எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் 4வது ஒருநாள் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி நாளை இங்கிலாந்துக்கு எதிராகக் களமிறங்குகிறது.
முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தாக, அடுத்த 2 ஒருநாள் போட்டிகளில் இந்தியா, இங்கிலாந்துக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஸ்டூவர்ட் கூறியது போல் “ஒருநாள் கிரிக்கெட் பாடம் எடுத்தது”.
இந்த நிலையில் நாளை 4வது ஒருநாள் போட்டியில் வென்று ஒருநாள் தொடரை இங்கிலாந்தில் கைப்பற்றும் முயற்சியில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
இந்திய அணி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாடியதோ அதேபோல் இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நாம் மொயீன் அலி என்ற லாலி பாப் பவுலரிடம் திணறினோம், அவர்கள் சுரேஷ் ரெய்னாவின் நேர் நேர் தேமா பந்துகளில் கூட விக்கெட்டைப் பறிகொடுக்கின்றனர்.
அலிஸ்டர் குக், அலெக்ஸ் ஹேல்ஸ் இரண்டு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தாலும், கேப்டன் குக் தொடக்க வீரராகக் களமிறங்கக் கூடாது. கேரி பாலன்ஸை தொடக்கத்தில் களமிறக்க வேண்டும். அல்லது ஜோஸ் பட்லரைக் களமிறக்க வேண்டும்.
அணித் தேர்வில் தோனி தவறு செய்தது போலவே குக்கும் ஒருநாள் போட்டிகளில் தவறு செய்கிறார். ஸ்டோக்ஸ் என்பவரை எதற்காக அணியில் வைத்திருக்கிறார் என்பது புரியவில்லை. அதே போல் மொயீன் அலியை ஒருநாள் போட்டிகளில் களமிறக்கினால் அவருக்கு ஒரு கூடுதல் ஸ்பின் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் குக்கின் கேப்டன்சியும் கற்பனை வறட்சி கொண்டதாக உள்ளது. 3வது ஒரு நாள் போட்டியில் ராயுடு, ரெய்னா ஜோடி சேர்ந்த போது தாக்குதல் முறையை குக் கடைபிடித்திருக்க வேண்டும். ஆனால் அவர் மிகவும் வழக்கமாக, சாதாரணமாக இருவரையும் ஆடவிட்டு வேடிக்கைப் பார்த்தார்.
ஒருநாள் கிரிக்கெட் என்றாலே எட்டிக்காயாக கசக்கிறது இங்கிலாந்து அணிக்கு. மோர்கனிடம் கேப்டன்சி கொடுத்திருந்த போது சற்று பரவாயில்லை என்று அதன் அணுகுமுறை இருந்தது.
2013ஆம் ஆண்டு நியூசிலாந்தில் ஒருநாள் போட்டியில் வென்ற பிறகு முக்கியத்துவம் வாய்ந்த எந்த வெற்றியையும் அந்த அணி பெற்றுவிடவில்லை. மேலும் நியூசிலாந்து அதன் பிறகு இங்கிலாந்து வந்து பழி தீர்த்தது.
2014 தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸை வென்ற பிறகு, அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளை வென்றது இங்கிலாந்து அவ்வளவே. அதன் பிறகு ஆஸ்திரேலியாவிடம் தோற்றது, இலங்கையிடம் தோற்றது.
இந்திய அணியின் வெற்றிகளுமே டெஸ்ட் தோல்விகளுக்குப் பிறகு ஆறுதல் அளித்தாலும் இந்திய அணியின் ஆட்டம் ஒன்றும் பெரிதாக முன்னேற்றம் கண்டுவிடவில்லை.
தொடக்க வீரர்கள் ஒரு நல்ல தொடக்கத்தை நியூசிலாந்திலும் தென் ஆப்பிரிக்காவிலும் சிறந்த பந்து வீச்சிற்கு எதிராக கொடுக்க முடியவில்லலை தோனியும் கோலியும் மிடில் ஆர்டரில் ஆடியதுதான்.
ரோகித் சர்மா காயமடைந்து வெளியேறியது ரஹானேயிற்கு வாய்ப்பைக் கொடுத்தாலும், ஷிகர் தவனின் விட்டேத்தியான, அலட்சிய பேட்டிங் உலகக் கோப்பை போட்டிகளுக்குத் தயார் படுத்திக் கொள்வதாகக் கூறிக்கொள்ளும் இந்திய அணிக்கு பெரிய தலைவலியே.
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, தற்போது இங்கிலாந்தில் 3 ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவனின் ஸ்கோர் இதோ: 12, 0, 32, 12, 28, 9, 11, மற்றும் 16.
இப்போது பிரச்சினை என்னவெனில் உலகக் கோப்பைப் போட்டிகளுக்குள் ரோகித் காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதி பெற்றால் அவரை மீண்டும் தொடக்கத்தில் களமிறக்க வேண்டியிருக்கும். இந்தியாவில் மட்டும்தான் காயத்திற்குப் பிறகு நேராக தேசிய அணியில் விளையாடும் விசித்திர நடைமுறை இருந்து வருகிறது. மற்ற நாடுகளில் அவர் மீண்டும் தனது பேட்டிங்கை நிரூபித்த பிறகே அணிக்குள் வர முடியும். மேலும் அவர் வந்தால் ரஹானே 4ஆம் நிலைக்குத் திரும்புவார்.
நன்றாக விளையாடி ஒவ்வொரு முறையும் நிரூபிக்கும் அம்பாத்தி ராயுடு கதி அதோகதிதான். எப்படி நன்றாக ஆடியும் ராபின் உத்தப்பா தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறாரோ அதே போல் ராயுடு ஓரங்கட்டப்படுவார்.
ரோகித் காயமடைந்தால் அந்த இடத்தில் ராபின் உத்தப்பாவையே அழைத்திருக்க வேண்டும், ஆனால் முரளி விஜய்யை அழைத்ததன் பின்னணி என்னவென்று நாம் கேட்க வேண்டியுள்ளது.
முரளி விஜய்யின் ஒருநாள் கிரிக்கெட் திறமை என்னவென்று இதுவரை வெளிவரவில்லை. அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ளூர் போட்டிகளில் ஏதாவது குறிப்பிடத் தகுந்த சாதனை நிகழ்த்தியுள்ளாரா என்றால் அதுவும் இல்லை. ராபின் உத்தப்பாவை ஊறுகாய் போல வங்கதேசத் தொடருக்குப் பயன்படுத்தி விட்டு பிறகு தூக்கி எறிந்தனர்.
எனவே இந்த 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்தை வீழ்த்திவிட்டால் அதனை வைத்து இந்தியா உலகக் கோப்பைக்குத் தயாராகிவிட்டது என்றெல்லாம் நாம் நப்பாசைக் கொள்ளலாகுமா என்பதே கேள்வி.
வேகப்பந்து வீச்சில் நிச்சயம் முன்னேற்றம் தேவை. அப்போதுதான் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடர் அதன் பிறகு வரும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சோபிக்க முடியும். வெறும் ஸ்பின் ஜாலத்தை வைத்துக் கொண்டு அங்கு ஒன்றும் செய்ய முடியாது.
எனவே தோனி வேகப்பந்தை மேம்படுத்தும் முயற்சியை இந்தத் தொடரிலிருந்தே செய்தாக வேண்டும். அதனை விடுத்து இந்தத் தொடரில் பெற்ற வெற்றிகளின் மிதப்பில் வாளாயிருந்துவிடக் கூடாது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago