இத்தனையாண்டுகள் இந்தியாவுக்குச் சென்றுள்ளோம் ஆனால் பவுன்ஸ் பிட்ச் போட்டதேயில்லை: ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

ஆஸ்திரேலிய கிரவுண்ட்ஸ்மேனிடம் அந்த அணியின் பயிற்சியாளரோ, கேப்டனோ தாக்கம் செலுத்தி பிட்சை இப்படி உருவாக்க்கு என்று கூற முடியாது. அது அங்கு பிரச்சினையாகி விடும், ஆகவேதான் பிட்ச் தயாரிப்பாளருக்கு அங்கு முழு சுதந்திரம்.

 

வங்கதேச அணி அங்கு சென்று ஆடினால் கூட அந்த அணியை துவைத்து எடுக்கும் பிட்சை ஆஸ்திரேலியா தயாரிக்காது, அவர்களும் சரிசம சவாலாகத் திகழ வாய்ப்பளிக்கும்.  அந்நாட்டு ரசிகர்கள் அத்தகைய கிரிக்கெட்டைத்தான் விரும்புவார்கள்.  வெற்றி தோல்வி அங்கு 2வதுதான், ஆனால் பேட்டுக்கும் பந்துக்கும் சரியான சவால் இருக்க வேண்டும் என்பதே அங்கு எதிர்பார்ப்பாகும்.

 

ஆனால் இங்கோ முதல் பந்திலிருந்து பிட்சுக்கு வெளியே குத்தி ஸ்டம்பைப் பெயர்க்க வேண்டும், அப்படிப்பட்ட குழிபிட்ச்தான் வேண்டும் என்று கேப்டன்களாலும், பயிற்சியாளராலும் கேட்கப்படுகிறது, இப்போது விராட் கோலி கேப்டன்சியில்தான், அதுவும் பலவீனமான அணிகளான மே.இ.தீவுகள், இலங்கை அணிகளுக்கு எதிராக பவுன்ஸ் பிட்ச்சை கேட்கிறார். இதே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இங்கு வந்து ஆடும்போது பவுன்ஸ் பிட்ச் கேட்பாரா என்பது தெரியவில்லை. இப்போதைய நம் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக் கொண்டு உண்மையில் உலகின் நம்பர் 1 அணியானால் உள்ளூரிலும் வேகப்பந்து வீச்சு ஆட்டக்களமே அமைக்கப்படவேண்டும். ஆனால் இங்குள்ள ‘ஸ்டார்’ பேட்ஸ்மென்களுக்கு அது சிக்கலாகி விடும் என்பதால் பெரும்பாலும் பிளாட் பிட்ச் அல்லது குழிபிட்ச் தயாரிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஸ்மித்,  வார்னர் இருந்தாலுமே பும்ரா&கோ-வை சமாளித்திருக்குமா என்பது ஐயமே.

 

இந்த கருத்துகளை எதிரொலிக்கும் விதமாக ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய தோல்வி குறித்து கூறும்போது, “எனக்கு பெர்த்தில் ஆடப்பிடிக்கும், அடிலெய்டில் ஆடப்பிடிக்கும் ஏனெனில் அங்கு பிட்சில் பந்துகள் எழும்பும், வேகம் காட்டும்.  இத்தனையாண்டுகள் இந்தியாவுக்குச் சென்று ஆடியுள்ளோம் பவுன்ஸ் பிட்ச் அங்கு போட்டதேயில்லை.  அங்கு பந்து சதுரமாகத் திரும்பும் ஸ்பிம் பிட்ச்கள்தான் நமக்குக் கிடைக்கும். ஆகவே ஆஸ்திரேலியாவிலும் நம் வழிக்கு உகந்தவாறு பிட்ச் தயாரிக்க வேண்டும்.

 

சிட்னி டெஸ்ட்டுக்கு என்ன மாதிரியான பிட்ச் கிடைக்கும் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறோம், எங்களுக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை, கொஞ்சம் சீரற்ற தன்மையே நிலவுகிறது. உள்நாட்டு கிரிக்கெட் சமீபத்தில் நடந்தது, ஆனால் அப்போது அது தட்டையான உயிரற்ற பிட்சாகத்தான் இருந்தது. ஆனால் டெஸ்ட்டுக்கு அப்படியிருக்காது என்று நம்புகிறோம்.  மெல்போர்னில் கடைசி 2 நாட்கள் இரு அணிகளுக்கும் சவாலாக இருந்தது, காரணம் பிட்ச் உடைந்து விட்டது.

 

அணித்தேர்வுக்கு முன்பாக நிச்சயம் பிட்ச் எப்படியிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.  பிட்ச் ஸ்பின் ஆகுமா அல்லது பசுந்தரைப் பிட்சா என்பது தெரியவில்லை.  3 நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு துல்லிய ஸ்பின்னரை வைத்துள்ளோம் எனவே பவுன்ஸை எதிர்பார்க்கிறோம்” என்றார் ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE