இந்திய கிரிக்கெட்டின் ‘கிரேட்டஸ்ட்’ இன்னிங்ஸ்: லஷ்மணின் 281 குறித்து ராகுல் திராவிட் நெகிழ்ச்சிப் பகிர்வு

By செய்திப்பிரிவு

2001 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கொல்கத்தாவில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைவிதியை மாற்றியமைத்த மாபெரும் இன்னிங்ஸான 281 ரன் இன்னிங்ஸை ஆடியபோது ராகுல் திராவிட் அவருடன் விளையாடினார்.

 

பெங்களூருவில்  “281 and beyond” என்ற புத்தக அறிமுக நிகழ்ச்சியில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே, லஷ்மண், ஜவகல் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

லஷ்மண் கூறியபோது, “5 நகரங்களில் இந்தப் புத்தகத்தை வெளியிட ஏற்பாடு செய்ததன் காரணமே என்னுடைய பயணத்தில் ஈடுபட்ட மற்றவர்களையும் இதில் சேர்ப்பதற்காகவே.  இங்கு பிரசன்னா சார், விஸ்வநாத் சார், உலகக்கோப்பை வெற்றி வீரர் ராஜர் பின்னி சார் ஆகியோர் இங்கு இருப்பது என் பாக்கியம். 1983 உலகக்கோப்பை வெற்றிதான் என் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்தியது, என் வாழ்க்கையிலும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்துவேன் என்ற உத்வேகத்தை என்னிடத்தில் 1983 உலகக்கோப்பைதான் ஏற்படுத்தியது” என்றார்.

 

“இந்திய கிரிக்கெட்டில் அதுவரை ஆடாத கிரேட்டஸ்ட் இன்னிங்ஸை நான் மிக அருகிலிருந்து பார்த்தேன்.  அந்த இன்னிங்ஸ் விளையாடப்பட்ட விதம், சூழ்நிலை, அந்த இன்னிங்ஸ் இந்திய கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கம்  என்ற வகையில் இந்திய கிரிக்கெட்டின் கிரேட்டஸ்ட் இன்னிங்ஸ் அது.

 

பொதுவாக என் பேட்டிங்கையே நான் மீண்டும் பார்க்க விரும்புவதில்லை. ஆனால் 281 இன்னிங்ஸ் என்னிடம் காணொலியாக உள்ளது.  அன்று லஷ்மண் ஆடிய சில ஷாட்கள் அப்பப்பா ஆச்சரியகரமானது.  அந்த இன்னிங்ஸ்தான் அவர் யார் என்று காட்டியது.  ஆனால் அவருடன் அன்று நான் ஆடி ஏற்படுத்திய கூட்டணி எங்கள் நட்பை ஆழப்படுத்தியது” என்றார் ராகுல் திராவிட்.

 

நிகழ்ச்சியில் ஜவகல் ஸ்ரீநாத்  ஜாலியாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார், லஷ்மணுக்குப் பிடித்த பாஸ்தா,  லஷ்மண் அறிமுகமான போது அவரை ராகிங் செய்தது.  மே.இ.தீவுகளுக்கு செல்லும் இந்திய அணி வீரர்களில் வெஜிடேரியன் உணவு வேண்டுவோர் அங்குள்ள இந்தியர் வீடுகளுக்கு அழையா விருந்தாளியாகச் சென்றது என்று ஸ்ரீநாத் கலக்கினார்.

 

அனைத்திற்கும் மேலாக லஷ்மண், திராவிட் ஸ்லிப்பில் நின்ற போது பவுலர்களுக்கு ஏற்படும் நம்பிக்கை பற்றி ஸ்ரீநாத் குறிப்பிட்டார், உண்மையில் இந்த நிகழ்வு 281 அண்ட் பியாண்ட்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE