ஆசிய விளையாட்டுப் போட்டி: பயஸ், சானியா, ஜுவாலா விலகல்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து இந்திய முன்னணி டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், வீராங்கனை சானியா மிர்ஸா, பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா ஆகியோர் விலகியுள்ளனர். இதனால் ஆசிய போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பெருமளவில் குறையும்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜூவாலா கட்டா விலகியுள்ளார். அதே நேரத்தில் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் வகையில் தொழில்முறை டென்னிஸ் போட்டியில் விளையாடுவதற்காக சானியா, பயஸ் ஆகியோர் விலகியுள்ளனர்.

இந்தியாவின் மற்றொரு முன்னணி வீரரான சோம்தேவ் தேவ்வர்மன், ஆசிய விளையாட்டில் பங்கேற்க மாட்டேன் என ஏற்கெனவே அறிவித்துவிட்டார். அவர் கடந்த ஆசிய போட்டியில் இந்தியாவுக்கு இரு தங்கப் பதக்கங்களை வென்று தந்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.

பயஸ், சானியா விலகல் குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்க தலைவர் அனில் கண்ணா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆண்டு இறுதியில் நடைபெறும் உலக மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற நமது வீரர்கள் தரவரிசையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில் அவர்கள் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அப்போது தான் தரவரிசையில் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். அப்போதுதான் ஆண்டு இறுதியில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று தேசத்துக்கு பெருமை தேடித் தரமுடியும் என்றார்.

முன்னணி வீரர்கள் விலகியுள்ள நிலையில் அவர்களுக்கு பதிலாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் அடுத்த நிலை வீரர்கள் யாரெல்லாம் களமிறங்குவார்கள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

இரட்டையர் பிரிவு தரவரிசையில் லியாண்டர் பயஸ் இப்போது 35-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். எனவே அடுத்து நடைபெறவுள்ள மூன்று சர்வதேச டென்னிஸ் போட்டியில் அவர் விளையாட முடிவு செய்துள்ளார். இந்த போட்டிகள் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறும் அதே நாள்களில் நடைபெறவுள்ளன. சமீபத்தில் முடிவடைந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா, பிரேசிலின் சோரஸுடன் இணைந்து பட்டம் வென்றார். அதே நேரத்தில் மகளிர் இரட்டையர் பிரிவில் தனது ஜோடி காரா பிளாக்கை தக்கவைக்க சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறார்.

ஜூவாலா காயம்

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து விலகியுள்ளது இந்தியாவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஜூவாலா கூறியது:

ஆசிய போட்டியில் பங்கேற்பதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தேன். எனினும் காலில் வலி ஏற்பட்டது. பரிசோதனையின் போது காலில் காயம் தீவிரமடைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இரு வாரங்கள் வரை ஓய்வெடுக்க வேண்டுமென்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

எனவே வேறு வழியின்றி ஆசிய போட்டியில் இருந்து விலகுகிறேன். இதுவரை காயம் காரணமாக போட்டியில் இருந்து ஒருபோதும் விலகியது இல்லை என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE