எடுபடாத ஆஸி. பந்துவீச்சு: சதம் அடித்து புஜாரா நங்கூரம்: சிட்னி டெஸ்டில் இந்திய அணி ரன் குவிப்பு

By க.போத்திராஜ்

சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் புஜாராவின சதத்தால், இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 300ரன்களைக் கடந்து வலுவான நிலையை எட்டியுள்ளது.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 130 ரன்களுடனும், விஹரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். புஜாராவின் விக்கெட்டை வீழ்த்த பல பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியும் கடைசி வரை ஆஸ்திரேலிய வீரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ராகுல், மயங்க் அகர்வால் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். இன்றைய போட்டியிலும் ராகுலின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. ஆப்-சைட் விலகிச் செல்லும் பந்தில் எதை அடிக்கலாம், அடிக்கக் கூடாது என்று குழப்பத்துடனே பேட் செய்து எட்ஜ் எடுத்து கேட்ச் ஆனது. ஒட்டுமொத்தத்தில் டெஸ்ட் தொடரில் ராகுல் 100 ரன்களைக் கூட கடக்கவில்லை.

ஹேசல்வுட் வீசிய 2வது ஓவரில் கே.எல்.ராகுல் 9 ரன்களில் வெளியேறினார். 10 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது இந்திய அணி. அடுத்து வந்த புஜாரா, அகர்வாலுடன் சேர்ந்தார்.

உணவு இடைவேளையின்போது 69 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் அதன்பின் ரன் சேர்ப்பில் வேகம் காட்டியது. சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் 96 பந்துகளில் தனது 2-வது அரை சதத்தை எட்டினார். அதன்பின் இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி அடிக்கத் தொடங்கியதால் ஸ்கோர் வேகமெடுத்தது.

நாதன் லயன் வீசிய 32 மற்றும் 34-வது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசி அகர்வால் அசத்தினார். 34-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து அகர்வால் 77 ரன்களில் வெளியேறினார். இவரின் கணக்கில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 116 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த கோலி களமிறங்கி, புஜாராவுடன் சேர்ந்தார். லாபுசாங்கே வீசிய 51-வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய புஜாரா தனது அரை சதத்தை 134 பந்துகளில் நிறைவு செய்தார். ஹேசல்வுட் வீசிய 53-வது ஓவரில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து கோலி 23 ரன்களில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 54 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து ரஹானே களமிறங்கி, புஜாராவுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். 63-வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது.

ஸ்டார்க் வீசிய 71-வது ஓவரில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து 18 ரன்களில் ரஹானே வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 48 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த விஹாரி, புஜாராவுடன் சேர்ந்தார்.

சதத்தை நோக்கி முன்னேறிய புஜாரா, இந்த டெஸ்ட் தொடரில் தனது 3-வது சதத்தை 199 பந்துகளில் நிறைவு செய்தார். அரை சதம் அடிக்க 134 பந்துகள் எடுத்துக்கொண்ட புஜாரா அடுத்த 50 ரன்களை விரைவாக 66 பந்துகளில் சேர்த்துள்ளார்.

சிறப்பாக பேட் செய்த புஜாரா இந்த டெஸ்ட் தொடரில் தனது 3-வது சதத்தை எட்டினார். ஒட்டுமொத்தமாகத் அவர் 18-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார்.

கடந்த 2012-13-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் புஜாரா 438 ரன்கள் சேர்த்திருந்தார். அதை இந்த முறை ஆஸ்திரேலியத் தொடரில் முறியடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிகளில் 200 பந்துகளுக்கு மேல் களத்தில் புஜாரா நிலைத்து நிற்பது இந்த டெஸ்ட் தொடரில் 4-வது முறையாகும். இதற்கு முன் சுனில் கவாஸ்கர் கடந்த 1977-78-ம் ஆண்டு 3 முறை மட்டுமே இதுபோல் 200 பந்துகளைச் சந்தித்து இருந்தார், அந்தச் சாதனையை புஜாரா முறியடித்துள்ளார்.

விஹாரியும், புஜாரவும் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை எளிதாகச் சமாளித்து ஆடினார்கள். இவர்களை ஆட்டமிழக்கச் செய்ய கடைசி வரை போராடியும் முதல் நாள் முடிவில் முயற்சி தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலிய அணியில் புதிய லெக்ஸ்பின்னர் என்று தேர்வு செய்யப்பட்ட லாபுசாங்கே 4 ஓவர்கள் வீசியதில் 25 ரன்கள் வழங்கியதால், அதன்பின் அவருக்கு ஓவர்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், லயன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்