புஜாராவின் மந்தமான ஆட்டத்தினால் இந்தியா வெற்றி வாய்ப்பை இழக்கவே வாய்ப்பு: ரிக்கி பாண்டிங்

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் புஜாரா 319 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தது, இந்தப் பிட்சில் மந்தமான ஆட்டம் என்றும் இவரது இந்த மெதுவான ரன் எடுப்பினால் இந்திய அணி வெற்றி வாய்ப்பைத் தவற விட வாய்ப்புகள் அதிகம் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

 

சுமார் 170 ஒவர்கள் ஆடி இந்திய அணி 443 ரன்களில் டிக்ளேர் செய்துள்ளது, ரன் விகிதம் ஓவருக்கு 3 என்ற விகிதத்தை இன்னிங்ஸ் முழுதுமே எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

 

“இந்தியா இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற்றால் புஜாரா இன்னிங்ஸ் கிரேட் இன்னிங்ஸ் ஆக அமையும், இல்லையெனில், ஆஸ்திரேலியாவை இருமுறை முழுதும் ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் கால அவகாசம் இல்லாமல் போனால் உண்மையில் அவர்கள் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டதாகவே அர்த்தம்.

 

புஜாரா கிரீசில் நின்றாலே இந்திய அணி ரன் விகிதத்தை அதிகரிக்க கஷ்டப்படுகிறது என்று நினைக்கிறேன். அவர் இன்னொரு சதம் எடுத்துள்ளார், இந்தத் தொடரின் 2வது சதம், ஆகவே அவர் நன்றாக ஆடுகிறார், அவுட் ஆவது போல் தெரியவில்லை. ஆனால் அவர் ரன் எடுப்பது பற்றி கவலையில்லாமல் ஒரு குமிழியில் சிக்கிக் கொண்டு விட்டார்.

 

மற்ற வீரர்கள் இந்திய அணியில் ஸ்ட்ரோக் மேக்கர்கள், அடித்து ஆடக்கூடியவர்கள், ஆனால் அவர்களும் சொதப்பினால் ரன் விகிதம் ஓவருக்கு 2 ரன்களைத் தாண்டவே தாண்டாது. இந்த ரன் விகிதத்தில் டெஸ்ட் போட்டிகளில் வெல்வது கடினம். குறிப்பாக இந்த மெல்போர்ன் போன்ற மட்டையாட்டக்களங்களில்.

 

புஜாரா ஆட்டமிழந்த பிறகும் கூட இந்திய பேட்டிங் எந்த குறிக்கோளை நோக்கிச் சென்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என்ன சாதிக்க நினைத்தார்கள் என்பதும் தெரியவில்லை. அதாவது இந்த டெஸ்ட்டில் ஒருமுறைதான் பேட் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் அதற்கான ஆட்டத்தையும் ஆடவில்லையே!

 

நிச்சயம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் நீண்ட நேரம் பேசியிருப்பார்கள், கடினமாகப் பேசியிருப்பார்கள், ஆனால் ஆடிய விதம் எங்களுக்கு ஆச்சரியகரமாகவே இருந்தது.

 

விராட் கோலி அவுட் ஆவதற்கு முந்தைய பந்தில் அடித்த மிட் ஆன் புல் ஷாட் உண்மையில் அருமையான புல்ஷாட் ஆகும், அப்போது அவர் சுதந்திரமாக ஆட ஆரம்பித்திருந்தார். அதாவது அப்போது காட்டப்பட்ட தீவிரத்தை நான் குறிப்பிடுகிறேன், கோலிக்கு எதிராக இன்னும் ஷார்ட் பிட்ச் பந்துகளை அதிகம் வீச வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

 

அவர் இறங்கியவுடன் கிராஸ் பேட் ஷாட்களை அதிகம் ஆடுவதில்லை. எனவே மீதமுள்ள இன்னிங்ஸ்களிலும் அவருக்கு இறங்கியவுடன் ஷார்ட் பிட்ச் பவுலிங் சோதனைகளை ஆஸ்திரேலிய பவுலர்கள் அளிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

 

ஷார்ட் பிட்ச் பந்துகள் கோலி, புஜாராவை வித்தியாசமாக ஏதாவது செய்யத் தூண்டும், இல்லையெனில் அவர்கள் சவுகரியமாக நிலையில் ஆடிவருகின்றனர், ரிஸ்க் எடுப்பதில்லை, அவர்கள் விருப்பத்துக்கு ஆடிவருகின்றனர், எனவே அவர்களை வித்தியாசமாக ஏதாவது செய்ய வைத்து தொடக்கத்திலேயே வீழ்த்தப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்”

 

இவ்வாறு கூறினார் ரிக்கி பாண்டிங்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE