இந்திய அணியின் ரகசியம் இதுதான்.. ஆனால்... : இந்தியப் பலவீனத்தைச் சரியாகப் பிடித்த ட்ரெண்ட் போல்ட்

நாளை 2வது ஒருநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில் இந்த இந்திய அணியை முதல் போட்டியில் சரியாகப் புரிந்து கொள்ளாமல் கேன் வில்லியம்சன் கூறியது போல் இறங்குபோதெல்லாம் 350 என்ற எண்ணத்தி இறங்கி அதில் பாதி ரன்னில் மடிந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவர்களுக்கு கடுப்பேற்றும் விதமாக தோல்வி கண்டது.

 

இன்றைய ஒருநாள் போட்டி அணிகளில் தவன், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய டாப் மூவர் கூட்டணி அதிரடிக் கூட்டணியாகும், அபாயகரமானக் கூட்டணியாகும். மூவரையும் ஒன்றுமில்லாமல் வீழ்த்துவது கடினமான செயலே என்பதை சில காலங்களாகப் பார்த்து வருகிறோம், சிட்னியில் மட்டும் 4/3 என்று ஆனது. மற்றபடி மூவர் கூட்டணி அபாயக் கூட்டணியே.

 

இதனையடுத்து நாளைய போட்டியில் ஆதிக்க இந்திய அணியை கவிழ்ப்பது எப்படி என்பதில் ட்ரெண்ட் போல்ட் புரிதல் அளவில் கச்சிதமாக தெரிவித்துள்ளார், அவர் கூறியதாவது:

 

“ஒரு பவுலிங் யூனிட்டாக நாங்கள் இந்திய டாப் ஆர்டரைக் குலைக்க முயற்சி செய்வோம். இவர்களை காலி செய்து விட்டால் மிடில் ஆர்டர் வரிசைக்கு அழுத்தம் அதிகரிக்கும். இதுதான் இந்திய அணியின் ரகசியமும் கூட.  முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கழற்றி விட்டால் அது அணியின் மற்ற வீரர்களுக்கு ஏற்படுத்தும் நெருக்கடியை நாங்கள் அறிவோம்.

 

அன்று இந்தியா எங்களை கடுமையாகத் தோற்கடித்தது. நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்பதை அறிந்தேயிருக்கிறோம்.  பேட்ஸ்மென்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டு நல்ல இலக்கை நிர்ணயிப்பார்கள் என்று நம்புகிறோம். அந்த நல்ல இலக்கிலிருந்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

 

முந்தைய போட்டிகளில்  நல்ல தொடக்கம் என்று அடித்தளம் நன்றாக அமைப்போம், இந்த வடிவத்தில் தொடக்கத்தில் விரைவில் விக்கெட்டுகள் விழுந்தால் அது நம்மைக் கொன்று விடும். கூட்டணியாக பேட் செய்து ஆட்டத்தை இன்னும் கூடுதல் ஓவர்களுக்கு இட்டுச் சென்றால் கடைசி ஓவர்களில் நாங்கள் என்ன செய்வோம் என்பது தெரிந்ததே.

 

கடந்த போட்டியில் பிட்சை நாங்கள் சரியாகக் கணிக்கவில்லை. ஆனால் மவுண்ட் மாங்குனியில் நல்ல பிட்ச் போடப்பட்டுள்ளது.  இந்திய டாப் ஆர்டரை செட் ஆகவிட்டால் கடினம், எனவே அவர்களை விரைவில் பெவிலியன் அனுப்ப வேண்டும். அவர்களும் மனிதர்கள்தான் தவறிழைப்பார்கள். தவணை 20 ரன்களில் அன்று வீழ்த்தியிருக்க வேண்டும், ஆனால் வாய்ப்பைக் கோட்டை விட்டோம்”

 

இவ்வாறு கூறினார் ட்ரெண்ட் போல்ட்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE