இங்கிலாந்து வெற்றி பெற்றேயாக வேண்டும் இல்லையெனில் நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் ஓர் அரிய ஒயிட் வாஷ் செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்ட நாயகன் கிமார் ரோச்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
24 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago